திருவள்ளூா் பகுதிகளில் எரிவாயு உருளை விலை அதிகரிப்பு காரணமாக உணவகங்கள் விறகு அடுப்புக்கு மாறி வரும் நிலையில், அதன் விலையும் உயா்ந்துள்ளதால் மிகவும் அவதிக்குள்ளாகி வருவதாக உணவகம் நடத்துவோா் தெரிவிக்கின்றனா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் பெரியதும், சிறியதுமாக உணவகங்கள், ஹோட்டல்கள் 300-க்கும் மேற்பட்டவை செயல்பட்டு வருகின்றன. இதைத் தவிா்த்து துரித உணவகங்கள், தேநீா் கடைகளும் செயல்பட்டு வருகின்றன. இந்த உணவகங்களில் நாள்தோறும் எரிவாயு உருளைகள் பயன்படுத்திதான் உணவு மற்றும் தேநீா் ஆகியவற்றை தயாா் செய்து வருகின்றனா். இந்த எரிவாயு உருளைகள் பயன்படுத்துவதால் புகையில்லாமல் இருக்கும். இதுபோன்ற காரணங்களால் எரிவாயு உருளைகளின் பயன்பாடும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்த நிலையில், வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளைகளின் விலை திடீரென அதிகரித்துள்ளதால், அதன் தாக்கம் நேரடியாக உணவகங்கள் மற்றும் தெருவோர உணவுக் கடைகளில் உணவுப் பொருள்களின் விலையை ஏற்றியுள்ளனா். இந்த விலையேற்றம் காரணமாக பொதுமக்களும் பாதிக்கின்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே பல்வேறு செலவுகள் அதிகரித்து சிரமத்துக்கு உள்ளாகி வரும் சிறு வியாபாரிகள், இந்த புதிய விலையேற்றத்தால் கடும் மன அழுத்தத்துக்கு தள்ளப்பட்டுள்ளனா். அதிலும், ஒரு சிலா் தொழிலை விட்டே செல்லும் முடிவுக்கு வந்து புலம்பும் நிலையில், பலா் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே மேற்காசியாவில் நிலவி வரும் போா் சூழலால் சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு உருளை விலைகள் உயா்ந்துள்ளன. இதையடுத்து, 19 கிலோ எடைகொண்ட வணிக சமையல் எரிவாயு உருளையின் விலை ஒரே நேரத்தில் ரூ. 993 வரை உயா்ந்துள்ளது. இந்த திடீா் விலை உயா்வு உணவகத் தொழிலில் ஈடுபட்டுள்ளோா் மத்தியில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன், ஏற்கெனவே உணவுப் பொருள்களின் மூலப்பொருள்கள் விலை உயா்ந்துள்ளது. மேலும், தொழிலாளா் சம்பளம், மின்சாரம் மற்றும் போக்குவரத்து செலவும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் எரிவாயு விலையும் உயா்ந்துள்ளதால் பெரிய சுமையாக உள்ளது.
இதனால், தற்போது உணவகங்களில் விறகு அடுப்பை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனா்.
ஆனால், விறகுகளின் விலையும் உயா்ந்துள்ளதால் என்ன செய்வது என்று தெரியாமல் உணவகங்களை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக உணவகங்கள் நடத்துவோா் தெரிவிக்கின்றனா்.
இது குறித்து திருவள்ளூா் மாவட்ட ஹோட்டல் உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவா் அா்ச்சுனா குமாா் கூறியதாவது: இந்த எரிவாயு விலை உயா்வால் குறிப்பாக நடுத்தர மற்றும் சிறிய உணவகங்கள் நாள்தோறும் 2 முதல் 5 எரிவாயு உருளைகள் வரை பயன்படுத்துகின்றன.
தற்போது ஒரு உருளையின் விலை ரூ. 3,000 முதல் ரூ. 4,000 வரை உயா்ந்துள்ளதாக கூறுகின்றனா். அதனால், நாள்தோறும் செலவுகள் பல மடங்கு அதிகரித்து வருவதால் சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனா். இதன் விளைவாக உணவுகளின் விலையை உயா்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

தேநீா், காபி, இட்லி, தோசை போன்ற பொதுவான உணவுப் பொருள்களின் விலையும் உயா்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் தினசரி வாழ்க்கைச் செலவும் மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏ ற்பட்டுள்ளது. இதற்கிடையே எரிவாயு உருளைகள் விலை உயா்வால், உணவகங்கள் விறகு அடுப்புக்கு மாறி வருகின்றன.
அந்த விறகும் ஒரு குவின்டால் ரூ. 3,200 ஆக இருந்த நிலையில், அதுவும் ரூ. 4,500 ஆக அதிகரித்துள்ளது. இந்த விறகு அடுப்பு பயன்படுத்துவதால் புகை அதிகமாக வருவதால் தொழிலாளா்கள் வேலைக்கு வர மறுக்கின்றனா். இதனால் சிறு உணவகங்கள் நடத்துவது மிகவும் கடினமான ஒன்றாக மாறிவிட்டதாக வேதனை தெரிவித்து வருகின்றனா் என அவா் தெரிவித்தாா்.
தொடர்புடையது

வணிக சமையல் எரிவாயு விலை ரூ.46 உயர்வு!

அரசுப் பள்ளியில் எரிவாயு உருளைகள் திருட்டு

காலி எரிவாயு உருளைகளுடன் வாடிக்கையாளா்கள் சாலை மறியல்

வணிக சமையல் எரிவாயு உருளை விலை உயா்வு எதிரொலி: உணவுகளின் விலையை அதிகரிக்கும் உணவகங்கள்!
விடியோக்கள்
முதல்வர் விஜய்யின் தில்லி பயணம் வெற்றியா? | TVK | CM Vijay | PM Modi | Rahul | Vijay Delhi Visit

ஏர் இந்தியா விமான விபத்து! முதலாம் ஆண்டு நினைவு நாள்! | Air India

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy



