ரூபாய் மதிப்பின் சரிவின் காரணமாக இந்தியப் பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் தொடர்ந்து இரண்டாவது நாளாக மந்த நிலையைக் கண்டது.
வர்த்தக தொடக்கத்தின் போது அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு முன்னெப்பொதும் இல்லாத அளவுக்கு ரூ.69.10-ஆக வீழ்ச்சியடைந்து காணப்பட்டது. ஆனால், வர்த்தகத்தின் முடிவில் ரூபாய் மதிப்பு ரூ.68.80-ஆக எழுச்சி கண்டது.
இருப்பினும், வர்த்தகத்தின்போது ரூபாய் மதிப்பில் காணப்பட்ட சரிவு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வெகுவாக குலைத்தது. மேலும், சர்வதேச சந்தையில் காணப்பட்ட கச்சா எண்ணெய் விலை உயர்வு அதனை அதிகம் இறக்குமதி செய்யும் இந்தியா போன்ற நாடுகளில் பணவீக்கத்தை ஏற்படுத்தும் என்ற நிலைப்பாடும் முதலீட்டாளர்களிடையே எழுந்தது. இதையடுத்து, அவர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்தனர். இது, பங்குச் சந்தைகளை சரிவு நிலைக்கு கொண்டு சென்றது.
அமெரிக்கா அதன் கூட்டணி நாடுகளிடம் ஈரானிடம் இருந்து அனைத்து விமான இறக்குமதிகளையும் வரும் நவம்பர் மாதத்துக்குள் நிறுத்திவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், லிபியா மற்றும் கனடா நாடுகளின் கச்சா எண்ணெய் உற்பத்தியில் தடைகள் ஏற்படும் என்ற கவலையாலும் சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 78 டாலராக உயர்ந்தது. இதுவும், உலக நாடுகளின் பங்குச் சந்தைகளில் பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தியது.
எண்ணெய்-எரிவாயு துறையின் குறியீட்டெண் 2.51 சதவீதமும், நுகர்வோர் சாதனங்கள் 2.40 சதவீதமும், ரியல் எஸ்டேட் 2.07 சதவீதமும், பொதுத் துறை நிறுவனங்கள் 1.70 சதவீதமும், உள்கட்டமைப்பு 1.61 சதவீதமும், ஆரோக்கிய பராமரிப்பு துறை குறியீட்டெண் 1.13 சதவீதமும் சரிந்தன.
இவை தவிர, மோட்டார் வாகனம் (0.30%), வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள் (0.75%), மின்சாரம் (0.72%), வங்கி (0.62%) ஆகிய துறை குறியீட்டெண்களும் கணிசமான அளவுக்கு குறைந்தன.
ஐசிஐசிஐ வங்கி பங்கின் விலை வர்த்தகத்தின்போது அதிகபட்சமாக 2.78 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. இதையடுத்து, டாடா மேட்டார்ஸும் 2.69 சதவீதம் குறைந்தது.
கோல் இந்தியா 2.23 சதவீதமும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2.13 சதவீதமும், எஸ்பிஐ 1.83 சதவீதமும், பஜாஜ் ஆட்டோ பங்கின் விலை 1.82 சதவீதமும் குறைந்தன.
அதேசமயம், முதலீட்டாளர்களிடம் கிடைத்த வரவேற்பையடுத்து, என்டிபிசி பங்கின் விலை 1.79 சதவீதமும், மஹிந்திரா & மஹிந்திரா பங்கின் விலை 1.78 சதவீதமும் அதிகரித்தன. மென்பொருள் ஏற்றுமதி நிறுவனங்களான இன்ஃபோசிஸ்-விப்ரோ பங்குகளின் விலை 1.01 சதவீதம் வரையிலும் ஏற்றம் கண்டன.
மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 179 புள்ளிகள் சரிந்து 35,037 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 82 புள்ளிகள் குறைந்து 10,589 புள்ளிகளாக நிலைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










