அத்தியாயம் 43 - வரலாற்றில் நவீன கால மக்களின் சமூக, பொருளாதார, பண்பாட்டு நிலை (பொ.ஆ.1500 - 1900)

சோழர்களின் ஆட்சி மறையத் தொடங்கியபோது, பொ.ஆ.1336 முதல் விஜயநகரப் பேரரசு தலைதூக்கியது. பொ.ஆ. 14-ம் நூற்றாண்டு முதல் தென்னிந்தியாவை விஜயநகரர்கள் ஆட்சிபுரிந்துள்ளனர்.

சோழர்களின் ஆட்சி மறையத் தொடங்கியபோது, பொ.ஆ.1336 முதல் விஜயநகரப் பேரரசு தலைதூக்கியது. பொ.ஆ. 14-ம் நூற்றாண்டு முதல் தென்னிந்தியாவை விஜயநகரர்கள் ஆட்சிபுரிந்துள்ளனர். இவர்கள், தங்களது ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் தளபதிகளை நியமித்து ஆட்சியை நடத்தினர். இவர்களை நாயக்கர் என்று குறிப்பிட்டு அழைத்தனர். முழு அதிகாரமும் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அதுவே நாளடைவில், தமிழகத்தில் முழுமையான நாயக்கர்களின் ஆட்சியாக மாறியது.

பொ.ஆ 16-ம் நூற்றாண்டின் இடைக்காலத்தில், மதுரை நாயக்கர்களும், தஞ்சை நாயக்கர்களும், அவர்களைத் தொடர்ந்து மராட்டியர்களும், தங்களது ஆட்சியைத் துவக்கினர். இருப்பினும், இவர்கள் குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டுமே தமது ஆளுகைக்குக் கீழ் கொண்டுவந்தனர். இக்காலகட்டத்தை தொடர்ந்து, ஒருபுறம் டச்சு அரசும், ஆங்கிலேயர் அரசும் தமிழகத்தில் பரவலாக ஏற்படலாயிற்று. அதனை எதிர்த்து பாளையக்காரர்களும், ஜமீன்களும் செயல்பட்டனர். அவ்வாறு செயல்பட்டவர்களில் சற்று வலிமை படைத்தவர்களாக, தமிழகத்தின் வடக்கே செஞ்சியை ஆண்ட செஞ்சி நாயக்கர்களும், சென்னைக்கு அருகே உள்ள சதுரங்கப்பட்டினம் மற்றும் தரங்கம்பாடியை ஆட்சிபுரிந்த டச்சு அரசும், தமிழகத்தின் தென்கோடியில், சிவகங்கை மாவட்டத்தில் மருது சகோதரர்களும், திருநெல்வேலி மாவட்டத்தில் பாஞ்சாலங்குறிச்சியில் அரண்மனை கட்டி ஆட்சிபுரிந்த வீரபாண்டிய கட்டபொம்மன் போன்றவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள்.

நவீன காலத்தில் ஆட்சி புரிந்த குறுநில மன்னர்கள், பாளையக்காரர்கள் மற்றும் டச்சு ஆட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள்

தமிழகத்தில் செஞ்சி, சதுரங்கப்பட்டினம், தரங்கம்பாடி, பாஞ்சாலங்குறிச்சி ஆகிய குறுநில மன்னர்கள், பாளையக்காரர்கள் மற்றும் டச்சு ஆட்சிப் பகுதிகளில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. வரலாற்றின் இடைக்காலத்திய மற்றும் நவீன காலத்திய இடங்களிலும் நடைபெற்ற அகழாய்வுகள் குறைவே. ஏனெனில், தமிழக வரலாற்றை பதிவு செய்யும் முறைகள் பெருகிவிட்டன. அதாவது, பண்டைக்காலம் போன்று கல்வெட்டுகளையோ, கட்டடங்களையோ கருத்தில் கொண்டு வரலாற்றை கணிக்கும் முறை மாற்றம் பெற்று, அனைத்து நிகழ்வுகளும் பதிவு செய்யும் முறைகள் பெற்ற வளர்ச்சியால், நவீன கால அகழாய்வுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. இருப்பினும், மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் மூலம் நாம் அறிந்துகொண்ட அக்காலத் தமிழக மக்களின் வாழ்க்கை முறைகளைக் காண்போம்.

