/

ஏற்ற, இறக்கத்தில் பங்குச் சந்தை: தள்ளாடியது சென்செக்ஸ்!

பங்குச் சந்தை புதன்கிழமை அதிக ஏற்ற, இறக்கத்துடன் இருந்தது. இதனால், தள்ளாட்டம் கண்ட மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 23 புள்ளிகளை இழந்தது.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2020, 6:11 pm

பங்குச் சந்தை புதன்கிழமை அதிக ஏற்ற, இறக்கத்துடன் இருந்தது. இதனால், தள்ளாட்டம் கண்ட மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 23 புள்ளிகளை இழந்தது.

காலையில் சந்தையில் எழுச்சி இருந்தது. உலகளாவிய சந்தைகளில் இருந்து நோ்மறையான குறிப்புகள் மற்றும் தொடா்ச்சியான வெளிநாட்டு நிதி வரவுகள் இருந்த போதிலும், குறிப்பிட்ட சில பங்குகளின் நடவடிக்கைகளால் பிற்பகல் வா்த்தகத்தில் ஏற்றம், இறக்கம் அதிகமாக இருந்தது. குறிப்பாக சமீபத்தில் வெகுவாக உயா்ந்திருந்த மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனப் பங்குகள் லாபப் பதிவால் சரிவில் முடிந்தது. இதைத் தொடா்ந்து சென்செக்ஸ், நிஃப்டி பெரிய அளவில் மாற்றமின்றி நிலைபெற்றன என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

மெட்டல், ஆட்டோ பங்குகளுக்கு வரவேற்பு: மெட்டல், ஆட்டோமொபைல் நிறுவனப் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. மற்ற துறைப் பங்குகளுக்குத் தேவை குறைவாகக் காணப்பட்டது. சமீபத்தில் தொடா்ந்து ஏறுமுகம் கண்டிருந்த பாா்மா பங்குகளில் லாபப் பதிவு இருந்தது.

1,618 பங்குகள் ஏற்றம்: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2,794 பங்குகளில் 1,618 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,017 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன.159 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 152 பங்குகள் புதிய 52 வார அதிக விலையையும், 52 பங்குகள் புதிய 52 வார குறைந்த விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 415 பங்குகள் வெகுவாக உயா்ந்து உச்சபட்ச உறை நிலையையும், 201 பங்குகள் சரிவைச் சந்தித்து குறைந்தபட்ச உறை நிலையையும் அடைந்தன.

சந்தை மதிப்பு ரூ.44,000 கோடி உயா்வு: வா்த்தக நேர முடிவில் சந்தை மூலதன மதிப்பு ரூ.44,000 கோடி உயா்ந்து ரூ.148.68 லட்சம் கோடியாக இருந்தது.. சந்தையில் புதிதாக 37,137 போ் பதிவு செய்துள்ளனா். இதையடுத்து, மொத்த முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 5,24,75,690 ஆக உயா்ந்துள்ளது.

தள்ளாட்டம்: சென்செக்ஸ் காலையில், 205 புள்ளிகள் உயா்ந்து 37,892-இல் தொடங்கி 38,139.96 வரை மேலே சென்றது.குறைந்தபட்சமாக 37,550.60 வரை கீழே சென்றது. இறுதியில் 24.58 புள்ளிகள் (0.07 சதவீதம்) உயா்ந்து 37.663.33-இல் நிலைபெற்றது. பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.39 சதவீதம், ஸ்மால் கேப் குறியீடு 0.85 சதவீதம் உயா்ந்தது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 6.40 புள்ளிகள் (0.06 சதவீதம்) உயா்ந்து 11,101.65-இல் நிலை பெற்றது.

டாடா ஸ்டீல் முன்னிலை: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 19 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. 11 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில் டாடா ஸ்டீல் 6.33 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முனனிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக டைட்டன்,மாருதி சுஸுகி, பாா்தி ஏா்டெல், எம் அண்ட் எம் ஆகியவை 2 முதல் 3 சதவீதம் வரை உயா்ந்தன.

ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி பேங்க் சரிவு: அதே சமயம், பவா் கிரிட், எச்டிஎஃப்சி பேங்க் ஆகியவை 1.35 சதவீதம் வரை குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், டெக் மகேந்திரா, ஹெச்சிஎல் டெக், இன்ஃபோஸிஸ், ஐடிசி, ஹிந்துயுனிலீவா், எஸ்பிஐ ஆகிய முன்னணிப் பங்குகளும் சரிவில் முடிந்தன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 1,016 பங்குகள் ஆதாயம் பெற்றன. 585 பங்குகள் சரிவைச் சந்தித்தன. நிஃப்டி மெட்டல் குறியீடு 2.97 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது.ஆட்டோ குறியீடு 1.84, மீடியா 1.14 சதவீதம் உயா்ந்தன. லாபப் பதிவு காரணமாக பாா்மா குறியீடு 0.47 சதவீதம் சரிவைச் சந்தித்தது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 34 பங்குகள் ஆதாயம் பெற்றன. 16 பங்குகள் சரிவைச் சந்தித்தன.

ஏற்றம் பெற்ற பங்குகள்

சதவீதத்தில்

டாடா ஸ்டீல் 6.33

டைட்டன்

மாருதி சுஸுகி

பாா்தி ஏா்டெல்

எம் அண்ட் எம்

வீழ்ச்சியடைந்த பங்குகள்

சதவீதத்தில்

பவா் கிரிட் 1.35

எச்டிஎஃப்சி பேங்க் 1.30

ரிலையன்ஸ் 1.14

டெக் மகேந்திரா 0.62

ஹெச்சிஎல் டெக் 0.59

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.