

மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்களால் நடத்தப்படும் எரிவாயு டேங்கர் லாரிகளுக்கான வாடகை டெண்டரில், வாகனம் பதிவு செய்யப்பட்ட மாநிலத்தில் மட்டுமே பங்கேற்க முடியும் என மத்திய அரசு அறிவித்துள்ளதால், இந்த வாகனங்களின் மையமாக உள்ள நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி உரிமையாளர்கள் தொழில் நெருக்கடிக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மத்திய அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சமையல் எரிவாயு மொத்தமாக புல்லட் டேங்கர்களில் எடுத்துச் செல்லப்பட்டு நாடு முழுவதும் உள்ள கேஸ் சிலிண்டர்கள் நிரப்பும் பாட்டிலிங் மையங்களுக்கு கொண்டு சேர்க்கப்படுகின்றது.
நாமக்கல்லில் மட்டும் 7,500 டேங்கர் லாரிகள்
நாடு முழுவதும் கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் மேற்கு, கிழக்கு, தெற்கு, வடக்கு என 4 மண்டலங்களாகச் செயல்படுகின்றன. தெற்கு மண்டலத்தில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், ஆந்திரம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களை உள்ளடக்கிய தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லில் உள்ளது.
இதன் உறுப்பினர்களுக்குச் சொந்தமான சுமார் 4,500 புல்லட் கேஸ் டேங்கர் லாரிகள் இந்தியா முழுவதும் இயங்கி வருகின்றன. இவை மத்திய அரசுக்குச் சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சமையல் எரிவாயுவை மொத்தமாக புல்லட் டேங்கர்களில் எடுத்துச் சென்று நாடு முழுவதும் உள்ள சமையல் எரிவாயு உருளை நிரப்பும் பாட்டிலிங் மையங்களுக்கு கொண்டு சேர்க்கின்றன.
இதற்காக எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் மண்டல வாரியான டெண்டர் மூலம் வாடகைக்கான விலைப்புள்ளியை நிர்ணயம் செய்து வழங்கி வருகின்றன. நிகழாண்டில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் வாடகை ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அதாவது 2017 முதல் 2022ஆம் ஆண்டு வரைக்கான டெண்டரை கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிவித்தது. பின்னர் அந்த டெண்டர் அறிவிப்பு திடீரென ரத்து செய்யப்பட்டது.
இதனிடையே, பிரதமரின் அனைவருக்கும் சமையல் எரிவாயு இணைப்பு திட்டம் மூலம் அதிக அளவில் கேஸ் லாரிகள் இயங்கும் என்ற எதிர்பார்ப்பில் நாமக்கல் பகுதியில் தற்போது புதியதாக இந்த ஆண்டு சுமார் 3,000 புல்லட் லாரிகள் கடந்த ஆண்டில் வாங்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளன. இதனால் நாமக்கல் பகுதியில் மொத்தம் 7,500 புல்லட் டேங்கர் லாரிகள் உள்ளன.
வேறு மாநில பதிவெண் லாரிகளுக்கு அனுமதி இல்லை
வாடகை டெண்டர் காலம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முடிவடைந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக ஏற்கெனவே உள்ள வாடகையிலேயே லாரிகள் இயக்கப்படுகின்றன. இதனால் புதிய வாடகை ஒப்பந்தம் குறித்து அறிவிக்க வேண்டும் எனவும் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தி வந்தனர்.
புதிய டெண்டரை விரைவில் அறிவிக்க வேண்டும் என மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரையுடன் இணைந்து தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் புது தில்லியில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து வேண்டுகோள் விடுத்தனர்.
அப்போது அவர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் வழக்கமாக மேற்கு, கிழக்கு, தெற்கு மற்றும் வடக்கு ஆகிய மண்டல வாரியாக அறிவிக்கப்பட்ட வாடகை டெண்டர் இனி ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியே அறிவிக்கப்படும். மேலும், வாடகை டெண்டரில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த டேங்கர் லாரிகள், சம்பந்தப்பட்ட மாநிலத்தில் மட்டுமே டெண்டரில் கலந்துகொள்ள முடியும் என்று தெரிவித்தார்.
மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரின் அறிவிப்பால் நாமக்கல் பகுதியில் உள்ள 1,500-க்கும் மேற்பட்ட எல்பிஜி டேங்கர் உரிமையாளர்கள் பாதிப்படையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
5,000 லாரிகள் வாய்ப்பை இழக்கும் நிலை
இதுகுறித்து தென் மண்டல பல்க் எல்பிஜி லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் எம்.பொன்னம்பலம் கூறியது: எல்பிஜி டேங்கர் லாரி தொழிலில் கடந்த 1987 ஆம் ஆண்டில் இருந்து ஈடுபட்டு வருகிறோம். 4 மண்டலங்களில் எந்த மண்டலத்தில் வேண்டுமானாலும் வாடகை டெண்டரில் பங்கேற்கலாம் என்ற நிலை இப்போது வரை இருந்தது. 30 ஆண்டுகளாக இருந்த இந்த நடைமுறையை மத்திய அரசு இப்போது மாற்றியுள்ளது.
நாடு முழுவதும் சுமார் 18,000 டேங்கர் லாரிகள் உள்ளன. இதில் 7,500 லாரிகள் நாமக்கல் மாவட்டத்தில் உள்ளன. மாநில அளவில் டெண்டர் நடைபெற்றாலும் தமிழகத்தில் சென்னையில் மட்டுமே எண்ணெய் நிறுவனங்களுக்கு சொந்தமான சுத்திகரிப்பு நிலையம் உள்ளது.
இந்த ஒரு சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து சுமார் 1,000 லாரிகள் மட்டுமே இயக்க முடியும். மேலும் கர்நாடகம், கேரளம், ஆந்திர மாநிலங்களில் டெண்டரில் பங்கேற்கும் வகையில் அந்த மாநில பதிவெண் கொண்ட லாரிகள் கணிசமாக உள்ளன.
மத்திய அமைச்சர் கூறியபடி வேறு மாநிலங்களில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்களில் டெண்டர் கிடைக்காவிட்டால், மீதமுள்ள புதிதாக வாங்கிய சுமார் 3,000 லாரிகள் மற்றும் இப்போது தமிழ்நாடு பதிவு எண்ணுடன் வட மாநிலங்களில் இயங்கும் சுமார் 2,000 லாரிகள் வேலைவாய்ப்பை இழக்க வேண்டி வரும்.
புதிய லாரிகள் ஒவ்வொன்றும் ரூ.35 லட்சம் முதல் ரூ.45 லட்சம் வரையிலான மதிப்புடையவை, இந்த லாரிகள் இயங்கவில்லை எனில், இந்த லாரிகளுக்காக வங்கிகளில் வாங்கப்பட்டுள்ள கடன் தொகை ரூ.1,000 கோடி அளவிற்கு வாராக்கடனாக மாறும் சூழல் ஏற்படும். மேலும் இந்த தொழிலில் முதலீடு செய்தவர்கள் நெருக்கடியை சந்திக்கும் நிலை ஏற்படும் என்றார்.
பிற மாநிலங்களுக்கும் தொழில் வாய்ப்பு
இதுகுறித்து எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறியது: டேங்கர் லாரிகளின் மொத்த எண்ணிக்கையில் சுமார் 40 சதவீதம் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவை. எஞ்சிய 60 சதவீதம் லாரிகள் மேற்கு வங்கம், மகாராஷ்டிரம் மற்றும் ஆந்திர மாநிலங்களை சேர்ந்தவை. வேறு மாநிலங்களில் டேங்கர் லாரிகளே இல்லை.
பிரதமரின் அனைவருக்கும் சமையல் எரிவாயு இணைப்பு திட்டம் மூலம் சமையல் எரிவாயு உருளைகளை எடுத்துச் செல்ல கூடுதலாக லாரிகள் தேவைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த தொழில் செய்பவர்கள் நாடு முழுவதும் பரவலாக இருப்பதன் மூலம், தொழில் வருவாய் பல்வேறு மாநிலங்களுக்கும் கிடைக்கும். இந்த நோக்கத்தில் தான் அந்தந்த மாநிலங்களிலேயே வாடகை டெண்டரை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
டேங்கர் லாரி உரிமையாளர்கள் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஆந்திரம், கர்நாடகம், கேரள மாநிலங்களில் அந்த மாநில பதிவெண் கொண்ட லாரிகளை இயக்கி வருகின்றனர். இதுபோல் இப்போதுள்ள லாரிகளை வேறு மாநில பதிவெண்ணுக்கு மாற்றி டெண்டரில் பங்கேற்கலாம் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.