இமயம் தாண்டும் வாத்து!

உலகில் உயிர்கள் அனைத்தும் வாழ்வது என்பது உயிரினப் பெருக்கத்துக்கும், அதன் தேவைக்கான உணவு உண்ணுவதற்குமே. இதிலும்கூட இயற்கையின் விந்தையை, அற்புதத்தை நாம் நிறையவே காண முடியும்.
இமயம் தாண்டும் வாத்து!

வாழ்வது..இனம் காக்கவே..!

உலகில் உயிர்கள் அனைத்தும் வாழ்வது என்பது உயிரினப் பெருக்கத்துக்கும், அதன் தேவைக்கான உணவு உண்ணுவதற்குமே. இதிலும்கூட இயற்கையின் விந்தையை, அற்புதத்தை நாம் நிறையவே காண முடியும். உலகம் முழுவதும் உயிர்கள் வாழ்நதாலும் அவை அனைத்துக்குமே தான் வாழும் இடத்திலேயே இனப்பெருக்கம் செய்யும் வாய்ப்பும் சந்தர்ப்பமும் கிட்டுவதில்லை. சில உயிர்கள் தொலை தூரம் பறந்து சென்றே  இனப்பெருக்கம் செய்யும் நிலை ஏற்படுகிறது. அதில் முன்னணியில் நிற்பவை பறவைகள்தான்.

நாடுதே..என் மனம் உனை நாடுதே..!

இனப்பெருக்கம் செய்வதற்காக பறவைகள் பொதுவாக குளிர்காலத்தில் வடபகுதி உலகிலிருந்து இந்தியா நோக்கி வருகின்றன. தொலை தூர சைபீரியா போன்ற பகுதிகளில் வாழும் பறவைகள், குளிரிலிருந்து தப்பிக்கவும், இனப்பெருக்கம் செய்யவும், தென் பகுதி நோக்கி பயணிக்கின்றன. முக்கியமாக இந்தியாவின் சீதோஷ்ண நிலை சூடாகவும், சாதகமாகவும் உள்ளதால், பறவைகள், குளிரால் வாட்டி வதக்கி நடுக்கும் பகுதிகளிலிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று இந்தியாவுக்கு ஓடி வந்து இல்லையில்லை, பறந்து வருகின்றன. மேலும் இந்தியாவில் அவைகள் இனப்பெருக்கம் செய்ய வசதியான சூழலும், ஏராளமான உணவும் அவைகளுக்குக்  கிடைக்கின்றன.அதனாலேயே அவைகள் இங்கு ஓடி வருகின்றன. உலகின் அரிதான பறவைகளும்கூட இந்தியாவுக்கு வருகின்றன. இவை இன்று நேற்றல்ல, காலம் காலமாய் இந்திய துணை கண்டம் நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் கூடங்குளத்துக்கும், வேடந்தாங்கலுக்கும் வரும் பறவையினங்கள் ஏராளம்.

ஏன் பயணம்..!

பறவைகள் தான் இப்படி வலசை செல்லும்போது, ஏராளமான உயிர் இழப்பும், மற்ற விலங்குகளிடம் சிக்குதலும், மனிதனால் வேட்டையாடப்படுதலும் ஏற்படுகின்றன. அவை தொடர்ந்தாலும்கூட, அவற்றைப் பற்றி பறவைகளுக்கும் தெரியும். ஆனாலும் கூட அவை வலசை நடைமுறையை விடாமல் பின்பற்றி வருகின்றன. ஏனெனில் இந்த பயணம் என்பது உயிர் தக்க வைத்தலின் பொருட்டு ஏற்பட்டதே. இது பொதுவாக குளிரிலிருந்து தப்பிக்க பனியூழிக்காலத்திலிருந்தே இந்த பயணம் துவங்கப்பட்டு இருந்திருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. .  

யார் சொல்லுவார் பறவையே !

பறவைகள் தன் உடலில் போதுமான கொழுப்பு சேர்ந்ததும், குளிர் காலத்தில் அவை தங்களின் நீண்ட  பயணத்தை, குளிரிலிருந்து தப்பிக்கவும், பாதுகாப்பான தங்களின் இளவலுக்கு போதுமான உணவு கிடைக்குமிடம் தேடிச் செல்லவும் கூட்டமாக ஓர் இரவுப் போதில் தங்களின் பயணத்தை  துவங்குகின்றன. பொதுவாக பறவைகள் பயணத்தின்போது உணவு கொள்வதில்லை. மேலும் இவை இரவிலேயே பயணம் தொடர்கிறது. பறவைகளுக்குள், உள்ளுக்குள்ளேயே இருக்கும் உயிர்க் கடிகாரமும் பயணத்தின் நேரத்தை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. இருப்பினும் , பருவநிலையும் அதில் உதவுகிறது. இப்படிப்பட்ட பறவைகளின் வான் பயணத்தைப் பற்றி 3,000 ஆண்டுகளுக்கு முன்னரே, ஆதிகால கிரேக்க வல்லுனர்களான, ஹெசியாய்டு, ஹோமர், ஹெரடோடஸ் மற்றும் அரிஸ்ட்டாட்டில் போன்றோர் பதிவுகளில், பறவைகளின் தன் பரம்பரை காக்க மேற்கொள்ளும் பயணம் பற்றி தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

யார் வழி  சொல்ல.. வழித்துணை யார்?

