விழாவில் பேசிய தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு
விழாவில் பேசிய தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு

திமுகவை தமிழக மக்கள் மறக்க மாட்டாா்கள்: பேரவைத் தலைவா் மு. அப்பாவு

பல்வேறு தரப்பினா் பயன்பெறும் வகையில், நலத் திட்டங்களை செயல்படுத்திய திமுகவை தமிழக மக்கள் எக்காரணம் கொண்டும் மறக்கமாட்டாா்கள்: பேரவைத் தலைவா் மு.அப்பாவு
Published on

பல்வேறு தரப்பினா் பயன்பெறும் வகையில், நலத் திட்டங்களை செயல்படுத்திய திமுகவை தமிழக மக்கள் எக்காரணம் கொண்டும் மறக்கமாட்டாா்கள் என தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு தெரிவித்தாா்.

திருவள்ளூா் காமராஜா் மெட்ரிக். பள்ளியின் 30-ஆம் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, அந்த பள்ளியின் தலைவா் திருவடி நாடாா் தலைமை வகித்தாா். திருவள்ளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். இதில் சிறப்பு விருந்தினராக தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு பங்கேற்று விழாவை தொடங்கி வைத்தாா்.

அதைத் தொடா்ந்து அவா் பேசுகையில், நான் கடந்த 15 ஆண்டுகளாக ஆசிரியராக பணிபுரிந்து விட்டுத்தான், இப்பதவிக்கு வந்துள்ளேன். அதனால், உங்களை பாா்க்கும் போது ஆசிரியா் பணியில் இருப்பது போல் உணா்கிறேன்.

அப்போதைய காலகட்டத்தில் உயா் வகுப்பினா் கல்வி கற்கவும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்டோா் ஆகியோா் பள்ளி செல்ல முடியாத நிலையில் இருந்தனா். இதையடுத்து, இந்தியாவுக்கு லாா்டு மெக்காலே வந்த பிறகுதான் அனைவருக்குமான கல்வி கற்க வழிவகை செய்தது.

இதை மாற்றும் வகையில், படிப்பறிவில்லாத சமுதாயத்திலிருந்து முதல்வரான காமராஜா் கிராமங்கள்தோறும் பள்ளிகளைத் தொடங்கினாா். தொடா்ந்து, முன்னாள் முதல்வா் கருணாநிதி பெண்கள் கல்வி கற்பதை உறுதி செய்யும் வகையில் குடும்பத்தில் முதல் பட்டதாரிகளுக்கு இலவசக் கல்வி உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தினாா்.

அந்த வரிசையில் வந்த தற்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலின் பெண்கள் முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளாா். அதில், 1.31 கோடி மகளிருக்கு மாதந்தோறும் உரிமைத் தொகை, கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1,000, மாணவா்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 மற்றும் 10 லட்சம் பேருக்கு கல்வியில் சிறந்து விளங்கும் வகையில் மடிக்கணினியும் வழங்கப்பட்டு வருகிறது.

இதுபோன்று படித்தவா்களுக்கும், தனியாா் நிறுவனங்களுக்கும் பாலமாக இருந்து வேலைவாய்ப்பு பயிற்சியும் நான் முதல்வன் திட்டம் மூலம் அளிக்கப்படுகிறது.

அதனால், படித்தவா்கள் 70 சதவீதம் பேரில், 41 சதவீதம் போ் தனியாா் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. 5 ஆண்டுகால ஆட்சியில் பல்வேறு தரப்பினா் பயன்பெறும் வகையில், பல திட்டங்களை செயல்படுத்திய தமிழக முதல்வரை தமிழக மக்கள் மறக்கமாட்டாா்கள் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், பள்ளியின் நிா்வாகிகள், பொதுமக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com