நேரடி சந்தை வாய்ப்பு இல்லை: கொல்லிமலையில் குறையும் காபி விவசாயம்

கொல்லிமலையில்  கொள்முதல் சந்தை  இல்லாததால், காபி விவசாயிகள் அதனை விற்பனை செய்ய வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது. இதனால் காபிக்கு உரிய விலை கிடைப்பதில்லை.
நேரடி சந்தை வாய்ப்பு இல்லை: கொல்லிமலையில் குறையும் காபி விவசாயம்
Updated on
2 min read

கொல்லிமலையில்  கொள்முதல் சந்தை  இல்லாததால், காபி விவசாயிகள் அதனை விற்பனை செய்ய வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது. இதனால் காபிக்கு உரிய விலை கிடைப்பதில்லை. இதனால் இங்கு காபி விவசாயமும் படிப்படியாகக் குறைந்து வருகிறது. 

இந்தியாவில் தென் இந்திய மாநிலங்களின் மலைத் தொடர் பகுதிகளில் காபி மிகுதியாக உற்பத்தி செய்யப்படுகிறது.  இந்தியாவின் மொத்த 8,200 டன் காபி உற்பத்தியில் கர்நாடகம் 71,  கேரளம் 21,  தமிழகத்தில் 5 சதவீதம்  உற்பத்தி செய்யப்படுகிறது.  இந்திய மலைச் சாரல்களில் நிழலில் விளையும் இந்திய காபி கொட்டைகளின் தரமானது உலகின் வேறு பகுதிகளில் நேரடி சூரிய ஒளியில் விளையும் காபி கொட்டைகளின் தரத்தை விட சிறந்ததாகக் கருதப்படுகிறது.

இந்தியாவில் சுமார் 2.50 லட்சம் காபி விவசாயிகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.  இதில் 98 சதவீதம் பேர் சிறு விவசாயிகள்.  உலக காபி உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 4.5 சதவீதம் மட்டுமே.  நாட்டின் காபி உற்பத்தியில் கிட்டத்தட்ட 80 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.  அராபிக்கா என்ற காபி விதையே இந்தியாவின் அபிமான வகையாக இருந்து. ஆனால், கடந்த 15 ஆண்டுகளாக ரோபஸ்டா என்ற வகை பிரபலமடைந்துள்ளது.

நாமக்கல் மாவட்டம்,  கொல்லிமலையில் தற்போது சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவில் ஏக்கருக்கு  250 முதல் 400 கிலோ வரை காபி கொட்டை  சாகுபடி செய்யப்படுகிறது.  இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 500 டன் வரை காபி கொட்டை உற்பத்தியாகிறது.  இங்கு விளையும் காபி பழங்களைக் காயவைத்து அதனைச் சுத்தப்படுத்த விவசாயிகள் சேலத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது.  அங்கு அதனை தரம் வாரியாகப் பிரித்து மீண்டும் கொல்லிமலைக்கோ அல்லது வேறு இடங்களுக்கோ எடுத்துச்சென்று விற்பனை செய்ய வேண்டிய  நிலை உள்ளது.

நேரடி சந்தை வாய்ப்பு இல்லை 

இதுகுறித்து கொல்லிமலையைச் சேர்ந்த காபி விவசாயி குப்புசாமி தெரிவித்தது:   கடந்த காலங்களில்  ஆண்டுக்கு இரண்டு முறை காபி சாகுபடி செய்யப்பட்டு வந்தது.  மாசி, பங்குனி மாதங்களில் பூக்கள் பூக்கும் காலங்கள் மாறி,  தற்போது வைகாசியில் பூக்கள் பூக்கும் நிலை உருவாகி விட்டது. பூக்கள், காய்களாக மாறி,  காய்கள் பழங்களாக மாற பல மாதங்கள் ஆகின்றன. பழங்களைப் பறித்து அதனைப் பதப்படுத்தி விற்பனை செய்வதற்குள் நாள்கள் கடந்து விடுகின்றன. இதனால் ஒரு சாகுபடி மட்டுமே செய்ய முடிகிறது.

காலப் போக்கில் பருவநிலை மாற்றம் காரணமாக காபியின் தரமும் குறைந்து வருகிறது.  தரம் குறைவால் விலையும் சரிந்து கொண்டே இருக்கிறது.  கடந்த ஆண்டு ஒரு கிலோ பதப்படுத்தப்பட்ட பழம் ரூ.170 வரை விலை போனது.  இந்த ஆண்டு ரூ.130 வரை மட்டுமே விலை போகிறது.  

கடந்த சில ஆண்டுகளாக மத்திய காபி வாரியம் விற்பனையைக் கைவிட்டுவிட்டு,  அபிவிருத்தி பணிகளை மட்டுமே மேற்கொண்டு வருவதால், காபி விவசாயிகள் வெளியிடங்களில் விற்பனைக்கு அனுப்ப வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் இடைத்தரகர் தலையீடு அதிகரித்து, விவசாயிகளுக்கு சிறிதளவு லாபம் மட்டுமே கிடைக்கிறது.  உரிய விலை இல்லாதது,  போதிய மழை இல்லாதது போன்ற காரணங்களினால் கடந்த 10 ஆண்டுகளில் கொல்லிமலையில் காபி விவசாயம் 50 சதவீதம் அளவுக்குக் குறைந்துள்ளது. 

இடைத்தரகர்கள் தொல்லையில் இருந்து காபி விவசாயத்தை மீட்டெடுக்க, மத்திய காபி வாரியம் மீண்டும் காபி விற்பனையைத் தொடங்குவதுடன்,  நவீன வேளாண் தொழில்நுட்ப சாகுபடி முறையைப் புகுத்தி,  காபி பழங்களின் தரம் குறையாமல் தடுப்பதோடு,  காபி அபிவிருத்திப் பணிகளிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

ஊக்குவிப்பு இல்லை

இயற்கை விவசாயத்துக்கு ஏற்ற பயிர்களில் காபியும் ஒன்று.   இதற்கு வெயிலும்,   நிழலும் வேண்டும்.  சில்வர்ஓக் மரத்தின் அடியில் காபி சாகுபடி செய்யும்போது தேவையான நிழல் கிடைப்பதோடு,  மரத்தில் இருந்து உதிரும் இலைகள் மூலம் காபி பயிருக்கு இயற்கை உரம் கிடைக்கிறது. 

காபி தோட்டத்தில் ஊடு பயிராக பயறு வகைப் பயிர்களைச் சாகுபடி செய்யலாம்.  ஆனால், இதுபோன்ற சாகுபடித் தொழில்நுட்பங்கள், விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் வழிமுறைகளை தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் விளக்குவதில்லை.  விவசாயிகள் தங்களது சுய ஆர்வத்தில் காபி சாகுபடியைச் செய்து வருகின்றனர். இதே நிலை நீடித்தால், வரும் காலத்தில் கொல்லிமலையில் காபி சாகுபடியே இல்லாத நிலை ஏற்படும் என்கின்றனர் கொல்லிமலை காபி விவசாயிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com