அத்தியாயம் 69 - திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடி

அகழாய்வுகளில் கிடைத்த பொருட்களை நுணுக்கமாக ஆராய்ந்தால் தொன்மை மக்கள் இயற்கைப் பொருள்களின் மீது கொண்டிருந்த அச்சம் கலந்த வியப்பையும், அதன் மீது கொண்ட மதிப்பையும், ஈடுபாட்டையும் அறியமுடிகிறது

இயற்கை வழிபாடு

முன்னிரு அத்தியாயங்கள் வழியே, தொன்மைச் சமயத்தின் இரு பகுதிகளாக அல்லது சிந்தனைகளாக விளங்கும் ஆவி நம்பிக்கை சார்ந்த ‘‘ஆவியியம்’’ என்ற ஆவி வழிபாடும், ஆவியற்ற உயிர்ப்புச்சக்தி நம்பிக்கை சார்ந்த ‘‘உயிரியம்’’ என்ற மனா மற்றும் போங்கா பெயரில் அறியப்படும் வழிபாடு பற்றியும் விளக்கப்பட்டது. ஜெர்மன் அறிஞர் மேக்ஸ் முல்லர் அவர்கள், சமயத்தின் தோற்றத்துக்கு இவை இரண்டும் காரணமன்று; மனித இனம் இயற்கை ஆற்றல் மீது கொண்ட நம்பிக்கையே சமயத்தின் தோற்றத்துக்குக் காரணம் என்றார். இக்கோட்பாடு ‘‘இயற்கையியம்’’ (Naturalism) என்றும் ‘‘இயற்கை வழிபாடு’’ என்றும் குறிக்கப்படுகிறது.

இயற்கைப் பொருட்களின் ஆற்றல் மீது கொண்ட நம்பிக்கை அடிப்படையில் அப்பொருள்களை வழிபட்டதன் மூலமே, சமய நம்பிக்கை தோன்றியிருக்க வேண்டும் என்பது மேக்ஸ் முல்லர் கருத்தாகும். எகிப்து நாட்டிலும், பிற பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் வெளிப்படுத்திய சான்றுகளில் இதற்கான சான்றுகள் வெளிப்படுகின்றன என்பார். அகழாய்வுகளில் கிடைத்த பொருட்களை நுணுக்கமாக ஆராய்ந்தால் தொன்மை மக்கள் இயற்கைப் பொருள்களின் மீது கொண்டிருந்த அச்சம் கலந்த வியப்பையும், அதன் மீது கொண்ட மதிப்பையும், ஈடுபாட்டையும், போற்றத்தக்க எண்ணத்தையும் அறியமுடிகிறது என்றும் சுட்டுகிறார்.

தொன்மை மக்கள் இயற்கைப் பொருள்களை வழிபாட்டுப் பொருளாக ஏற்றுக்கொண்டதற்கு, அவர்கள் அப்பொருளைப் பற்றி தவறாகப் பொருள் கொண்டதே காரணம் என்றும் மேக்ஸ் முல்லர் சுட்டிக்காட்டுகிறார். ‘‘சூரியன் உதயமாகிறது, சூரியன் மறைகிறது, இடியும் மின்னலும் மழையைக் கொண்டுவருகின்றன, மரங்கள் பூக்களையும், கனிகளையும் உண்டாகுகின்றன’’ என்ற கருத்தாக்கம் தொன்மை மக்களிடையே உருவாகிறது. ‘‘சூரியன், இடி, மின்னல், மரம் போன்ற இயற்கைப் பொருள்கள் அதனுள் ஓர் உள்ளார்ந்த ஆற்றலைக் கொண்டுள்ளதன் மூலமே அவ்வாறு நிகழ்கிறது என்ற எண்ணத்தாலேயே இக்கருத்தாக்கம் ஏற்பட்டது என்றும், இயற்கைப் பொருளில் உயிர்ப்புத்தன்மை இருக்கிறது என்றும், அதனுள் பெரும் ஆற்றல் உள்ளது’’ என்றும் எண்ணினர் என்பார்.

மேக்ஸ் முல்லரின் இக்கோட்பாட்டின் மீது பலவிதமான கருத்துகள், விமரிசனங்கள் எழுந்துள்ளன. தொன்மை மக்கள் இயற்கைப் பொருள்களை வழிபட்டனர் என்பதை ஏற்றுக்கொள்வதில் எந்தச் சிக்கலும் இல்லை; ஆனால், இயற்கை வழிபாட்டிலிருந்தே சமய நம்பிக்கை தோன்றியது என்பதில் சிக்கல்கள் எழுகின்றன என்றும் இவ்வகையான கூற்றுக்கு உறுதியான சான்றுகள் இல்லை என்றும் மாற்றுக் கருத்துகள் கொண்டோரால் முன்வைக்கப்பட்டுள்ளன.

