ஏலம் விடப்படும் சொத்துகள்: பரிதவிப்பில் பின்னலாடை, ஆயத்த ஆடை தொழில் நிறுவனங்கள்

ஏற்றுமதி சரிவு, அதிகரிக்கும் இறக்குமதி போன்றவற்றால் பின்னலாடை, ஆயத்த ஆடை தயாரிப்பு தொழிலைத் தொடர்ந்து நடத்த முடியாததால், வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஏலம் விடப்படும் சொத்துகள்: பரிதவிப்பில் பின்னலாடை, ஆயத்த ஆடை தொழில் நிறுவனங்கள்
Updated on
3 min read

ஏற்றுமதி சரிவு, அதிகரிக்கும் இறக்குமதி போன்றவற்றால் பின்னலாடை, ஆயத்த ஆடை தயாரிப்பு தொழிலைத் தொடர்ந்து நடத்த முடியாததால், வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் சொத்துகளை வங்கிகள் ஏலம் விட்டு வருகின்றன. 

அரை நூற்றாண்டு காலத்துக்கு முன்னர் திருப்பூர் நகரில் வேரூன்றிய பின்னலாடைத் தொழில், சில ஆண்டுகளில் உலகச் சந்தையில் வலுவாகத் தடம் பதித்தது. இங்கிருந்து உலகில் உள்ள பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது. இதனால், சிறியது, பெரியது என லட்சக்கணக்கில் ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள் தொடங்கப்பட்டன.  

பின்னலாடைத் தொழிலை நம்பி பல சிறு தொழில்கள் உள்ளன.

உதாரணத்துக்கு ஒரு பனியன் ஆடையைத் தயாரிக்க பல்வேறு வகையான தையல்கள், அதற்குத் தேவையான டெய்லர்கள், விதவிதமான டெய்லரிங், பேட்லாக், ஓவர்லாக், பல வகையான தையல் இயந்திரங்கள், அவற்றை தைக்கத் தெரிந்த தையல் தொழிலாளர்கள், தைக்கத் தேவைப்படும் நூல்களைத் தயாரிப்போர் என பல ஆயிரம் தொழிலாளர்கள் இதை நம்பி உள்ளனர். 

வண்ண வண்ண ஆடைகளில், மக்களை ஈர்க்கும் விதமாக அலங்கரிக்கப் போடப்படும் விதவிதமான பிரிண்டிங், அதை டிசைன் செய்ய சிஸ்டம் ஆபரேட்டர்கள், டிசைனர்கள், இதிலும் டிஜிட்டல் பிரிண்டிங், கையால் செய்யும் பிரிண்டிங்,  இயந்திரங்களை சரி செய்யும் மெக்கானிக்குகள், ஆயில் ஸ்டோர், வாகன தொழில், போக்குவரத்து என இன்னும் பல வகையில் பல லட்சம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.  
பின்னலாடைத் தொழில் கடந்த 15 ஆண்டுகளாகப் படிப்படியாக நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் பெரு நிறுவனங்கள் தவிர பல குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், தங்களது நிறுவனங்களில் உற்பத்தியை நிறுத்திவிட்டன. இதனால், பல மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் இங்கு குடும்பத்துடன் வந்து தங்கி வேலைபார்த்து வந்த மக்கள் அன்றாடத் தேவைக்கே கஷ்டப்படும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

குறைந்து வரும் ஏற்றுமதி: ஒரு புறம் ஏற்றுமதி ஆர்டர் குறைந்ததால் பல நிறுவனங்கள் பகுதி நேரமாக வேலைபார்த்து வந்த ஊழியர்களைப் பணி நீக்கம் செய்துள்ளன. அதிலும் சில நிறுவனங்கள் காலை 9 மணிக்கு ஆரம்பிக்கும் வேலையை மாலை 5 மணிக்கெல்லாம் முடித்து விடுகின்றன. அதிலும் வாரத்தில் 2 நாள்கள் விடுமுறை விடுகின்றன.  