பாஞ்சாலங்குறிச்சி

அமைவிடம்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாஞ்சாலங்குறிச்சி, வீரபாண்டிய கட்டபொம்மன் அரண்மனை கட்டி அங்கே செழிப்புடன் வாழ்ந்த இடம். இவனது சமகாலத்தில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் தலைதூக்கியது. இவன் ஆங்கிலேயருக்குப் பணிந்துபோகாமல், அந்நியர்கள் எங்களை ஆள நினைப்பதா என்று எதிர்த்து நின்றான். இவன் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் பலமுறை போரிட்டுள்ளான். இம்மாவீரன் மறைவுக்குப் பின் பாஞ்சாலங்குறிச்சியை வெள்ளையர்கள் தங்கள் ஆதிக்கத்துக்குக் கொண்டுவந்து, அங்கிருந்த அரண்மனையை அடையாளம் தெரியாமல் சிதைத்துவிட்டனர்.

அகழாய்வு

வீரம்மிக்க தமிழ் மன்னன் வாழ்ந்த அரண்மனையின் கட்டடப் பகுதிகளான நாளோலக்க மாளிகையும், கல்யாண மண்டபமும், அடுக்களையும், வசிக்கும் அறைகளும் மற்றும் அரண்மனையின் அடித்தளப் பகுதிகளும் அகழாய்வின் மூலம் வெளிக்கொணரப்பட்டன. அழகிய வேலைப்பாடு கொண்ட கற்பீடங்களும், செங்கற்கள் பாவப்பட்டு, அவற்றில் சுண்ணாம்பு சாந்து பூசப்பட்ட நிலையையும் அறிய முடிந்தது. ஆங்கிலேயர்களால் பீரங்கியால் தாக்கியபோது அப்பீரங்கி குண்டுகள் பதிந்த நிலையும் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வண்ணக் கலவை பூசப்பட்ட காரைத் துண்டுகள் காணப்பட்டதால், அரண்மனைப் பகுதியில் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தது என்பதை அவை தெளிவுபடுத்துகின்றன. ஆங்காங்கே காணப்படும் கருங்கல் பீடங்களும், கருங்கல் படிக்கட்டுகளும் அரண்மனைத் தோற்றத்தை கண்முன் கொண்டுவந்து நிறுத்துகின்றன. இங்கு பீரங்கிக் குண்டுகள், சுதை உருவ பொம்மைகள், பீங்கான் தட்டுகள், சுடுமண் பாவைகள், அகல்விளக்குகள் கிடைத்துள்ளன.*1

அரண்மனைக்குரிய அனைத்துப் பகுதிகளும் அகழ்ந்து வெளிக்கொணர்ந்து பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இங்கு குறிப்பிடத்தக்க தொல்பொருட்களாக, பீங்கான் தட்டுகள், உடைந்த பீங்கான் கிண்ணங்களின் பகுதிகள், டம்ளர் மற்றும் பிற பீங்கான் வகைப் பொருட்கள் அதிக அளவில் சேகரிக்கப்பட்டன.*2 தற்பொழுது இப்பகுதி தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்கப்பட்டு பாதுகாத்து வரப்படுகிறது.

