10 ஆயிரம் முதலீட்டில் தொழில்கள்!

கையில் கொஞ்சம் காசு இருந்தால் நீதான் முதலாளி என்ற பாடல் வரிகளை நிஜமாக்கும் வகையில், ரூ.10 ஆயிரம் முதலீட்டில் 10 மகத்தான தொழில்களை தொடங்கி வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.
10 ஆயிரம் முதலீட்டில் தொழில்கள்!

கையில் கொஞ்சம் காசு இருந்தால் நீதான் முதலாளி என்ற பாடல் வரிகளை நிஜமாக்கும் வகையில், ரூ.10 ஆயிரம் முதலீட்டில் 10 மகத்தான தொழில்களை தொடங்கி வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.
 சிறிய உணவகங்கள் : குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் நிறைந்த பகுதிகளில், முக்கிய சந்திப்பு இடங்களில், வீட்டிலேயே ஒரு பகுதியை ஒதுக்கி சிறிய அளவிலான உணவகங்களைத் தொடங்கலாம். ரூ.10 ஆயிரம் முதலீடு போதுமானது.
 காலை அல்லது மாலை நேரங்களில் டிபன், டீ, காபி மட்டுமே விற்பனை செய்தாலே, நாளொன்று ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை வருவாய் ஈட்டலாம். செலவுகள் போக மாதம் ரூ.60 ஆயிரம் லாபம் கிடைக்கும்.
 இதே முறையில் ஜூஸ் கடை, பேக்கரி, சிப்ஸ் கடை ஆகியவற்றை தொடங்க முடியும்.
 பிளாக் எழுதுதல்: டிஜிட்டல் உலகில் வீட்டில் இணையதளம் மற்றும் கணினி இருந்து கட்டுரை எழுதும் திறன் இருந்தால், குறைந்தது 500 ரூபாய் முதலீட்டில் இந்தத் தொழிலை தொடங்க முடியும். தனித்துவமாக உங்களது பிளாக் இருக்கும்போது சில மாதங்களில் நீங்கள் நல்ல வருமானத்தை பெற முடியும். இதேபோல, கிராபிக் டிசைன், டிடிபி ஆபரேட்டர், ஆன்-லைன் சேவை மையம் ஆகியவற்றை ரூ.10 ஆயிரம் முதலீட்டிலேயே தொடங்க முடியும்.
 டிராவல் ஏஜென்சி: இந்தியாவில் தற்போது வேகமாக வளர்ந்து வரும் ஒரு தொழிலென்றால் டிராவல் ஏஜென்சி ஆகும். ரயில் , பேருந்து, விமானப் பயணச்சீட்டை பதிவு செய்தல் போன்ற சேவையை ரூ.10 ஆயிரம் முதலீட்டில் அளிக்க முடியும். இதற்கான கிளைச் சேவைகளை பல்வேறு பெரு நிறுவனங்களிடம் பெற முடியும். இல்லையெனில் தனியாகவும் தொடங்கலாம்.
 கிட்ஸ் கேர்: ஆண், பெண் இருபாலரும் கட்டாயம் வேலைக்கு செல்ல வேண்டிய காலத்தில் உள்ளதால், கைக் குழந்தைகளை பாரமரிக்கும் கிட்ஸ் கேர் மையங்களுக்கு மவுசு அதிகம். ரூ.10 ஆயிரம் வாடகைக் கட்டணத்தில் விசாலமாக வீடு கிடைத்தால் போதும் இந்த தொழிலை தொடங்க முடியும். மாநகராட்சி, நகராட்சி மற்றும் சமூக நலத்துறையில் அனுமதி மற்றும் நடத்துபவர்களுக்கு முறையான பயிற்சியோ, அனுபவமோ இருப்பது அவசியம். அமைதியான சூழலில், குழந்தைகளுக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் உபகரணங்களுடன் நல்ல இடம் கிடைத்தால் வருவாய் வந்து வாசல் கதவை தட்டும். குழந்தைகளைப் பராமரிக்கும் நபர்களுக்கான ஊதியம்போக மாதம் ரூ.50 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும்.
 தையலகம்: எம்பிராய்டரி மற்றும் சிறிய அளவிலான தையல் கூடத்தை ரூ.10 ஆயிரம் முதலீட்டில் தொடங்க முடியும். வேலைக்கு 5 நபர்களை கூட அமர்த்திக் கொள்ளலாம். குடிசைத் தொழிலாகப் பதிவு செய்யவும் முடியும். ஆடை வடிவமைப்பு நிறுவனங்களின் ஆர்டர்களை பெற்று லாபம் ஈட்டலாம். குறைந்தபட்சம் மாதம் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை ஆர்டர்களுக்கேற்ப வருமானம் ஈட்டலாம்.
 ஈவன்ட் மேனேஜ்மென்ட்: ரூ.10 ஆயிரம் முதலீட்டில் சிறிய அலுவலகமும், வேலைக்கு 10 ஆள்களும் இருந்தால் போதும் இந்த நிறுவனத்தை தொடங்கிவிட முடியும். பந்தல்கால் நடுவதில் தொடங்கி பந்தி வரைக்கும் அனைத்தும் செய்துதர முடியும்.
 எல்லா நிகழ்வுகளுக்கும் மக்கள் விரும்பும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்து தருவதால் இந்த தொழிலுக்கு தற்போது சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. பெரு நிறுவனங்கள் பலவும் இத் தொழிலை தொடங்கியுள்ள நிலையில் சிறிய அளவில் சேவையாக தொடங்கும் வாய்ப்புள்ளது. மாதத்துக்கு குறைந்தபட்சம் 5 நிகழ்ச்சிகளை நடத்தி தந்தாலே அனைத்து செலவுகளும்போக (ஊழியர்கள் ஊதியமும் சேர்த்து) ரூ.30 ஆயிரம் லாபம் உறுதி.
