நாடு முழுவதும் 31 பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு அனுமதி அளித்து 17 தனியார் நிறுவனங்கள், 4 மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், ஒரு வெளிநாட்டு நிறுவனத்துடன் மார்ச் 27-இல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது மத்திய பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம். இவற்றில் புதுக்கோட்டை மாவட்டம்- நெடுவாசலும், புதுவை யூனியன் பிரதேசம்- காரைக்காலும் தமிழ்நாடு படுகையில் வருபவை.
நாடு முழுவதும் 10 படுகைகளில் (அஸ்ஸாம்- 9, குஜராத்- 5, தமிழ்நாடு- 2, ஆந்திரம்- 4, ராஜஸ்தான்- 2, ம.பி.- 1, மும்பை- 1 மும்பை கடற்பகுதி- 5, கட்ச் கடற்பகுதி- 1, கிருஷ்ணா-கோதாவரி -1) ஹைட்ரோகார்பன் எடுக்க உள்ள நிலையில் தமிழகத்தில் மட்டுமே இத்திட்டத்துக்கு எதிர்ப்பு காணப்படுகிறது. இதன் பின்னணியில் திட்டம் குறித்த தவறான புரிதல்கள் இருப்பதை மறுக்க முடியாது.
முதலில் இவ்விஷயத்தை நாம் உணர்வுப்பூர்வமாக அன்றி, அறிவியல்பூர்வமாக அணுக வேண்டும். அதற்கு அரசியல் லாவணி தவிர்க்கப்படுவதும் அவசியம். முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது (2009) ஹைட்ரோகார்பன் கண்டுபிடிப்பு மற்றும் துரப்பணத்துக்கு அனுமதி அளிக்கப்பட்ட இடம்தான் நெடுவாசல்.
பொதுவாகவே விவசாய நிலங்களை அரசுப் பயன்பாட்டுக்காக கையகப்படுத்தினால், அந்த நிலத்துக்கு உரிய விலையும் நஷ்டஈடும் அரசால் கொடுக்கப்படுவதில்லை. இதற்கு முன்னர் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு அரசு உரிய தொகையை சரியான நேரத்தில் அளித்திருந்தால், இப்போது நெடுவாசலில் பிரச்னையே நேரிட்டிருக்காது என்பது விஷயம் அறிந்தவர்களின் கருத்து.
நமது தேவையும் இறக்குமதியும்
எரிவாயு உற்பத்தியில் இந்தியா ஓரளவுக்கு தன்னிறைவு அடைந்துள்ளது. 1950-களில் இந்தியாவில் 69 டிரில்லியன் (லட்சம் கோடி) கனஅடி இயற்கை எரிவாயு இருப்பது கண்டறியப்பட்டது. அதில் 42 டிரில்லியன் கன அடி தற்போது பயன்படுத்தப்படுகிறது. ஆனால், முக்கிய திரவ எரிபொருள்களுக்கு அடிப்படையான கச்சா எண்ணெய்க்கு (பெட்ரோலியம்) நாம் இன்னமும் வெளிநாட்டு இறக்குமதியையே சார்ந்துள்ளோம்.
நாட்டில் பெட்ரோலியம் இருப்பதாகக் கண்டறியப்பட்ட 26 படுகைகளில் 7-இல் மட்டுமே முழு அளவில் தற்போது உற்பத்தி நடைபெறுகிறது. இவற்றில் இன்னமும் 75 சதவீத இயற்கைவளம் பயன்படுத்தப்படாமல் உள்ளது.
உலக அளவில் பெட்ரோலியத்தைப் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாமிடம் (தினசரி தேவை- 4.45 லட்சம் பீப்பாய்) வகிக்கிறது. ஆனால் தேவையுடன் உற்பத்தியை ஒப்புநோக்கினால் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு. நமது தேவையில் சுமார் 90 சதவீதத்தை இறக்குமதி மூலமாகவே நிறைவு செய்கிறோம்.