வலசை பயணிக்கும் பறவைகள், வானில் உள்ள விண்மீன்களைப் பார்த்தே திசையறிந்து பறந்து செல்கின்றன. பொதுவாக பறவைகள் தடையற்ற பகுதிகளான மலைகள்/கடல் மேல்தான் பயண சாகசம் நடத்துகின்றன. இப்படிப்பட்ட பயணத்தின் கில்லாடி குருவி யார் தெரியுமா? ஆர்டிக் பறவை என்னும் அரிகுருவிதான் (Artic Tern),  இது ஒரு துருவத்திலிருந்து மறு துருவத்துக்கு, கொஞ்சமும் அசராமல், ஓய்வெடுக்காமல் போகிற போக்கில் சுமார் 79,000 கி.மீ பயணிக்கிறது. உலகில்  அதிக தொலைவு பயணித்ததிற்கான பரிசு இதற்குத்தான் கிடைத்துள்ளது. 

என் குடும்பம்..என் உலகம்..!

பட்டைக்கோடு மண்டை வாத்து, மத்திய ஆசியா, சீனா, ரஷ்யா மற்றும் இமயமலைப் பகுதிகளில் வாழ்கின்றன. பாகிஸ்தானின் ஈர நிலத்திலும் காணப்படுவதுண்டு. இது பொதுவாக சாம்பல் கலந்த வெண்மை நிறத்தில் கண்ணைப் பறிக்கும் அழகில் பவனி வரும். பழுப்பு நிறம் கலந்து கருப்பு பட்டைக் கோடுகள் மிக அழகாய் வெண்மை மிகுந்த தலையில் இவைகளுக்கு மெருகூட்டும். பட்டைக்கோடு மண்டை வாத்துகள், பபுல், தானியங்கள், விதைகள் , சிறு பூச்சிகள், பூச்சிகளின் இளம் , பருவ லார்வாக்கள், நத்தைகள் குட்டி குட்டி மீன்கள், போன்றவைகள் தான் பட்டைகோட்டாரின் தினப்படி உணவுப் பட்டியல். ஒரு கூட்டத்தில்  சுமார் 100 பறவைகள் இருக்கும். ஆனால் வலசை போகும்புத்டபோது  இவர்கள் ஒரு போர்ப்படை போல ஆயிரக்கணக்கில்தான் பயணிப்பார்கள்.பொதுவாக இவைகள் 2-3 முட்டைகள் மட்டுமே இடும். இவைகளின் முக்கிய பகையாளிகள், பனிச் சிறுத்தை, கரடி,புலி,சிறுத்தை , நரி, ஓநாய்,நாய்கள், பூனைகள், பெரிய பறவைகள் போன்றவையே. இந்த வாத்தின் வாழ்நாள் 4 -5 ஆண்டுகளே. 

நான்  உயரே..உயரத்தில்..!

நான்  உயர உயரப் போகின்றேன், நீயும் வா  என்று பாடிக்கொண்டே அதிக உயரத்தில் தன்  பெடையோடு பறப்பவர். பட்டைக்கோடு மண்டை  வாத்துதான்.(bar   headed goose ). இதன் அறிவியல் பெயர் Anser indicus.இது எவ்வளவு உயரம் பறக்கும் தெரியுமா? பட்டைக்கோடு மண்டை வாத்தின் பயண பறப்பு  உயரம் என்பது சுமார் 33,382 அடி! கிட்டத்தட்ட விமானம் பறக்கும் உயரம் இது. உலகிலேயே அதிக உயரத்தில் பறக்கும் பறவை பட்டைக்கோடு வாத்து மட்டுமே. இவ்வளவு உயரம் இது பறக்க உதவி செய்வது, விரிந்து நீண்ட சிறகுகள் மட்டுமே. 

ஆய்வும்..பட்டைக்கோடு மண்டை வாத்தும்..!