இங்கு குறிப்பிடப்படும் பீங்கான் வகை மட்கலன்கள் போர்ஸலைன் மட்கலன்களைப் போன்றே காணப்படும். இம்மட்கலன்களில் அதிக அளவில் பூ வேலைப்பாடுகளும், நீலநிற வண்ணமும் காணப்படும். இம்மட்கலன் அதிக வேலைப்பாடுகொண்டதாலும், எளிதில் உடைவதாலும் இம்மட்கலன்கள் நீண்ட நாள்கள் மக்களால் ஆதரிக்கப்படவில்லை. இருப்பினும், பொ.ஆ.10 - 13-ம் நூற்றாண்டுகளில் தமிழகத்தில் காணப்பட்ட பீங்கான் வகையைச் சர்ந்த மட்கலனான போர்ஸலைன் சீன தேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை ஆகும். இவை சில நூற்றாண்டுகள் தமிழகத்தில் மக்களைக் கவர்ந்ததால், நீண்ட நாட்கள் பழக்கத்தில் இருந்துள்ளன. ஆனால், பொ.ஆ.18 – 19-ம் நூற்றாண்டுகளில் காணப்பட்ட பீங்கான்கள் வித்தியாசமானவை. இவை மக்களின் வரவேற்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செஞ்சி

விழுப்புரம் மாவட்டத்தில், சென்னையிலிருந்து திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை செல்லும் சாலையில் சுமார் 160 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது செஞ்சி. இது, மலைகளால் சூழப்பட்ட பகுதியாகும். இதன் கிழக்கே சாரங்கபாணி ஆறு உள்ளது.

 சிங்கபுரம் என்று அழைக்கப்பட்ட செஞ்சி, தொன்மைச் சிறப்புகள் பல நிறைந்தது. பெருங் கற்காலப் பண்பாட்டுச் சின்னங்கள் பல இங்கு உள்ளன. செஞ்சிக்குள் பல சிறப்பு பெற்ற ஊர்கள் காணப்படுகின்றன. தொண்டூர், திருநாதர்குன்று, பனமலை போன்றவை குறிப்பிடத்தக்கவை. பொ.ஆ. 13-ம் நூற்றாண்டில், செஞ்சியர்கோன் என்ற அரசன், இவ்வூரில் உள்ள ராஜகிரி, கிருஷ்ணகிரி, சந்திரகிரி எனும் மூன்று மலைகளையும் சேர்த்து கோட்டை ஒன்றை எழுப்பத் திட்டமிட்டான்.*3 செஞ்சிக்கோட்டையும் இக்காலத்தில் அமைக்கப்பட்டதுதான்.

செஞ்சிக்கோட்டையின் தோற்றங்கள்

விஜயநகரப் பேரரசு வீழ்ச்சிக்குப்பின், செஞ்சி நாயக்கர்கள் செஞ்சியைத் தலைமையிடமாகக் கொண்டு, பொ.ஆ. 16-ம் நூற்றாண்டில் தங்களது ஆட்சியை ஏற்படுத்தினர். பின்னர், செஞ்சிக்கோட்டை கட்டி முடிக்கப்பட்டது. முக்கியத்துவம் பெற்ற இக்கோட்டையானது, பொ.ஆ. 1677-ல் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியால் கைப்பற்றப்பட்டது. இக்கோட்டை தமிழகத்திலேயே தலைசிறந்த கோட்டை ஆகும். தமிழகத்தில் இன்றைக்கும் முழமையான அமைப்பில் காணப்படக்கூடிய ஒரு கோட்டையாகத் திகழ்கிறது. இக்கோட்டைக்குள் ஏழுநிலை மாடங்கள் நிறைந்த கல்யாண மகால், வெங்கட்ரமணர் கோயில், தர்பார், களஞ்சியங்கள், யானைக்குளம், அரச குடும்பத்தினர் குடியிருப்புகள், சதத்துல்லாகான் மசூதி, தேசிங்குராஜன் சமாதி என பல பகுதிகள் உள்ளன.*4

பீரங்கி மேடையும், அதன்மேல் காணப்படும் பீரங்கியும் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. கோட்டை வாயில்களும், அதன் படிக்கட்டுகளும், அதன் உள்கட்டமைப்புகளும் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அரைவட்டவடிவில், வளைவு வளைவாக கருங்கற்களைக் கொண்டு கோட்டையின் அரண் வடிவமைக்கப்பட்டுள்ளது. எதிரிகளை மறைந்திருந்து தாக்கவும், உள்ளே இருப்பவர்கள் தக்க பாதுகாப்புடன் இருக்கவும் மிகுந்த கவனத்துடன் இக் கட்டுமானம் அமைத்துள்ளது காண்போர் அனைவராலும் வியக்கவைக்கும் வகையில் உள்ளது.

