புத்துயிரை எதிர்நோக்கி சிறு, குறு தொழில் நிறுவனங்கள்

மத்திய அரசின் நவரத்தின நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்வது, "பெல்' என்று அறியப்படும் பாரத மிகுமின் நிறுவனம்.
புத்துயிரை எதிர்நோக்கி சிறு, குறு தொழில் நிறுவனங்கள்
Updated on
2 min read

மத்திய அரசின் நவரத்தின நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்வது, "பெல்' என்று அறியப்படும் பாரத மிகுமின் நிறுவனம்.

தமிழகத்தில் திருச்சி, ராணிப்பேட்டை உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெல் நிறுவனத்தின் உற்பத்தி மையங்கள் இயங்கி வருகின்றன.

நாட்டின் மின் உற்பத்திக்குத் தேவையான பல்வேறு வகையான உற்பத்தி சாதனங்கள், நீராவி கொதிகலன்கள், அனல் மின் உற்பத்தி சாதனங்கள், காற்றாலை உற்பத்திக்கான ஜெனரேட்டர்கள், பிற சாதனங்கள், பர்னர்கள், பாய்லர் டிரம்கள், வால்வுகள் உள்ளிட்டவற்றின் தயாரிப்பில் பெல் முக்கியப் பங்காற்றி வருகிறது.

திருச்சியில் கடந்த 1968-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பெல் நிறுவனம், திருவெறும்பூர், அரியமங்கலம், துவாக்குடி, மண்டையூர், புதுகுடி போன்ற பகுதிகளில் பெல் நிறுவனத்தைச் சார்ந்து சுமார் 500 சிறு தொழில் நிறுவனங்கள் இயங்கி வந்தன.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பொருளாதாரத் தேக்கம், பெல் நிறுவனத்துக்கு கிடைத்தவந்த ஆர்டர்கள் குறைவு போன்ற காரணங்களால், பெல்லை சார்ந்து இருந்த குறு,சிறு தொழில் நிறுவனங்கள் பாதிப்பை சந்திக்க ஆரம்பித்தன.

தற்போதைய நிலையில் சுமார் 150 சிறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு, ஏராளமானார் வேலைவாய்ப்பை இழந்தனர். திருச்சி பெல் நிறுவனத்துக்கு 15 முக்கிய மின் திட்டங்களுக்கான ஆர்டர்கள் அண்மையில் கிடைத்துள்ளன.

அவற்றில் குறிப்பிடத் தக்கவை - ரூ. 1600 கோடி மதிப்பீட்டில் 250 மெகாவாட்டில் ரூர்கேலா மின் உற்பத்தித் திட்டம், ரூ. 4614 கோடியில் விஜயவாடாவில் 1600 மெகாவாட் மின் உற்பத்தித் திட்டம், ரூ. 3000 கோடியில் விசாகப்பட்டினத்தில் 1000 மெகாவாட் மின் உற்பத்தித் திட்டம், தெலங்கானா மாநிலத்தில் ரூ.17,950 கோடியில் 5880 மெகாவாட் மின் உற்பத்தித் திட்டங்கள், ரூ. 8000 கோடியில் உடன்குடியில் 3960 மெகாவாட் மின் உற்பத்தித் திட்டம், ரூ. 5600 கோடியில் ராமநாதபுரத்தில் 1600 மெகாவாட் மின் உற்பத்தித் திட்டம் ஆகியன.

இதனால், பழைய ஒப்பந்த முறைய ரத்து செய்துவிட்டு, வழிகாட்டி விலைப்படி பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகளை முடிவு செய்து, அதன்படி பணிகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பெல்சியா (பெல் சிறு தொழில்கள் சங்கம்) வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக பெல்சியா தலைவர் எஸ். அசோக் சுந்தரேசன் கூறியதாவது:

ஓஎன்ஜிசி, ரயில்வே, பாபா அணு மின் நிலையம் போன்ற நிறுவனங்களில் எந்த பணிகளை மேற்கொண்டால் எவ்வளவு விலை நிர்ணயித்து ஒப்பந்தப் புள்ளி கோர வேண்டும் என்ற விதிகள் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், பெல் நிறுவனத்திலும் வழிகாட்டி விலைப்படி ஒப்பந்தப் புள்ளிகளைக் கோர வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.

மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், பெல் நிறுவனத்தின் தலைவர் ஆகியோரை சந்தித்து இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளோம்.

வழிகாட்டி விலைப்படி ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு பணிகள் வழங்கப்பட்டால், குறு, சிறு தொழில் நிறுவனங்கள் மீண்டும் புத்துணர்ச்சி பெறும் என்றார் அவர்.

வழிகாட்டி விலைப்படி ஒவ்வொரு பணிகளுக்கும் விலை நிர்ணயித்து ஒப்பந்தம் கோரப்படும்போது, குறு, சிறு தொழில் நிறுவனங்களை நடத்துவோருக்கு பல பிரச்னைகள் இருக்காது. நஷ்டத்தில் உற்பத்தி சாதனங்களைத் தயாரித்து வழங்காமல், கட்டுப்பாடியாகும் விலையில் உரிய காலத்தில் தயாரித்து வழங்க முடியும்.

பெல் நிறுவனமும் தங்களது உற்பத்தி பொருள்களை குறிப்பிட்ட காலத்துக்குள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கிட முடியும். வேலைவாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்கும் என்றார் அசோக் சுந்தரேசன்.

இந்த நிலையில், பெல் நிறுவனத்தைச் சார்ந்து உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டு வருவோர் சார்பில் மேலும் ஒரு கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.

பெல் நிறுவனத்திடமிருந்து உற்பத்திச் சாதனங்களைத் தயாரித்து வழங்குவதற்காக ஆர்டர்களைப் பெறும் குறு, சிறு தொழில் நிறுவனங்கள், உற்பத்திப் பொருள்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கே நேரடியாக வழங்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. இதனால் போக்குவரத்து செலவு அதிகரிப்பு, கால தாமதம் போன்ற சவால்களை அந்தச் சிறு,குறு நிறுவனங்கள் எதிர்கொண்டு வருகின்றன.

பெல்லிடம் உள்ள வசதிகள் மூலம் விரைவாக உற்பத்தி சாதனங்களை அனுப்ப முடியும். பெல் சார்பாக உற்பத்தி செய்யப்பட்ட ஆர்டர் சாதனங்களை பெல் நிறுவனமே ஏற்று டெலிவரி செய்ய வேண்டும். எங்களது கோரிக்கையை செயல்படுத்த பெல் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறு,குறு தொழில்களை நடத்தி வருவோர் வலியுறுத்துகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com