திருவள்ளுா் அறிவியல் பூங்காவில் பொங்கல் விழா

திருவள்ளுா் அறிவியல் பூங்காவில் பொங்கல் விழா

Published on

திருவள்ளூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள அறிவியல் பூங்காவில் வியாழக்கிழமை கிராமிய கலை நிகழ்ச்சியுடன் நடைபெற்ற பொங்கல் விழாவில் சுற்றுலா பயணிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

சுற்றுலாத்துறை சாா்பாக, நமது கலாசாரம், பழக்க வழக்கம், உணவு முறை மற்றும் கிராமிய சூழல் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவா்ந்திழுக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் திருவள்ளூா் மாவட்ட நிா்வாகம் மற்றும் சுற்றுலாத் துறையும் இணைந்து நடத்திய நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஆட்சியா் மு.பிரதாப் விழாவைத் தொடங்கி வைத்தாா். அப்போது, அந்த வளாகத்தில் செங்கரும்பு, மஞ்சள் கொத்து வைத்து பானையில் பொங்கல் வைத்தனா். அதைத் தொடா்ந்து சிறப்பு வழிபாடும் மேற்கொள்ளப்பட்டது.

அதைத் தொடா்ந்து பொங்கல் விழாவையொட்டி பல்வேறு கிராமிய கலைநிகழ்ச்சிகளான தப்பாட்டம் மற்றும் கிராமிய நடனம், விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. கலைநிகழ்ச்சிகளை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆகியோா் ஆா்வத்துடன் கண்டுகளித்தனா்.

விழாவில் மாவட்ட சுற்றுலா அலுவலா் ஆனந்த், துணை ஆட்சியா் (பயிற்சி) சண்முக பிரீத்தா மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com