உயிரியத்தின் பெரும்பான்மையான கருத்தோட்டங்களை இயற்கையியம் என்ற இயற்கை வழிபாடு தம்முள் கொண்டுள்ளது என்பது வெளிப்படையானது. இயற்கைப் பொருளில் இருந்து ஜடப் பொருளுக்கும், ஜடப் பொருளில் இருந்து உயிர்ப் பொருளுக்கும் ஆற்றல் மாறும் என்ற உயிரியத்தின் பகுதியும், விலக்கு என்ற கருத்தோட்டமும், சமுதாய ஏற்றத்தாழ்வுகளுக்குக் காரணம், அதிஷ்டத்தில் நம்பிக்கை இன்மை என்பன போன்ற பகுதிகள் இவை இரண்டினுள்ளும் மாறுபடும் இடமாக அமைகின்றன.

{pagination-pagination}

இயற்கை வழிபாடு உலகப்பொதுவானது; மாந்தரினத்துள் இன வேற்றுமைகளைக் கடந்து வெளிப்பட்டிருப்பது. இதனுள் பிரதேச வேறுபாடு சார்ந்து சில இயற்கைப் பொருள்கள் மீதான மதிப்பளிப்புகள் மாறலாம், அச்சம் அச்சமின்மை மாறலாம், ஈடுபாட்டின் வீச்சு ஏற்றக்குறைவாக இருக்கலாம். எவ்வாறாயினும், தொன்மை வழிபாட்டு மரபுகளைச் சுமந்து வந்து, சமூகங்களிடையே இன்றளவும் இயற்கை வழிபாடு சமயம் சார்ந்தும், சமயம் சாராமலும் பின்பற்றப்படுவதாக உள்ளது.

இயற்கை வழிபாட்டில், வானம், பூமி, நீர், காற்று, நெருப்பு, மலை, மலைமுகடு, எரிமலை, சூரியன், சந்திரன், கோள்கள், நட்சத்திரங்கள், காடு, சிலவகை மரங்கள் போன்றவை முக்கிய இடத்தைப் பெறுகின்றன. துவக்கத்தில், இவை அவற்றில் பொதிந்துள்ள புதிருக்காகவும், உருவாக்கும் அச்ச உணர்வுகளுக்காகவும், இவை வழங்கும் பாதுகாப்பின்மை உணர்வுக்காகவும், வழங்கும் துன்பத்துக்காகவும் வணங்கப்பட்டன. அடுத்தநிலையில் அவை வழங்கும் நன்மையை அறிந்த பிறகு, அதற்காக நன்றி செலுத்தும் பொருட்டும் வணங்கப்பட்டன. இதிலிருந்து அவற்றின் துன்பம் அளிக்கும், நன்மையை வழங்கும் ஆற்றலே தெய்வம் என்ற கருத்தோற்றத்தைப் பெற்றது. அத்தெய்வங்களுடன் நெருக்கத்தை உருவாக்கும் பொருட்டு அவற்றுக்கும் மனித உருவும், சிலபொழுது அறிந்த வலிமையான விலங்கு உருவங்கள் அல்லது கற்பனையான விலங்கு உருவங்களும் வழங்கப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக, இயற்கைப் பொருள்களுக்கு ஆண் பெண் பண்பு நலன்கள் வழங்கப்பட்டு வழிபடப்பட்டன. அநேகமாக, இந்நிலையைத்தான் இன்று நமது வழிபாட்டில் காண்கிறோம். இதனோடே உடன்விளைவாக, இவ்வியற்கைப் பொருள்களில் தெய்வங்கள் உறைவதான நம்பிக்கை எழுந்தது. அதாவது, இயற்கைப் பொருள் என்பது ஒன்று அதில் உறையும் தெய்வம் வேறொன்று என்ற நிலைப்பாடு எழுந்தது. அதாவது, காடு தரும் அச்ச உணர்வால், காடு கொண்டுள்ள ஆற்றல் வணங்கப்பட்டது. பின்னர், அந்த ஆற்றலுக்கு ஒரு பெயர் வழங்கி மனித உரு வழங்கப்பட்ட நிலையில், அக்காட்டில் உறையும் தெய்வமானது. முதல் நிலையில் காடும் அதன் ஆற்றலும் ஒன்றே; இது காடு வெளிப்படுத்தும் ஆற்றல். அடுத்தநிலையில், காடு வேறு அதன் ஆற்றல் வேறு; இது காட்டில் உறையும் ஆற்றல்.