புதியதாக எவரேனும் கோட்டைக்குள் நுழைந்துவிட்டால், அவர்களால் எளிதில் வெளியே வர இயலாது. அத்தகைய வடிவில் பல நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் புறப்பட்ட இடத்துக்கே திரும்பக் கொண்டுவந்து விட்டுவிடும். அதிகமாகப் பழக்கம் உள்ளவர்கள் அல்லது கோட்டைக்குள் அடிக்கடி சென்று வந்தவர்கள் மட்டுமே இக்கோட்டைக்குள் எளிதில் சென்று வெளியே திரும்பலாம். அத்தகைய சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டது.

அகழாய்வில் வெளிப்படுத்தப்பட்ட பகுதிகள் – கொலுமேடை

இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறையால், இக்கோட்டையை செப்பனிடும் பணிகள் மேற்கொள்ளும்பொருட்டு அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 1973 – 74-ல் மேற்கொண்ட அகழாய்வில் கொலுவறை ஒன்றும், 12.5 X 10 மீ. அளவுள்ள ஒரு பெருவறையின் சான்றுகளும் கண்டறியப்பட்டது. இவற்றுடன், கொலுமேடை மற்றும் குடியிருப்புப் பகுதிகளும் வெளிக்கொணரப்பட்டது. இவ்வகழாய்வில் செம்பினால் ஆன முத்திரையும், நவாப் காசுகளும், இரும்பு குறுவாள், கதவு, வலையல்கள், ஆணிகள் என பல தொல்பொருட்களும் சேகரிக்கப்பட்டன.*5 இங்கு வடிவமைக்கப்பட்டுள்ள கோபுர அமைப்பானது, மராட்டியர் கலைப்பாணியையும், முகலாயர்கள் கலைப்பாணியையும் இணைத்து ஏற்படுத்தியதுபோல் உள்ளது. இவை பொ.ஆ. 17-ம் நூற்றாண்டில் அமைந்த ஆட்சி மாற்றங்களையும், அவர்களின் கட்டடக் கலையையும், மக்களின் வாழ்க்கை முறையையும் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

தரங்கம்பாடி

நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி வட்டத்தில், கிழக்குக் கடற்கரையையொட்டி அமைந்துள்ள ஊர் தரங்கம்பாடி. கடற்கரையையொட்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டை அமைந்த ஊர் இது. இக்கோட்டை, பொ.ஆ. 1620-ல் டச்சு ஆட்சியாளர்களால் கட்டப்பட்டது.*6

தரங்கம்பாடியில் டச்சு (டேனிஷ்) கிழக்கிந்திய கம்பெனி வணிகர்கள், இந்தியாவில் கொள்முதல் செய்த பொருட்களை மலேயா தீவுகளுக்கு ஏற்றிச் சென்று விற்பனை செய்தனர். அவற்றுக்கு ஈடாக பிற பண்டங்களை வாங்கிவந்தனர். இங்கு காணப்படும் கோட்டையின் பல பகுதிகள், பலமுறை, பலகாலங்களில் புணரமைப்பு செய்யப்பட்டள்ளது. தரங்கம்பாடி கோட்டை இரண்டு பெரிய கட்டடப் பகுதியைக் கொண்டது. ஒன்று, வெளிப்புற மதில் சுவர்; அடுத்து, மைய கட்டடப் பகுதி. மேலும், உயரமான நான்கு பக்கங்களைக் கொண்ட சதுரமான கட்டட அமைப்பு, நான்கு மூலையிலும் கண்காணிப்பதற்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளது.*7

தரங்கம்பாடி கோட்டைக்குள் அமைந்துள்ள அருங்காட்சியகம் (தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள நினைவுச்சின்னம்)

