

மக்கல் மண்டலத்தில் கடந்த 2 ஆண்டுகளாக முட்டை விலை சராசரி உயர்ந்து வருவதால், கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேல் குஞ்சு விடுவதை பாதியாக குறைத்துக் கொண்ட பண்ணையாளர்கள், இப்போது மீண்டும் முழுமையான எண்ணிக்கைக்கு குஞ்சுகளை விட தயாராகி வருகின்றனர்.
நாமக்கல் மண்டலத்தில் 1,000-க்கும் மேற்பட்ட முட்டை கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 4 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இவற்றின் மூலம் தினமும் சுமார் 3 கோடி முட்டைகள் பெறப்படுகின்றன. சுமார் 1 கோடி முட்டைகள் தமிழக சத்துணவுத் திட்டம் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன. 2 கோடி முட்டைகளில் சுமார் 1 கோடி அளவு கேரளத்துக்கும், 1 கோடி முட்டை புது தில்லி, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், ஆந்திரம், கர்நாடகம், ஒடிஸா ஆகிய மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
கோழிக்குஞ்சுகள் விடுவது குறைப்பு
முட்டை உற்பத்திக்காக, 16-18 வார வயதுடைய கோழிகள் விடப்படுகின்றன. அந்தக் கோழிகள், தொடர்ந்து ஒன்றரை ஆண்டுகள் வரை முட்டையிடுகின்றன. ஒரு கோழி சராசரியாக 320 முட்டைகள் இடுகிறது.
முட்டை உற்பத்தியை அதிகரிக்க, மக்காச்சோளம், சோயா உள்ளிட்ட மூலப் பொருள்கள் அடங்கிய தீவனங்கள், கோழிகளுக்கு வழங்கப்படுகின்றன. இவ் வகை தீவனங்களின் விலை கடந்த 10 ஆண்டுகளில் கடுமையாக உயர்ந்துள்ளது.
மழைப்பொழிவு இல்லாததால், மக்காச்சோளம் உள்ளிட்ட மூலப் பொருள்கள் உற்பத்தி குறைந்துள்ளது. இது கோழித் தீவனங்களின் விலையேற்றத்துக்கு வழிவகுத்துள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு 75 கிலோ எடை கொண்ட கோழித் தீவன மூட்டையின் விலை சராசரியாக ரூ.770 ஆகஇருந்தது. இது நிகழாண்டில் ரூ.1,605 ஆக உயர்ந்துள்ளது.
இதன்படி, கடந்த 10 ஆண்டுகளில் கோழித் தீவனத்தின் விலை 100 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது என முட்டை விலையை நிர்ணயம் செய்யும், நாமக்கல் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (என்இசிசி) தெரிவித்துள்ளது. கோழித் தீவனத்தின் விலை ஏற்றம் காரணமாக முட்டை விலையை உயர்த்த வேண்டிய நிலைக்கு பண்ணையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால் 50 ஆயிரத்துக்கும் குறைவான எண்ணிக்கையில் கோழிகளை வளர்க்கும் சுமார் 600 பண்ணையாளர்கள் கடந்த 5 ஆண்டுகளில் முட்டைக் கோழிக் குஞ்சுகள் விடுவதை 50 சதவீதமாகக் குறைத்துக்கொண்டனர். கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 100 கோழிப் பண்ணைகள் மூடப்பட்டுவிட்டன.
மேலும், பண்ணையாளர்கள் பண்ணைப் பராமரிப்பு, தண்ணீர்ப் பிரச்னை, தொழிலாளர்கள் பற்றாக்குறை, வெளி மாநில தொழிலாளர்களால் ஏற்பட்ட பிரச்னைகள் என பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வந்தனர்.
இதுபோன்ற காரணங்களினால் பண்ணையாளர்கள் தொழிலில் முழுமையான கவனத்தைச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் முட்டை உற்பத்தி குறைந்தது. கடந்த 2013 ஆம் ஆண்டில் 3.37 கோடியாக இருந்த முட்டை உற்பத்தி, 2014இல் 3.14 கோடியாகவும், 2015இல் 3.06 கோடியாகவும், 2016இல் 2.85 கோடியாகவும் சரிந்தது.
2 ஆண்டுகளாக சாதகமான சூழல்
தீவனச் செலவு, பண்ணைப் பராமரிப்பு போன்ற செலவுகள் காரணமாக சராசரியாக ரூ.3.50-க்கு குறைவாக முட்டை விலை இருக்குமானால், பண்ணையாளர்களுக்கு நஷ்டம் தான். கடந்த 2012 முதல் 2015 ஆண்டு வரையிலான 4 ஆண்டுகளில் முட்டை விலை சராசரி ரூ.3.50-க்கு குறைவாகவே உள்ளது. 2012-ஆம் ஆண்டில் ரூ.2.92 ஆகவும், 2013-இல் ரூ.3.39 ஆகவும், 2014-இல் ரூ.3.15-ஆகவும், 2015-இல் ரூ.3.18-ஆகவும் இருந்தது, கடந்த ஆண்டு ரூ.3.80-ஆக உயர்ந்தது. நிகழாண்டில் அக்டோபர் மாதம் வரை ரூ.3.81-ஆக இருந்தது, இப்போது முட்டை விலை ஐந்த ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளதால், ஆண்டு சராசரி விலை ரூ.4-க்கும் மேல் உயர வாய்ப்புள்ளது என்கின்றனர் பண்ணையாளர்கள்.
உற்சாக மனநிலையில் பண்ணையாளர்கள்
இதுகுறித்து தமிழ்நாடு முட்டைக் கோழிப் பண்ணையாளர்கள் சங்க தலைவர் சி.கே.சின்ராஜ் தெரிவித்தது: தேவை அதிகரித்துள்ள நிலையில், முட்டை உற்பத்தி குறைந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக குஞ்சு விடுவதைக் குறைத்துக்கொண்ட பண்ணையாளர்கள், இப்போது பண்ணையின் வளர்ப்பு எண்ணிக்கை அளவுக்கு முழுமையாக குஞ்சுகளை விடத் தொடங்கியுள்ளனர்.
இந்த குஞ்சுகள் 5 மாதங்களுக்குப் பிறகே பலன் தரும். மேலும், வரும் ஜனவரி மாதம் வட மாநிலங்களில் குளிர் கடுமையாக இருக்கும் நிலையில், முட்டை தேவை உடனடியாக குறையாது. இருப்பினும், தமிழகத்தில் இன்னும் 2 மாதங்கள் விரத காலம் என்பதால், முட்டை நுகர்வு குறைந்துள்ளது. இருப்பினும், வட மாநிலங்களில் முட்டை நுகர்வு அதிகரித்துள்ளதால், இன்னும் 3 மாதங்களுக்கு முட்டை விலை ரூ.4-க்கு கீழ் குறைய வாய்ப்பில்லை என்றார்.
முட்டைக்கோழி வளர்ப்பில் தீவனச் செலவு பெரும் சவாலாக உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் தீவன விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் தீவன விலை 100 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. இதனால் மத்திய அரசு தானியக் கிடங்குகளில் வீணாகும் நிலையில் உள்ள கோதுமை, அரிசி உள்ளிட்டவற்றை குறைந்த விலைக்கு கோழிப் பண்ணையாளர்களுக்கு வழங்க வேண்டும். இந்த கோரிக்கை குறித்து கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் மத்திய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் எந்த பலனும் இல்லை என்றார்.
முட்டை ஏற்றுமதி மானியத்தை மீண்டும் வழங்க கோரிக்கை
முட்டை ஏற்றுமதிக்கான மானியத் தொகையை மத்திய அரசு நிறுத்தியதால், ரூ.450 கோடியாக இருந்த வர்த்தகம் ரூ.150 கோடியாகக் குறைந்துள்ளதாக முட்டை ஏற்றுமதியாளர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து, கால்நடை மற்றும் விவசாயப் பண்ணையாளர்கள் வர்த்தக சங்க பொதுச் செயலர் டாக்டர் பி.வி.செந்தில் கூறியது: நாமக்கல் மண்டலத்தில் இருந்து 2007-08ஆம் ஆண்டில், பக்ரûன், ஓமன், குவைத், கத்தார் உள்ளிட்ட, 11 வளைகுடா நாடுகளுக்கும், ஆப்கானிஸ்தான், ஆப்பிரிக்க நாடுகளுக்கும் மாதம்தோறும் 12 கோடி முதல் 15 கோடி முட்டைகள் வரை ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.
இந் நிலையில், 6 மாதங்களாக இருந்த முட்டை காலாவதி காலத்தை, 3 மாதங்களாகக் குறைக்கப்பட்டதால், இந்திய முட்டைகள் ஏற்றுமதி செய்வது குறைக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளின் நிர்பந்தத்தால் குவைத், கத்தார், ஈரான், துபை போன்ற வளைகுடா நாடுகளுக்கு கடந்த 3 ஆண்டுகளாக முட்டை ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது.
இந் நிலையில், போக்குவரத்து செலவின மானியத் தொகையை மத்திய அரசு நிறுத்தி உள்ளதால், ஏற்றுமதி குறைக்கப்பட்டு கோழிப்பண்ணையாளர்கள் நெருக்கடியைச் சந்திக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்திய முட்டைகளுக்கு வரவேற்பு இருந்ததால் ஏற்றுமதி அதிகரித்தது. முட்டை விலை உயர்ந்த நிலையில், ஐரோப்பிய நாடுகள் தங்களது சந்தையை விரிவுப்படுத்தும் நோக்கில், குறைந்த விலைக்கு முட்டையை இறக்குமதி செய்து, வளைகுடா நாடுகளுக்கு நிர்பந்தம் செய்ததால் இந்தியா முட்டை இறக்குமதிக்கு அந்த நாடுகள் தடை விதித்தன.
முட்டை ஏற்றுமதி செய்வதற்காக மத்திய அரசு போக்குவரத்து மானியமாக 33 சதவீதம், செலுத்தப்பட்ட வரியை திருப்பிக் கொடுத்தல் ஒரு சதவீதம் என மொத்தம் 34 சதவீதம் மானியம் வழங்கியது. கடந்த 2 ஆண்டுகளாக இந்த மானியத்தை மத்திய அரசு நிறுத்தி உள்ளது.
இதனால் கடந்த 2010-ஆம் ஆண்டு ரூ.450 கோடியாக இருந்த வர்த்தகம், தற்போது ரூ.150 கோடியாகக் குறைந்துள்ளது. இதனால் முட்டை ஏற்றுமதி செய்யும் கோழிப்பண்ணையாளர்கள் மிகுந்த நெருக்கடியை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பண்ணையாளர்களின் நிலையை கருத்தில் கொண்டும், முட்டை ஏற்றுமதியை ஊக்குவிக்கவும், மத்திய அரசு நிறுத்தப்பட்ட மானியத் தொகையை மீண்டும் வழங்குவதுடன், நிலுவையில் உள்ள தொகையை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.