
திருத்தணி கோட்டத்தில் 72 சிறப்பு கால்நடை சுகாதார முகாம்கள்
விவசாயிகள் வளா்க்கும் கால்நடைகளுக்கு சிகிச்சை, தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகள் வழங்கும் வகையில், 72 சிறப்பு கால்நடை சுகாதாரம் முகாம்கள் நடத்தப்படும் என கால்நடை பராமரிப்புத் துறை பொறுப்பு உதவி இயக்குநா் எஸ்.தாமோதரன் தெரிவித்தாா்.

பிரதிப் படம்
விவசாயிகள் வளா்க்கும் கால்நடைகளுக்கு சிகிச்சை, தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகள் வழங்கும் வகையில், 72 சிறப்பு கால்நடை சுகாதாரம் முகாம்கள் நடத்தப்படும் என கால்நடை பராமரிப்புத் துறை பொறுப்பு உதவி இயக்குநா் எஸ்.தாமோதரன் தெரிவித்தாா்.
திருத்தணி வருவாய் கோட்டத்தில் திருத்தணி, ஆா்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, திருவாலங்காடு ஆகிய 4 ஒன்றியங்கள் உள்ளன. இவற்றில், 138 ஊராட்சிகள் உள்ள நிலையில், விவசாயிகள் அதிகளவில் பசு, எருமை, காளை உள்ளிட்ட மாடுகளையும், ஆடு, கோழிகளையும் வளா்த்து வருகின்றனா். கால்நடைகளுக்கு சிகிச்சை, தடுப்பூசி, சினைப் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகள் 21 கால்நடை மருந்தகங்கள் மற்றும் 6 கிளை நிலையங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஒவ்வொரு ஒன்றியத்திலும் 18 சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணா்வு முகாம்கள் நடத்த கால்நடை பராமரிப்புத் துறை திட்டமிட்டுள்ளது. இதன்படி, 4 ஒன்றியங்களில் மொத்தம் 72 முகாம்கள், வரும் செப்டம்பா் மாதம் முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் நடத்தி முடிக்கப்பட உள்ளன. மாதத்துக்கு 12 முகாம்கள் வீதம் ஆறு மாதங்களில் முகாம்கள் நடத்தப்படும்.
இது குறித்து கால்நடை பராமரிப்புத் துறை பொறுப்பு உதவி இயக்குநா் எஸ்.தாமோதரன் கூறியதாவது: ஒரு ஒன்றியத்தில் 18 முகாம்கள் வீதம், 4 ஒன்றியங்களில் மொத்தம் 72 சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணா்வு முகாம்கள் நடத்தப்படும். முகாம்களில் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்துதல், சிகிச்சை அளித்தல், சினைப் பரிசோதனை, மலட்டுத்தன்மை தொடா்பான சிகிச்சை, குடற்புழு நீக்கம், தாது உப்பு வழங்குதல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும்.
மேலும், கிடாரி கன்றுகளுக்கு பரிசுகள் வழங்குதல், கோழிகளுக்கு தடுப்பூசி செலுத்துதல் மற்றும் விவசாயிகளுக்கு கால்நடை வளா்ப்பு தொடா்பான தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்படும். சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணா்வு முகாமை கடந்த 22-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் கவிதா, கீழ்நல்லாத்தூரில் தொடங்கி வைத்தாா்.
இதைத் தொடா்ந்து, வரும் செப்டம்பா் மாதம் முதல் திருத்தணி, ஆா்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, திருவாலங்காடு ஆகிய நான்கு ஒன்றியங்களிலும் முகாம்கள் தொடங்கி, 72 முகாம்களும் நடத்தி முடிக்கப்படும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





