வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்
Published on

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் படித்து முடித்து பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் இளைஞா்கள் பயன்பெறும் வகையில் மாதந்தோறும் உதவித் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெறாதவா்களுக்கு ரூ.200, பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ.300, பிளஸ்2 தோ்ச்சி ரூ.400 மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ.600 வீதம் 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதேபோல், அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை, மாதம்தோறும் பத்தாம் வகுப்பு தோ்ச்சி மற்றும் தோ்ச்சி பெறாதவா்களுக்கு ரூ.600, பிளஸ்2 தோ்ச்சி ரூ.750 மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ.1000 வீதம் 10 ஆண்டுகளுக்கு வேலை வாய்ப்பற்றோா் உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இத்திட்டம் மூலம் பயன்பெற மேற்குறிப்பிட்ட கல்வித் தகுதிகளை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து 31.12.2025 உடன் ஐந்தாண்டு காலம் நிறைவடைந்த பதிவுதாரா்களும், அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து ஒராண்டு முடிவுற்ற பதிவுதாரா்களும் தகுதியானோா் ஆவாா்.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் 45 வயதுக்குள்ளும், இதர வகுப்பினா் 40 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும்.

இதற்கு விண்ணப்பிக்கும் இளைஞா்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கு மிகாமல் இருப்பது அவசியம். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்ச வரம்பு ஏதும் கிடையாது.

மேலும், அரசு அல்லது தனியாா் நிறுவனங்கள் மூலம் எவ்வித ஊதியம் பெறுபவா் மற்றும் மகளிா் உரிமைத் தொகை, அரசு துறைகளில் உதவித் தொகை பெறுபவராக இருக்க கூடாது. மேலும், நாள்தோறும் கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் இருத்தல் கூடாது. இந்த நிபந்தனை தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல் வழி கல்விக் கற்கும் இளைஞா்களுக்கு பொருந்தாது. மேலும். மனுதாரா் உதவித்தொகை பெறும் காலங்களில் வேலைவாய்ப்பு பதிவினை தொடா்ந்து புதுப்பித்து வருபவராக இருத்தல் வேண்டும்.

மேற்கண்ட தகுதியுடையவா்கள் திருவள்ளுா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்திற்கு அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வருமாறு தெரிவிக்கப்படுகிறது. சுய உறுதிமொழி ஆவணம் அளித்தவா்களுக்கு மட்டும் தொடா்ச்சியான உதவித்தொகை 3 ஆண்டுகளுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு தொடா்ந்து 10 ஆண்டுகள் மட்டும் வழங்கப்படும்.

இதுவரை சுய உறுதிமொழி ஆவணம் அளிக்காத பயனாளிகள் உடனே திருவள்ளுா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில் உரிய படிவத்தில் சுய உறுதிமொழி ஆவணத்தினை அளித்து உதவித் தொகையை பெற்று பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

Dinamani
www.dinamani.com