 செயற்கை பூக்கள் கடை: இயற்கையான பூக்களால் தயாரிக்கப்படும் பொக்கேக்களின் ஆயுள், சில நாள்களில் முடிந்து விடுகிறது. நிரந்தரமாக வீட்டை அலங்கரிக்கும் வகையில் தயாரிக்கப்படும் செயற்கை பூ பொக்கேகளுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. செயற்கையாக சிங்கிள் ரோஸ் பொக்கேகளை தயாரித்து விற்பது லாபகரமானது. தரை, சேரில் அமர்ந்தோ அல்லது டேபிளில் வைத்தோ தயாரிக்கலாம் என்பதால் வீட்டின் சிறிய அறை போதுமானது. பெரிய அளவில் முதலீடு தேவையில்லை. ரூ.10 ஆயிரம் போதுமானது. கலை உணர்வும், திறமையும் தான் முதலீடு. மாதம் ரூ.20 ஆயிரம் லாபம் ஈட்ட முடியும்.
 சோப் தயாரிப்பு: குடிசைத் தொழிலாக வீட்டிலேயே தொடங்கலாம். ஒரு நாளைக்கு 800 கிலோ சோப் வீதம் மாதம் 25 நாளில் 20 டன் தயாரிக்கலாம். . ஒரு டன் சோப் தயாரிக்க குறைந்தது ரூ.28,850 செலவாகும்.ஒரு டன் சோப்பை ரூ.30 ஆயிரத்துக்கு டீலர்களுக்கு விற்கலாம். டன்னுக்கு ரூ.1150 வீதம் 20 டன்னுக்கு மாத லாபம் ரூ.23 ஆயிரம். நேரடியாக கடைகளுக்கு சப்ளை செய்தால் லாபம் இரு மடங்காகும். உற்பத்தியை அதிகரித்தால் அதற்கேற்ப லாபம் கூடும்.
 கிரிஸ்டல் நகை தயாரிப்பு: ஒரு நபர் ஒரு நாளில் 8 மணி நேரத்தில் சிறிய அளவு கிரிஸ்டல் நகை 50 தயாரிக்கலாம். நடுத்தர அளவு என்றால் 15, பெரிய அளவு என்றால் 20 தயாரிக்க முடியும். சிறிய அளவு நகைக்கு ரூ.90 முதல் ரூ.110 வரை செலவாகும். நடுத்த அளவுக்கு ரூ.150 முதல் ரூ.160 வரையும், பெரிய அளவுக்கு ரூ.200ம் செலவாகும். சிறிய அளவிலான 50 கிரிஸ்டல் நகைகள் தயாரிக்க உற்பத்தி செலவு ரூ.5,500. நடுத்தர அளவில் 15 நகைகள் தயாரிக்க ரூ.2,600 செலவாகும். பெரிய அளவிலான 20 நகைகள் தயாரிக்க ரூ.4,000 தேவைப்படும். அனைத்து வகைகளையும் கலந்து தயாரிக்க சராசரியாக ரூ.5 ஆயிரம் போதும். ஒரு நாள் உற்பத்தியாகும் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான கிரிஸ்டல் நகைகளை குறைந்தபட்சம் 30 சதவீதம் கூடுதல் விலை வைத்து விற்க முடியும். இதன் மூலம் ஒரு நாள் வருவாய் ரூ.6,500 இதில் லாபமாக ரூ.1,500 கிடைக்கும்.
 பிரட் தயாரிப்பு: மைதா மாவு, சர்க்கரை, நெய் அல்லது வனஸ்பதி, ஈஸ்ட் போன்ற மூலப்பொருட்களைக் கொண்டு பிரட், பிஸ்கெட், கேக் போன்றவற்றைத் தயாரிக்க வேண்டும். இதனோடு கைதேர்ந்த மாஸ்டர்களைக் கொண்டு பஃப்ஸ், சிப்ஸ் போன்ற நொறுக்குத் தீனிகளை சைடு பிஸினஸாக விற்றுக் கொள்ளலாம். கிடைக்கும் வருவாய்க்கு ஏற்ப தொழிலை விரிவுபடுத்த முடியும்.
 தக்காளி ஊறுகாய் தயாரிப்பு: ஒரு கிலோ தக்காளியில் ஊறுகாய்க்கு தேவையான பொருள்களை சேர்த்து தயாரித்தால், 750 கிராம் ஊறுகாய் கிடைக்கும். இன்றைய சந்தையில் 250 கிராம் தக்காளி ஊறுகாய் ரூ.22 முதல் 30 ரூபாய் வரை விலை வைத்து விற்கப்படுகிறது.
 குறைந்தபட்சம் ரூ.20 விலை கிடைத்தாலும் 750 கிராம் ஊறுகாய்க்கு ரூ.60 வருமானம் கிடைக்கும். இதற்கான தயாரிப்புச் செலவுக்கு ரூ.30 செலவிட்டாலும் மீதம் 30 ரூபாய் கிடைக்கும். மளிகை பொருள்கள் விற்பனை செய்யும் பெரு நிறுவனங்களோடு தொடர்பு வைத்துக் கொண்டால் தொடர்ந்து விற்பனை வாய்ப்பு கிடைக்கும். லாபமும் கூடுதலாக கிடைக்கும்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com