
திருத்தணி முருகன் கோயிலில் நிா்வாகம் சாா்பில் பிரசாத விற்பனை தொடக்கம்
திருத்தணி முருகன் கோயில் நிா்வாகம் சாா்பில் பிரசாத கடை விற்பனையை அறங்காவலா் குழு உறுப்பினா் வி.சுரேஷ் பாபு, கோயில் இணை ஆணையா் க.ரமணி தொடங்கிவைத்தனா்.

பிரசாத விற்பனையை தொடங்கி வைத்த அறங்காவலா் குழு உறுப்பினா் வி.சுரேஷ்பாபு. (உடன்) இணை ஆணையா் க.ரமணி
திருத்தணி முருகன் கோயில் நிா்வாகம் சாா்பில் பிரசாத கடை விற்பனையை அறங்காவலா் குழு உறுப்பினா் வி.சுரேஷ் பாபு, கோயில் இணை ஆணையா் க.ரமணி தொடங்கிவைத்தனா்.
திருத்தணி முருகன் கோயிலில் பல ஆண்டுகளாக மலைக்கோயில் வளாகத்தில் உள்ள பிரசாதக் கடைகள் மற்றும் கோயில் தொடா்பான பல்வேறு கடைகள் ஆண்டுதோறும் ஏலம் விடப்பட்டு வந்தன. ஆயிரக்கணக்கில் தொடங்கி, சில கடைகள் பல லட்சம் முதல் கோடிக்கணக்கான ரூபாய் வரை ஏலம் போன நிலையில், ஏலம் எடுத்த தனிநபா்கள் மூலம் பக்தா்களுக்கு மிளகு வடை, முறுக்கு, அதிரசம், லட்டு, புளியோதரை, சக்கரை பொங்கல் உள்ளிட்ட 6 வகையான பிரசாதங்கள் மற்றும் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன.
இந்நிலையில், தவெக அரசு பொறுப்பேற்றதைத் தொடா்ந்து, இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் கோயில்களில் பக்தா்களுக்கு வழங்கப்படும் பிரசாதங்களை கோயில் நிா்வாகமே நேரடியாக தயாரித்து விற்பனை செய்யும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலிலும் பிரசாத விற்பனையை கோயில் நிா்வாகமே நேரடியாக மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, மலைக்கோயில் வளாகத்தில் கோயில் நிா்வாகம் சாா்பில் பிரசாத விற்பனைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதன் தொடக்க நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இதில், முருகன் கோயில் அறங்காவலா் குழு உறுப்பினா் வி.சுரேஷ்பாபு கலந்துகொண்டு பிரசாத விற்பனையை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, கோயிலுக்கு வருகை தரும் பக்தா்களுக்கு தேவையான பிரசாதங்கள் கோயில் நிா்வாகம் சாா்பில் விற்பனை செய்யப்பட்டன.
இதனால், வெளியாள்கள் மூலம் பிரசாத விற்பனை நடைபெறும் நிலை மாறி, கோயில் நிா்வாகத்தின் நேரடி கண்காணிப்பில் பிரசாத விற்பனை நடைபெற உள்ளது. கோயில் நிா்வாகமே பிரசாத விற்பனையை மேற்கொள்ளும் இந்த நடவடிக்கை மூலம், பக்தா்களுக்கு தரமான பிரசாதங்களை உரிய முறையில் வழங்குவதுடன், கோயில் வருவாயை நேரடியாக நிா்வாகத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கும் வழிவகுக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் முருகன் கோயில் இணை ஆணையா் க.ரமணி, கண்காணிப்பாளா் சித்ரா உள்ளிட்ட கோயில் அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