5 ஆண்டுகளுக்கு முன்பு வரை வார இறுதி நாள்களில் கூட விடுமுறை இல்லை. அவசர பீஸ், உடனடியாக டெலிவரி கொடுக்க வேண்டும் என ஞாயிற்றுக்கிழமைகளில் கூட வேலை இருக்கும். ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக வாரத்தில் 5 நாள்கள் வேலை இருப்பதே பெரிதாக இருக்கிறது என்கின்றனர் தொழிலாளர்கள்.   

பீஸ் ரேட்டுக்கு தைத்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் தற்போது கூலிக்குத் தைக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். முன்பைவிட பாதி ஊதியம்தான் (ரூ. 300 முதல் ரூ. 500 வரை) கிடைக்கிறது. அதையும் மீறி சில நிறுவனங்கள் பீஸ் ரேட்டில் தைக்க கொடுத்தாலும் முதலில் 5 ரூபாய் கொடுத்த நிறுவனங்கள் தற்போது 3 ரூபாய் கொடுப்பதே பெரிய விஷயமாக இருக்கிறது. வாரத்தில் ரூ. 3,000 முதல் ரூ. 4,000 வரை கூலி வாங்கிக் கொண்டிருந்தவர்கள், தற்போது அதில் பாதி வாங்குவதே பெரிய விஷயமாக இருக்கிறது. இதனால், பிழைப்புக்காக குடும்பத்துடன் வந்து தங்கியுள்ள தொழிலாளர்கள்,  வாடகை வீட்டில் தங்கி, குழந்தைகளைப் படிக்க வைத்து, வாடகை கொடுத்து, வீட்டு செலவு என வரவுக்கும் செலவுக்குமே பற்றாக்குறை என்ற நிலையிலேயே தையல் தொழிலாளர்கள் உள்ளனர்.

பெரிய நிறுவன ஊழியர்களைவிட சிறு நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களே இங்கு அதிகம். பல நிறுவனங்களிடம் இருந்து ஆர்டர் எடுக்கும் சிறு, குறு நிறுவனங்கள் ஏராளம். இங்கும் லட்சக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். பெரிய நிறுவனங்கள் ஒரு பீஸூக்கு 10 ரூபாய் கொடுத்து வந்த நிலையில், தற்போது 5 ரூபாய் கூட கொடுப்பதில்லை. அதேபோல் வாரம் 5 லட்சம் பீஸ்கள் வரை ஆர்டர்கள் கொடுத்த நிலையில், தற்போது 1 முதல் 2 லட்சம் பீஸ்களே கொடுக்கின்றன.

இதே நிலை தொடர்ந்தால் இன்னும் பல லட்சம் பேர் வேலையிழக்கும் நிலை ஏற்படும்.

ஏலம் விடப்படும் தொழில் நிறுவனங்களின் சொத்துகள்: தொழில் வீழ்ச்சியால் தொழிலாளர்கள் வேலையிழப்பு அதிகரித்து வரும் நிலையில் தொழில் நிறுவனங்கள் பலவும் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இதனால், வங்கிகள் ஏலம் விடும் நிகழ்வு தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த 4 மாதங்களில் மட்டும் திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் ஏறத்தாழ 1,000 சிறு, குறு பின்னலாடை, ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்களின் சொத்துகளை வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஏலம் விட்டுள்ளன. 

இந்நிலை குறித்து ஈரோடு மாவட்ட ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கச் செயலாளர் எஸ்.சிவானந்தன் கூறியதாவது: கடந்த இரண்டு ஆண்டுகளாக வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு ஆயத்த ஆடைகள், பின்னலாடைகள் இறக்குமதி செய்வது அதிகரித்துள்ளது. குறைந்த விலையில் வங்கதேச ஆயத்த ஆடைகள், பின்னலாடைகள் குவிவதைத் தடுக்க முடியாமல் நம்முடைய இந்திய, தமிழக ஜவுளித் துறையினர் தவித்து வருகின்றனர்.  இதன் காரணமாக திருப்பூர், ஈரோடு, கரூர், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் பின்னலாடை, ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டனர். வங்கதேசத்தில் நம் ஊரைவிட குறைந்த விலையில் பொருள்களைத் தயாரித்துவிட முடியும் என்றார். 

ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலம் பின்னலாடைத் தொழில் நிறுவனங்களை நடத்தி வந்த பலரும் இப்போது கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். அவர்களின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.

