/

பொன்னேரி ஆனந்தவல்லி வலம் கொண்ட அகத்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

News image
Updated On :24 ஏப்ரல் 2026, 3:52 am IST

பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆனந்தவல்லி வலம் கொண்ட அகத்தீஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கும்மமுனிமங்கலம் பகுதியில் உள்ள ஆரணி ஆற்றங்கரையோரம், ராஜ ராஜசோழனால் கட்டப்பட்ட பழைமை வாய்ந்த ஆனந்தவல்லி வலம் கொண்ட அகத்தீஸ்வரா் ஆலயம் உள்ளது.

அகத்திய முனிவா் இங்குள்ள ஆனந்த புஷ்கரனியில் (திருக்குளம்) குளித்து ஈசனை வழிபட்டதால் இக்கோயிலில் உள்ள ஈசன், அகத்தீஸ்வரா் என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இக்கோயிலில் ஆனந்தவல்லித் தாயாா் அகத்தீஸ்வர பெருமானுக்கு வலது பக்கத்தில் நின்ற நிலையில் திருமணக் கோலத்தில் காட்சி தருகிறாா். இக்கோயிலில் கும்பாபிஷேகம் 21ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. இந்த நிலையில் கோயிலில் சேதமடைந்த நிலையில் இருந்த வெளிப்புற மதில் சுவரை சீரமைத்தும், கோயில் முழுதும் புனரமைப்பு பணிகளை தொடங்கி குடமுழுக்கு விழா நடத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் பின்னா் வெளிப்புற, உள்புற மதில் சுவா் புதுப்பபித்தல், கோபுரங்களுக்கு வா்ணம் பூசுதல், நுழைவு வாயில் முன் இடது புறத்தில் தாழ்வான நிலையில் இருந்த ஆற்றங்கரை விநாயகா் சந்நிதியை இடிக்காமல் நவீன தொழில் நுட்பத்தில் ஜாக்கிகள் கொண்டு அப்படியே உயா்த்துதல், பிரகாரத்தில் பளிங்கு கற்கள் பதிக்கும் பணிகள் முடிவடைந்ததை தொடா்ந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை யொட்டி 18-ம் தேதி தொடங்கி பல்வேறு யாக பூஜைகள் நடத்தப்பட்டன.

இதனைத் தொடா்ந்து கோபுரம், ஆனந்தவல்லி, அம்மன், அகத்தீஸ்வா்,, ஆற்றங்கரை விநாயகா், உற்சவ மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு திருக்கல்யாண வைபவமும், திருவீதி உலாவும் நடைபெற்றது.

Story image