பொதுவாக பட்டைக்கோடு வாத்து, மத்திய ஆசியா, இந்தியா, பாகிஸ்தான், நேபால் போன்ற இடங்களுக்கு பறந்து வலசை வருவது தெரியும். ஆனால் நெல்லைக்கு அருகிலுள்ள கூடங்குளம் ஏரிக்கும் இவை வருகின்றன. இந்த பட்டைக்கோடு மண்டை  வாத்து தொடர்பாக, அறிவியலார் பல கருத்துகளை முன்வைக்கின்றனர். முன்பு, இவை, பகல் நேரத்த்துக்குப் பின் பறக்கும் பயணம் தொடர்கிறது என்று எண்ணினர். ஆனால் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தியதில், பட்டைக்கோடு மண்டை வாத்துகள் இரவிலும் அதிகாலை வானிலும் பயணத்தைத் தொடர்கின்றன. ஏனெனில் இந்த காலகட்டத்தில்தான் வான்வெளியின் காற்று குளிராகவும், அடர்த்தியாகவும் உள்ளது. இது வாத்துகள் பறப்பதற்கு ஏதுவாக உதவியாக உள்ளது தெரிய வநதுள்ளது. 

அனாயச பறத்தல்..!

பட்டைகோடு மண்டை வாத்து  பறவை, இமயமலைகளை  ஒரே நாளில் பறந்து சென்றுவிடுகின்றன. அவ்வளவு உயரத்தில் சும்மா அசராமல் பறக்கின்றன. அவை  அந்த நேரத்தில் அதிக ஆக்சிஜனையும் உள்ளுக்கு வேக வேகமாக  உடலுக்குள் இழுக்கின்றன. 30,000 அடி உயரத்துக்கு, மேலே அதன் வளர்சிதை மாற்றம் எந்த பாதிப்புமின்றி செயல்படுகிறது. அவைகளின் பெரிய இறகுகளும், அகலமான பெரிய நுரையீரலும், அதனை இணைக்கும் குட்டி குட்டி பாலங்களாய் இரத்த தந்துகி வலைப்பின்னலும், அது படிந்துள்ள தசைப் பகுதியும், அங்கேயுள்ள  ஹீமோகுளோபின் செயல்திறனும் ஒன்றாக செயல்பட்டு வாழ்க்கைக்கான வெகு தொலைவு பறக்க வேண்டி பயணிக்கும் ஜாம்பவான் பட்டைகோடு மண்டை வாத்து நிபுணர்தான். 

பிரமிக்க வைக்கும் இமயமலை பயணம்..!

சமீபத்திய ஜிபிஎஸ் புள்ளிவிபரம், இன்னும்கூட துல்லியமாய் பட்டைகோடு மண்டை வாத்தின் செயல்களை தெரிவிக்கிறது. இவை, இனப்பெருக்கம் செய்வதற்காக, மங்கோலியாவிலிருந்து இந்தியா நோக்கி ஆவலோடு பறந்து வருகின்றன. சுமார் 5,000 கிமீ அவை பறந்து வருகின்றன. எவ்வளவு காலத்தில் இந்த பறவைகள் மங்கோலியாவிலிருந்து இந்தியா வருகின்றன. சுமார் 2 மாத காலம் மட்டுமே. ஆனால் இவைகள் பயணிக்கும்போது, தற்காலிகமாய் ஆசுவாசப் படுத்த, அவ்வப்போது ஓய்வெடுத்துக் கொள்கின்றன. இமயத்தை இமாலய சாகசத்தில்தான் பட்டைக்கோடு மண்டை வாத்துகள் பறந்து காட்டி நம்மை பிரமிக்க வைக்கின்றன. இந்த பறவைகள், இயமத்தில் உச்சியை அதன் பல மலைகளை சுமார் 8 மணி நேரத்தில் ஒரே மூச்சில் பறந்து தாண்டிவிடுகின்றன. இதற்குத் தகுந்தாற்போல, இந்த பறவைகளின் உடல் வாகு அமைந்துள்ளது. உலகின் குறைந்த ஆக்சிஜன், 10% க்கும் குறைவான பகுதிகளிலும், அந்த  மலைத் தொடர்களின் பயணிப்பின்போதும் கூட, இவற்றின் உடலின் செயல்பாடுகள் ஆச்சரியப்படும் விதத்தில், செம்மையாய் ஈடுகட்டக் கூடிய அமைப்பில் செயல்படும்படி அமைந்துள்ளன. 1975ல் செய்யப்பட ஆய்வில் இவை 37,000 அடி உயரத்தில் அதிக உயரம் பறந்து சாதனை படைத்துள்ளது தெரிய வருகிறது. இவை ஒரே நாளில் சுமார் 1,000 மைல்/1610 கி.மீ கூட பறக்கும் திறன் பெற்றவை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com