2014-15-இல் இந்தியா ரூ. 7 லட்சம் கோடி மதிப்புக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது (189.4 மில்லியன் டன் கச்சா எண்ணெய்). நமது ஒட்டுமொத்த இறக்குமதியில் பெட்ரோலிய இறக்குமதியின் அளவு 60 சதவீதமாகும். இதனால் நமக்கு ஆண்டுதோறும் வர்த்தகப் பற்றாக்குறை ஏற்படுகிறது. வரும் ஆண்டுகளில் இந்நிலை மேலும் அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம்.
புதிய திட்டங்களின் நோக்கம்
இந்தியாவில் ஏற்கெனவே கண்டறியப்பட்டு எடுக்கப்படாமல் உள்ள கச்சா எண்ணெய் வளத்தைப் பயன்படுத்த பல முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. உலக அளவில் பெட்ரோலிய இருப்பு குறைந்துவரும் நிலையில் இது தவிர்க்கப்பட முடியாத நடவடிக்கையும் கூட.
இந்தியாவில் ஹைட்ரோகார்பன் இயக்குநரகத்தின் கீழ் 26 படுகைகளில் பெட்ரோலியம், எரிவாயு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், பெரிய அளவிலான துரப்பணத் திட்டங்களை மேற்கொள்ளும் அளவுக்கு நமது நாட்டில் கச்சா எண்ணெய் வளம் (மும்பை கடற்பகுதி, கட்ச் வளைகுடா தவிர்த்து) இல்லை. எனவே, கண்டுபிடிக்கப்பட்ட சிறு எண்ணெய் வயல்கள் திட்டம் (ஈண்ள்ஸ்ரீர்ஸ்ங்ழ்ங்க் நம்ஹப்ப் ஊண்ங்ப்க்-ஈநஊ) மத்திய அரசால் உருவாக்கப்பட்டது.
இதன் நோக்கம், குறைந்த முதலீட்டில் நாட்டின் இயற்கைவளத்தைப் பயன்படுத்துவதாகும். இத்திட்டத்தில் தான் நெடுவாசல் வருகிறது. இங்குள்ள இயற்கைவளத்தின் பரப்பளவு 10.4 சதுர கி.மீ. இங்கு 4,30,000 டன் இயற்கை எரிவாயுவும் அதே அளவுக்கு கச்சா எண்ணெயும் இருக்கின்றன.
இதற்கு முன் புதிய துரப்பண உரிமக் கொள்கை (சஉகட) நடைமுறையில் இருந்தபோது (1997- 2016), அதன் கெடுபிடியான விதிமுறைகளால், எண்ணெய் உற்பத்தி அதிகரிக்கவில்லை. இந்நிலையை மாற்ற தற்போதைய மத்திய அரசு திட்டமிட்டு, சிறு எண்ணெய் வயல்கள் திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் நிலப்பகுதிகளில் 26 இடங்களும், கடற்பகுதியில் 20 இடங்களும் கண்டறியப்பட்டு, அவற்றில் தனியார் பங்களிப்புடன் எண்ணெய் வயல்களை உருவாக்கத் திட்டமிடப்பட்டது.
இதன் நோக்கம், 2022-இல் நமது நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 10 சதவீதத்தைக் குறைப்பது என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதற்காக அரசின் விதிமுறைகளில் தளர்வு செய்யப்பட்டு, "இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தில் தொழில் முனைவோருக்கு பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த 31 வயல்களிலிருந்தும் தினசரி 15,000 பீப்பாய் கச்சா எண்ணெயும், 20 லட்சம் கனஅடி எரிவாயுவும் கிடைக்கும் என்றும், அதன் மூலமாக, ரூ.46,400 கோடி நிகர வருவாய் கிடைக்கும் என அரசு மதிப்பிடுகிறது.
இதில் காப்புரிமத் தொகையாக
ரூ. 5,000 கோடியும், வருவாய்ப் பங்காக ரூ. 9,300 கோடியும் அரசுக்குக் கிடைக்கும். வருவாய்ப் பகிர்வு அடிப்படையில் எண்ணெய் வயலை அமைக்கும் நிறுவனமும் லாபம் பெறும். தவிர, 37,500 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும்.
நடுநிலையான தீர்வு...
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை விவசாயிகள் எதிர்ப்பதற்கு, அவர்களது நில உரிமை பாதிப்புக்குள்ளாவது முக்கிய காரணம். அதற்கேற்ற வகையில் விவசாயிகளுக்கு ஈட்டுத்தொகையும் வேலைவாய்ப்பும் அளிக்கப்பட்டால், எதிர்ப்பு இருக்காது. அப்பகுதியில் கிடைக்கும் இயற்கை வளத்தின் மதிப்பில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை நில உரிமையாளர்களுக்கும், வட்டார மக்களுக்கும் பகிர்ந்து வழங்குவது சிறப்பான தீர்வாக இருக்கும்.
இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்பதிலோ, விவசாய நிலங்கள் காக்கப்பட வேண்டும் என்பதிலோ யாருக்கும் மாற்றுக்கருத்து கிடையாது.
ஆனால், ஹைட்ரோகார்பன் போன்ற இயற்கை வளங்கள் எல்லா இடங்களிலும் கிடைக்காது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். நெடுவாசலில் இதை எடுக்க எதிர்ப்புத் தெரிவிக்கும் அனைவருமே, பெட்ரோலியப் பொருள்களின் உதவியுடன் வாழ்பவர்கள் தான்.
முன்னொரு காலத்தில் சிக்கிமுக்கிக் கல்லை உரசி நெருப்பை உருவாக்கினான் மனிதன். உலகை வெல்லும் பயணத்தில் அதுவே அவனது முதலடி. பிறகு காட்டை அழித்து நாடாக்கினான் மனிதன். இயற்கை வளங்களைக் கொண்டு, தனது பகுத்தறிவாலும், விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளாலும் புதிய உலகை அவன் அமைத்திருக்கிறான். இந்தத் தொடர் பயணத்தை நிறுத்தவோ, மீண்டும் காட்டு வாழ்க்கைக்குத் திரும்பவோ யாராலும் இயலாது என்பது நிதர்சனம்.
நமது எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்ய பிற நாடுகளை சார்ந்திருப்பதும் ஆபத்தானது. எனவே, ஹைட்ரோகார்பன் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளுடன் விவசாயிகள் விரிவாகப் பேசி, தங்களுக்கு சாதகமான பலன்களைப் பெறுவதுதான் விவேகமாக இருக்கும். ஹைட்ரோகார்பன் எடுக்கப்படும் இடம் தவிர்த்து சுற்றுப்புற நிலத்தில் விவசாயம் செய்ய அனுமதி பெறுவதும் கூட சாத்தியமானதே.
விவசாயிகள் தங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டும். ஏனெனில், இது அவர்களது எதிர்காலம் மட்டுமல்ல... நம் அனைவருடையதும் கூட.
பெட்ரோலியம் தேவை, உற்பத்தி, இறக்குமதி
தேவை
கச்சா எண்ணெய் 233 மில்லியன் டன்
எரிவாயு 47.85 பில்லியன் கன மீட்டர்
பெட்ரோலியப் பொருள்கள் 184.674 மில்லியன் டன்
உற்பத்தி
கச்சா எண்ணெய் 36.950 மில்லியன் டன்
எரிவாயு 32.249 பில்லியன் கன மீட்டர்
பெட்ரோலியப் பொருள்கள் 231.92 மில்லியன் டன்
இறக்குமதி
கச்சா எண்ணெய் 202.851மில்லியன் டன்
(மதிப்பு: ரூ. 4.16 லட்சம் கோடி)
எரிவாயு 16.558 மில்லியன் டன்
(ரூ. 456 கோடி)
பெட்ரோலியப் பொருள்கள் 28.3 மில்லியன் டன்
(குறிப்பு: கச்சா எண்ணெய் விலைச்சரிவால் 2014-15-இல் ரூ. 7 லட்சம் கோடியாக இருந்த இறக்குமதி மதிப்பு 2015-16-இல் ரூ. 4.16 லட்சம் கோடியாகக் குறைந்தது)
இருப்பு
கச்சா எண்ணெய் 754 மில்லியன் டன்
எரிவாயு 1497 பில்லியன் கன மீட்டர்
திடீர் எதிர்ப்புக்கு காரணம் என்ன?
தமிழகத்தின் நெடுவாசலிலும், புதுவையின் காரைக்காலிலும், இத்திட்டத்துக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. 2009-இல் இப்பகுதியில் நிலத்தைக் கையகப்படுத்தியபோது, விவசாயிகளிடம் குத்தகை அடிப்படையில் விலை பேசப்பட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. சம்பந்தப்பட்ட இடங்களில் அடிப்படை சோதனைகள் நடைபெற்று இயற்கை வளத்தின் அளவு கணக்கிடப்பட்டுவிட்டது.
ஆனால், இங்கு எண்ணெய் வயல்கள் அமைக்கப்பட்டால், விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்ற பிரசாரம் தற்போது எழுந்துள்ளது. தவிர கச்சா எண்ணெய் உறிஞ்சப்படுவதால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படும் என்ற அச்சமும் உருவாகியுள்ளது. கச்சா எண்ணெய் எடுக்கப்படும்போது உருவாகும் வீழ்படிவால் மண்வளம் பாதிக்கும்; அதிக அளவு தண்ணீர் பயன்படுத்தப்படுவதால் விவசாயிகள் பாதிக்கப்படுவர் என்றும் எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.
பாறை எரிவாயுவுடன் (ஷேல் காஸ்) இயற்கை எரிவாயுவை அவர்கள் குழப்பிக் கொள்கின்றனர். பாறை எரிவாயு, அதிக ஆழத்தில் கடினமான பாறை அடுக்குகளிடையே இருந்து மிகுந்த அழுத்தம் கொடுத்து வெளியே எடுக்கப்படுவதாகும். மாறாக, நெடுவாசலிலும் காரைக்காலிலும் மென்பாறை அடுக்குகளிடையே உள்ள எரிவாயுவும் கச்சா எண்ணெயும் எடுக்கப்படுகின்றன. இவற்றை எடுக்க அதிக புற அழுத்தம் அளிப்பதோ, அதிக தண்ணீரோ தேவையில்லை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதேபோல, இந்த சிறு எண்ணெய் வயலை அமைக்க 120 அடி நீளமும் 120 அகலமும் கொண்ட மிகக் குறைந்த அளவு இடமே போதுமானது. நமது நிலத்தடி நீர்மட்டம் அதிகபட்சம் 300 மீட்டர் (1000 அடி) வரை உள்ளது. அதுவரை மட்டுமே நம்மால் ஆழ்குழாய்க் கிணறு அமைக்க முடியும். ஆனால், கச்சா எண்ணெயோ 1000 மீட்டர் (3000 அடி) ஆழத்துக்குக் கீழேதான் பெறப்படுகிறது. எனவே நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட வாய்ப்பில்லை என்கின்றனர் பெட்ரோலிய அமைச்சக அதிகாரிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சமூக மாற்றத்துக்கான உன்னத பணி - ராமதாஸ்

புதுகையில் ரூ. 15 கோடியில் புதுப்பிக்கப்பட்ட மாவட்ட நீதிமன்ற வளாகம் இன்று திறப்பு

மருத்துவக் கல்லூரிக்கு உடல் தானம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்றைய மின்நிறுத்தம்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