இதுகுறித்து திருப்பூர் எக்ஸ்போர்டர்ஸ் சங்கப் பொதுச் செயலாளர் டி.ஆர்.விஜயகுமார் கூறியதாவது:இந்தியாவுக்கு மட்டும் வங்கதேசம் ஏற்றுமதி செய்யவில்லை. நமக்கு வர வேண்டிய ஆர்டர்ளையும் குறைந்த விலையில் செய்து தருவதாகக் கூறி ஆர்டர் கொடுப்பவர்களையும் ஈர்த்துவிட்டது. இந்திய தயாரிப்பு ஆயத்த ஆடை, பின்னலாடைகளைக் காட்டிலும் வங்கதேசம் 15 முதல் 25% வரை குறைந்த விலையில் ஆடைகளை வழங்குகிறது.  இதனால், ஏற்கெனவே உள்ளூர் விற்பனை பாதிப்பு ஒருபுறம் என்றால் வெளிநாட்டு ஆர்டர்கள் கிடைப்பதிலும் பிரச்னை ஏற்படுகிறது.   

வங்கதேசத்தில் குறைந்த விலைக்கு பொருள்களைக் கொடுக்க காரணம், இந்தியாவைப்போல் தொழிலாளர் உரிமைச் சட்டங்களோ, நிறுவனங்களைத் துவங்குவதற்கான விதிமுறைகளோ இல்லை. 10 பேருக்கு மேல் இந்தியாவில் ஒரு நிறுவனம் துவங்க வேண்டும் என்றால் இஎஸ்ஐ, பிஎஃப் கொடுக்க வேண்டும். அடிப்படை ஊதியச் சட்டத்தைப் பின்பற்ற வேண்டும். தீயணைப்புத் துறை, மாசுக் கட்டுப்பாட்டுத் துறை என பல அனுமதிகளை வாங்க வேண்டும். இந்தியாவை ஒப்பிடும்போது அங்கு கூலி 30 சதவீதம்தான் உள்ளது.   

இந்த நிலையில்தான், ஜிஎஸ்டி வரியை விதித்த கையோடு, வங்கதேசத்தில் இருந்து இறக்குமதி செய்வதற்கான 12 சதவீத வரியை அரசு நீக்கியது. இதனால் இந்தியாவுக்கான துணிகள் இறக்குமதி வங்கதேசத்தில் இருந்து அதிகரித்துள்ளது.

2018-19 நிதியாண்டில் வங்கதேசத்தில் இருந்து ஜவுளி இறக்குமதி 50% உயர்ந்து 1 பில்லியன் டாலராக (ரூ. 7,000 கோடி) அதிகரித்துள்ளது. குறைந்த உற்பத்தி செலவுகள், தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் (எஃப்டிஏ) போன்ற நன்மைகள் காரணமாக வங்கதேசம், இலங்கை, வியத்நாம் போன்ற அண்டை நாடுகள் இந்தியாவில் ஆயத்த ஆடை, பின்னலாடை சந்தையை ஆக்கிரமித்து, இங்குள்ள இந்த தொழிலை படிப்படியாக நலிவடையச் செய்து வருகின்றன.  

 பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய சிறு நாடுகள், வேறு தொழில் வாய்ப்பு இல்லாத நாடுகள் என உலக நாடுகளிடம் அனுதாபம் தேடிக்கொண்ட இந்த நாடுகள், இந்திய சந்தையை முடக்கி வருகின்றன. 

இந்திய அரசு ஆயத்த ஆடை, பின்னலாடைத் தொழிலுக்கு பல்வேறு உதவிகளை செய்தாலும் நூல் விலை உயர்வு, வங்கதேசம், இலங்கை, வியத்நாம், சீனா போன்ற நாடுகளை ஒப்பிடும்போது உற்பத்தித் திறன் 50% அளவுக்கு குறைவாக இருப்பது, கூலி பிரச்னை போன்றவற்றால் மீள முடியாத சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது ஆயத்த ஆடை, பின்னலாடைத் தொழில். இப்போது குறு, சிறு நிறுவனங்கள் பலவும் மூடப்பட்டு வருகின்றன என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com