தமிழர் மரபில் இயற்கை வழிபாடு பெற்றுள்ள சிறப்பான இடத்தை, தமிழகத்தில் காணப்படும் தொல்லோவியங்கள் சிலவற்றில் இருந்தும், சங்க இலக்கியத்தில் இருந்தும் பெற முடிகிறது. அதேசமயத்தில், சங்க இலக்கியத்தில் இயற்கைப் பொருள்களில் உறைந்த தெய்வங்கள் சிறப்பிக்கப்படுவதையும், அவை வழிபடப்படுவதையும் பலப்பலவாகக் காணமுடிகிறது. பெரும்பான்மையாக அச்சம் தரும் தெய்வங்களான அணங்கு, சூர், சூர மகளிர், நீரர மகளிர், வரையர மகளிர், முருகு, கொற்றவை போன்றவை இவ்வியற்கைப் பொருள்களில் உறைவதாகக் காணமுடிகிறது. இவற்றில், முருகு தவிர பிற தெய்வங்கள் பெண் தெய்வங்கள் ஆகும். இவற்றுள் சில ஒன்றுக்கும் மேற்பட்ட இயற்கைப் பொருள்களில் உறையும் தெய்வங்கள். இங்கு கொற்றவை, முருகு நீக்கி பிற, இயற்கையின் பாற்பட்டவையாகக் காணப்படுகின்றன.

அணங்கு

மலைச்சாரல்களிலும், காடுகளிலும், நீர் நிலைகளிலும் உறைபவள்; அச்சமும் வருத்தமும் விளைவிப்பவள். வருத்தம் அளிப்பவள் என்பதால், சங்கப் புலவர்களின் புனைவில் இவள் இசைக்கருவியான யாழிலும், பெண்களின் அழகிய மார்பகங்களிலும், வீரர்களின் போர்க் கருவிகளிலும் வீற்றிருப்பதாக புனையப்பெறுகிறாள். அணங்கு உறையும் மலையானது ‘‘அணங்குடை நெடுவரை’’ (அகம், 22:1), ‘‘அணங்குடைக் காவாஅன்’’ (அகம், 72:11), ‘‘வான்கோட்டுக் கடவுள் ஓங்குவரை’’, (அகம், 348:7), ‘‘அணங்குடை வரைப்பு’’ (அகம், 372:3), ‘‘அணங்கோடு நின்றது மலை’’ (நற், 165:3) என்று புலவர்களால் பலப்பலவாக சுட்டப்படுகிறது.

{pagination-pagination}

சூர்

மலைப்புறத்தில், மலை வழிகளில் வசிப்பவள். சூர் என்ற சொல்லே அச்சம் என்ற பொருளைத் தருவதாகும். மலைநாட்டின் வழிகளில் சூர்த் தெய்வங்கள் இருப்பதால், அவ்வழியே செல்லும் மக்களை அவை துன்புறுத்துகின்றன என்று கூறுகிறது குறிஞ்சிப்பாட்டு. சூர்த் தெய்வங்கள் இருக்கும் மலைகளில் உள்ள தழைகளைத் தீண்டினாலும், அவற்றை வாடச் செய்தாலும் அவை மக்களை வருத்தும்; அம்மலையில் உள்ள வரையாடுகள்கூட அங்குள்ள தழைகளைத் தின்னாமல் ஒதுங்கிக்கொண்டன என்று வருணிக்கப்படுவது உண்டு (நற், 34:1-5).

சூர மகளிர், மலைகளிலும், மலைச்சாரலிலும், சுனைகளிலும் உறைபவர்கள்; வருத்தம் அளிப்பவர்கள் என்றும், தம் சூளுரைப்பை காப்பாற்றத் தருபவர்களை வருத்தும் தெய்வம் என்றும் சூர மகளிர் சுட்டிக்காட்டப் பெறுகின்றனர். திருமுருகாற்றுப்படையில் சூர மகளிர் பலர் ஒன்றாகக் கூடி ஆடும் விரிவான வர்ணனையும், அப்பொழுது அவர்கள் அணிந்துள்ள ஆடை ஆபரணங்கள் குறித்த விரிவான காட்சி தமிழர் பண்பாட்டை காட்சிப்படுத்துவதாக உள்ளது. ‘‘சூர மகளிர் சிவந்த தம் அடிகளில் கிண்கிணிகளை அணிந்துள்ளனர்; மூங்கில் போன்ற மெத்தென்ற தோள்களை உடைய சூர மகளிர் இந்திர கோபத்தின் நிறத்தை ஒத்த சிவந்த பூவேலைப்பாடு மிக்க ஆடையை அணிந்துள்ளனர்; பல மணிகளால் கோக்கப்பட்ட மேகலையைத் தம் இடையில் அணிந்துள்ளனர்; ஒருவன் கையால் சிறப்பித்துச் செய்யமுடியாத இயற்கை அழகையே தமக்கு இயல்பாகக் கொண்டவர்களாகச் சூர மகளிர் காட்சியளிக்கின்றனர்; சம்புநதம் என்று சொல்லப்படும் உயர்ந்த பொன்னால் செய்யப்பட்ட அணிகளை அவர்கள் அணிந்துள்ளனர்; அவர்களின் தெய்வீக ஒளி விண்ணுலகத்தையும் கடந்து செல்கிறது; மலர்களாலும் அணிகளாலும் தம்மை அலங்கரித்துக்கொண்டு மலைப்பகம் எல்லாம் எதிரொலிக்கும்படி அவர்கள் முருகன் புகழைப் பாடிக்கொண்டு ஆடுகின்றனர்’’ (திருமுருகு, 12-41).

வரையர மகளிர், மலைச்சாரல்களில் உறைபவர்கள் என்று குறிஞ்சிப்பாட்டு பேசுகிறது. இவ்வரையர மகளிரும் சூர மகளிர்போல, அச்சம் விளைவிப்பவர்கள். பேரழகோடு விளங்கும் வரையர மகளிர் மலைக்குகைகளிலே பார்ப்பவர்களின் கண்களுக்குப் புலப்படாமல் வாழ்ந்தனர்.

கொல்லிப்பாவை

ஒரு பிரதேசத்தின் தனிப்பட்ட தெய்வம், அதாவது கொல்லிமலையின் தெய்வம். பிற பகுதிகளில் இத்தெய்வத்தை அறியமுடியாது. இப்பாவை தெய்வத்தால் நிலைப்படுத்தப்பட்டது. தெய்வத்தால் உருவாக்கப்பட்டதால் காற்று, இடி, மின்னல், மழை, வெயில் போன்றவற்றால் இப்பாவையின் அழகு கெடுவதில்லை என நம்பப்பட்டது. அதனால் பூமி நடுங்கினாலும், கொல்லிப்பாவை அழியாது என்ற நம்பிக்கை நிலைபெற்றது. அதனால் அது ‘‘மாயா இயற்கைப்பாவை’’ எனப் புகழப்பட்டது. கொல்லிப்பாவை பேரழகு வாய்ந்தது எனினும். அது தீயோருக்கு அச்சம் தருவது.

இவ்வாறே, நீர்நிலைகளில் உறையும் தெய்வங்கள் பற்றிய சித்தரிப்புகளையும் சங்க இலக்கியத்தில் இடம்பெற்றுள்ளன. ஆறு, ஆற்றின் இடைக்குறையான அரங்கம், கடல், கழிமுகம், குளம், சுனை போன்ற நீர்நிலைகளில் தெய்வங்கள் உறைந்தன. ‘‘அணங்குடை முன்நீர்’’ (அகம், 207:1), ‘‘பெருங்கடல் பரப்பின் அமர்ந்துறை அணங்கு’’ (நற், 155:5-6), ‘‘கடல்கெழுசெல்வி’’ (அகம், 370:12).

{pagination-pagination}

நீர்

இயற்கையாகக் கிடைக்கும் நீர், அது இடத்தில் இருந்தாலும் அது தெய்வமாகப் போற்றப்பட்டது. ஆறு, குளம், ஏரி, கடல், சுனை, ஊற்று, மழை என எவ்விட நீரும் வழிபடப்பட்டது. ஒப்புயர்வற்ற ஆற்றலை நீர் கொண்டுள்ளது என்பதால் நீர் சிறப்பிடத்தைப் பெற்றது. அதனால், தொன்மை மக்களிடையே நீரே முதல் படைப்பு என்ற கருதோட்டமும், அது தூய்மையாக்கத்துக்கு உரிய கருவி, மாற்றத்துக்கு உரிய கருவி என்றும், உயிரூட்டச் சக்தி என்றும், மேலாகத் தீர்ப்பளிக்கும் கருவி என்றும் அதன் மீதான கருத்தோட்டங்கள் எழுந்தன. நீர் எல்லாவற்றுக்கும் அடிப்படையானது என்ற கருத்து, மாந்தரினத்தின் பொது சிந்தனைக்கூறாக உள்ளது.

