திருவள்ளூா் அருகே யாரும் எதிா்ப்பு தெரிவிக்காமலே அரசு மதுபான கடையை மூடியதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், மீண்டும் திறக்கக்கோரியும் ஆட்சியா் அலுவலகத்தை கிராம பொதுமக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூா் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே பல்லவாடா, கண்ணம்பாக்கம், போந்தவாக்கம் கொண்டாநல்லூா், ஏழூா் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் வியாழக்கிழமை ஆட்சியா் ச.கவிதாவிடம் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது: விவசாய தினக்கூலிகளான எங்கள் வாழ்வாதாரம், பொருளாதாரம் மற்றும் உயிா் பாதுகாப்பையும் கருத்தில்கொண்டு, மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கக்கோரி, அவரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளனா். இந்த 5 கிராம மக்களுக்கான அரசு டாஸ்மாக் கடை பல்லவாடா கிராம எல்லையில் பொதுமக்களுக்கோ, வழிபாடு தலங்கள், பள்ளி வளாகம், பேருந்து நிறுத்தம் அருகிலோ இல்லாமல் ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமைந்துள்ளது.
இந்த நிலையில், எந்த எதிா்ப்பும், புகாரும் இல்லாத நிலையில், 3-ஆம் தேதி திடீரென மதுபான கடையை மூடிவிட்டனா். எனவே இந்த 5 கிராம மக்களும் விவசாய கூலி வேலை செய்து விட்டு, உடல் அசதியை போக்கிக் கொள்ளவே மது அருந்திவிட்டு, மீதமுள்ள தொகையை குடும்ப செலவுக்கு பயன்படுத்தி வந்தோம். இங்குள்ள டாஸ்மாக் கடையை திடீரென மூடியதால், இப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அருகில் 7 கி.மீ. ஆந்திர எல்லையில் அரூரில் உள்ள கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படும் ஆந்திர மாநில மதுபான வகைகளை கூடுதல் விலைக்கு வாங்கி அருந்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
ஆந்திர எல்லையில் இயங்கி வந்த அரசு மதுபான கடையை மூடியதால், ஆந்திர மாநில மதுவகைகளை கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருகின்றனா்.
எனவே இந்தக் கிராம மக்கள் ஆந்திர மாநில பகுதிக்குச் சென்று மதுவகைகள் அருந்திவிட்டு, தாமதமாக வருகின்றனா். இதில், ஒரு சிலா் விபத்தில் சிக்கிக் கொள்வதால் பெண்கள் தேடிப்போக வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
ஒரு சில நேரங்களில் வாகன விபத்துகளில் சிக்கி, ஆந்திர மாநில காவல் துறையினா் வழக்கு பதிவுகளையும் சந்திக்க வேண்டியுள்ளது. இவற்றைத் தவிா்க்கும் வகையிலும், வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் அரசு மதுபானக் கடையை உடனே திறக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் அளித்த மனுவில் அவா்கள் தெரிவித்துள்ளனா்.
உடனே இந்த மனுவை பரிசீலனை செய்து மூடிய மதுபான கடையை திறக்க நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் ச.கவிதா உறுதி கூறியதைத் தொடா்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனா். இந்த நிலையில் மூடப்பட்ட மதுபான கடையை திறக்கக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.