கோட்டை உட்பகுதியின் தோற்றம்

அகழாய்வு

தரங்கம்பாடி கோட்டையின் கட்டுமானத்தையும், காலத்தையும் அறிதல் பொருட்டு, 2001-ல் இங்கு மாதிரி அகழ்வுக்குழி போடப்பட்டது. ஆய்வில், செங்கற்கள் பாவப்பட்ட அடித்தளம் வெளிக்கொணரப்பட்டது.*8 அதன்மேல், செம்மண் அமைப்பும் காரைப்பூச்சும் இருந்தது. அதனை அடுத்து, ஒரு மண் அடுக்கு 30 செ.மீ. தடிப்பில் காண முடிந்தது. இதன் மேல்தான் பாதுகாப்புச் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. சேந்தமங்கலம், கங்கைகொண்டசோழபுரம் போன்ற அகழ்விலும் இதேபோன்ற அடித்தளம் காணப்பட்டது. இவ்வகைக் கட்டடங்கள், உறுதித்தன்மையை கருத்தில்கொண்டு அமைக்கப்படுபவை.  பாதுகாப்புச் சுவர் இரண்டு சுவர்களைக் கொண்ட கட்டுமான அமைப்பாக உள்ளது. இதுபோன்ற கட்டுமானம், கங்கைகொண்டசோழபுரம் அரண்மனைப் பகுதி அகழாய்வில் காணப்படுகிறது. அதேபோல், ஒரு சுவருக்கும் மற்றொரு சுவருக்கும் 9 செ.மீ. இடைவெளி உள்ளது. ஒவ்வொரு சுவரும் 75 செ.மீ. தடிப்பு உள்ளது. இடைப்பட்ட பகுதியில் செங்கற்தூளை இட்டு நிரப்பியுள்ளனர். தமிழக கோயில்களின் வெளிப்புறச் சுவர்கள் இதுபோல் அமைக்கப்படுவது. வழக்கம். அதன் அடிப்படையிலேயே தரங்கம்பாடி கோட்டை பாதுகாப்புச் சுவரும் அமைக்கப்பட்டுள்ளது. 4 மீட்டர் உயரம் உள்ள இந்தச் சுவருக்கு 20 செ.மீ. X 13 செ.மீ. X 4 செ.மீ. அளவுடைய செங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதை இந்த அகழாய்வு வெளிப்படுத்தியுள்ளது.*9 கூம்பு வடிவ அமைப்பில், பாதுகாப்புச் சுவரின் மேல்பகுதியை அமைத்ததால், மழைநீர் பாதிப்பிலிருந்து கட்டடம் பாதுகாக்கப்படுகிறது. பல தரைப்பகுதிகள் செங்கற்களைக் கொண்டு பாவப்பட்டுள்ளதை கண்டறிய முடிகிறது. டச்சு நாட்டினர் எழுப்பிய கட்டடத்தின் பழைய அடிப்பகுதியும் இவ்வாய்வில் கண்டறியப்பட்டது.

இங்கு சீனதேசத்து போர்ஸலைன் பானை ஓடுகளும், சீனப் பெண் உருவங்களும், இரண்டு அடித்தளங்களும் கண்டறியப்பட்டன.*10

மேற்கோள்கள்

1. R. Nagasamy, Damilica, opp.cit.pp.

2. Ibid.

3. ச. கிருஷ்ணமூர்த்தி, செஞ்சி வரலாறு, நாயக்கர் சமுதாய மலர், திருச்சி.

4. மேலது.

5. மேலது.

6. R. Nagasamy, Tharangambadi, Govt. of Tamil Nadu Published Brought out in Honour of the visit his excellency Mr. Pout Schluetor, the Prime Minister of Denmark on the occasion of their visit to Danisburg Museum, Tarangambadi on 17.1.1987.

7. T. Subramani, Excavations at Tharangambadi, Dept. of Archaeology, Govt. of Tamil Nadu, Chennai.

8. Ibid.

9. தி. சுப்பிரமணியன், தரங்கம்பாடி நகரமயமாதல் - நாவாய், தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், 2010, பக்.169.

10. மேலது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com