தமிழகத்தில் நீர் வழிபாடு, ‘‘புண்ணிய நீராடல்’’ என்பதாகவும், ஆடிப்பெருக்கு விழாவாகவும் நிலைபெற்றிருக்கிறது.

பொதுவாக, இலக்கிய ஆசிரியர்களாலும், வரலாற்று ஆசிரியர்களாலும், இத்தெய்வங்கள் தமிழர் பெண் தெய்வங்கள் என்றே குறிக்கப்படுகின்றனர். உண்மையில், இயற்கைப் பொருளின் ஆற்றலுக்கு வழங்கப்பட்ட பெண் உருவங்களே என்பதே தகும்.

வானம்

மாந்தரினத்தில் பெரும்பாலும் முதல் வழிபடு பொருளாக வானம்தான் இருந்திருக்க வேண்டும் என்று மானுடவியலாளர்கள் கருதுகின்றனர். ஜியஸ் (Zes) என்ற கிரேக்கச் சொல்லும், டீயஸ் (Deus) என்ற லத்தீன் சொல்லும், டை (Di) என்ற சம்ஸ்கிருதச் சொல்லும் வானத்தைக் குறிக்கும் சொற்களே.

வானமும் கடவுளும் ஒன்று என்ற கருத்தும், கடவுள் மேகங்களுக்கு அப்பால் இருக்கிறார் என்ற கருத்தும், எல்லா பகுதி மக்களிடையே நிலவிவருவதாகும். தமிழகத்தின் வானத்துடன் தொடர்புடையவனாக ‘‘வருணன்’’ கருதப்படுகிறான். வானமே மழை தருவதால் அவன் மழைக்கடவுளாகவும் விளங்குகிறான்.

நிலம்

நிலம், பெண் தெய்வமாகக் கருதப்படுவதும், வானத்தின் மனைவியாக நிலத்தைக் கருதும் போக்கும் உலகளாவிய பொதுப்பண்பாகும். பூமாதேவி என்பது இந்திய வழக்காகும்.

{pagination-pagination}

சூரியன் - சந்திரன்

சூரிய வழிபாடும், சந்திர வழிபாடும் மற்றொரு உலகாளாவிய பொதுப்பண்பாகும். சூரியனை ஆணாகவும், சந்திரனை பெண்ணாகவும் கருதுவது இவ்வாறானதே. அரிதாக, சூரியனைப் பெண்ணாகவும், சந்திரனை ஆணாகவும் கருதும் போக்கும் உண்டு. குறிப்பாக ஜப்பான், மற்றும் வடஅமெரிக்கப் பகுதி மக்களிடையே இவ்வழக்கு இன்றும் காணப்படுவதாகும். வானக்கடவுளின் துணை தெய்வமாக சூரியனைக் கருதும் போக்கும் உண்டு. போலவே சூரியனையும், சந்திரனையும் தம்பதியினராகக் கருதும் போக்கும் உண்டு.

தமிழர் பண்பாட்டில் முக்கிய இடம் வகிக்கும் பொங்கல் திருவிழாவில், சூரியன் வழிபாடு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. சூரியனுக்கு தனிக்கோயில் எழுப்பிய மரபும் நாம் கண்டுவருவதே. நவக்கிரகங்களில் ஒருவராகவும் சூரியன் இடம்பெறுவார்.

நட்சத்திரம்

நட்சத்திர வழிபாடு, மெசபடோமியா உள்ளிட்ட தொன்மையான சில நாகரிகங்களில் சிறப்புற்றிருந்ததை தொல்லியல் சான்றுகள் காட்டுகின்றன. குறிப்பாக, வெள்ளிமீன் வழிபாடு. நட்சத்திரங்களின் பொதுப்பெயராகவும் வெள்ளி குறிப்பிடப்படும்.

நெருப்பு / தீ

தீ வழிபாடு இன்று பலவகையான வடிவங்களைக் கொண்டுள்ளது. தமிழகத்தில் இது தீமிதி விழாவாகப் பரிணமித்துள்ளது.

தீ-க்கு தனிக்கோயில்கள் அமைக்கப்படவில்லை. ஈரானில் ‘‘ஆதர்’’ என்ற பெயரில் செல்வாக்குமிக்க கடவுளாக தீ விளங்குகிறது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com