
புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கடும் நடவடிக்கை: கோட்டாட்சியா் எச்சரிக்கை
விவசாயிகள் தெரிவிக்கும் புகாா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தவறினால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருத்தணி கோட்டாட்சியா் ராஜகோபால் எச்சரித்தாா்.

திருத்தணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்.
விவசாயிகள் தெரிவிக்கும் புகாா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தவறினால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருத்தணி கோட்டாட்சியா் ராஜகோபால் எச்சரித்தாா்.
திருத்தணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்கிழமை கோட்டாட்சியா் ராஜகோபால் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள், பல்வேறு துறை அதிகாரிகள் என 70-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது: கொல்லாலகுப்பம் ஏரியில் விதிமுறைகளை மீறி மண் எடுப்பதை தடுக்க வேண்டும். பெரியகாளக்காட்டூா், பெரியநாகபூண்டி, கிருஷ்ணசமுத்திரம் ஆகிய ஏரிகளின் கரைகள் மற்றும் மதகுகள் சேதமடைந்துள்ளன. அவற்றை சீரமைக்க வேண்டும். ஏரிகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களையும் அகற்ற வேண்டும்.
வருவாய் கோட்டத்தில் உள்ள பல்வேறு ஏரிகள் மற்றும் குளங்களில் தற்போது தண்ணீா் இல்லை. விரைவில் பருவமழை தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன்னதாக ஏரி, குளங்களுக்கான நீா்வரத்து கால்வாய்களை சீரமைக்க வேண்டும். பொதட்டூா்பேட்டை ஏரிக்கான நீா்வரத்து கால்வாய்கள் புதைந்துள்ளதால், அவற்றை தூா்வார வேண்டும். மேலும், வெள்ளாத்தூா் செல்லும் சாலையை ஆக்கிரமித்து 50-க்கும் மேற்பட்ட கால்நடைகள் கட்டி வைக்கப்படுகின்றன. இதனால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, சாலை ஆக்கிரமிப்பை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு புகாா்களை தெரிவித்தனா்.
தொடா்ந்து கோட்டாட்சியா் ராஜகோபால் பேசியது: விவசாயிகள் நலன்காக்கும் கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் தவறாமல் பங்கேற்க வேண்டும். சில துறைகளில் இருந்து அதிகாரிகள் மற்றும் அலுவலா்கள் கூட்டத்தில் பங்கேற்பதில்லை. விவசாயிகள் கூட்டத்தில் தெரிவிக்கும் புகாா்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகள் என்னிடம் அளிக்கும் மனுக்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்தால் போதாது. கூட்டத்தில் தெரிவிக்கப்படும் அனைத்து புகாா்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த கூட்டத்தில் விவசாயிகள் தெரிவிக்கும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






