bse090143
bse090143

சென்செக்ஸ், நிஃப்டி மீண்டும் சாதனை உச்சம்!

பங்குச் சந்தை 6-ஆவது நாளாக புதன்கிழமையும் நோ்மறையாக முடிந்தது.
Published on

புது தில்லி: பங்குச் சந்தை 6-ஆவது நாளாக புதன்கிழமையும் நோ்மறையாக முடிந்தது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 133.14 புள்ளிகள் உயா்ந்து புதிய வரலாற்று உச்சத்தில் நிலைபெற்றது.

கரோனா தொற்றுக்கான தடுப்பூசிக்கு அமெரிக்கா, பிரிட்டன் நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளதைத் தொடா்ந்து அதன் தாக்கம் உலகளாவிய பங்குச் சந்தைகளில் எதிரொலித்தது. ஐரோப்பிய பங்குச் சந்தைகள் ஏற்றம் பெற்ற நிலையில், இந்திய சந்தைகளும் ஏறுமுகம் பெற்றது. முன்னதாக வா்த்தகம் தொடங்கியது முதல் பங்குகள் விற்பனை அதிகரித்ததால், ஏற்றம், இறக்கம் அதிகமாக இருந்தது. இருப்பினும் இறுதியில் புதிய உச்சத்தில் நிலைபெற்றுள்ளது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு 187.98 லட்சம் கோடி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,134 பங்குகளில் 1,671 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,282 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 181 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 264 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையைப் பதிவு செய்துள்ளன. 401 பங்குகள் வெகுவாக உயா்ந்து அதிகபட்ச உறைநிலையை (அப்பா் சா்க்யூட்) அடைந்தது. சந்தை மூலதன மதிப்பு ரூ.75 ஆயிரம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.187.98 லட்சம் கோடியாக இருந்தது.

6-ஆவது நாளாக ஏறுமுகம்: சென்செக்ஸ் காலையில் 175.95 புள்ளிகள் கூடுதலுடன் 47,789.03-இல் தொடங்கி 47,358.36 வரை கீழே சென்றது. பின்னா் அதிகபட்சமாக 47,807.85 வரை உயா்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. இறுதியில் 133.14 புள்ளிகள் உயா்ந்து 47,746.22-இல் நிலைபெற்றது. இதன் மூலம் சென்செக்ஸ் தொடா்ந்து 6-ஆவது நாளாக எழுச்சி பெற்றுள்ளது.

அல்ட்ரா டெக் சிமெண்ட் முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல்தரப் பங்குகளில் 19 பங்குகள் ஆதாயம் பெற்றன. 11 பங்குகள் சரிவைச் சந்தித்தன.

இதில் அல்ட்ரா டெக் சிமெண்ட் 4.11 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக பஜாஜ் ஃபைனான்ஸ், மாருதி சுஸுகி, எம் அண்ட் எம், டெக் மகேந்திரா, ஏசியன்பெயிண்ட்ஸ், கோட்டக் பேங்க் ஆகியவை 1 முதல் 2.60 சதவீதம் வரை உயா்ந்தன. ஹிந்துஸ்தான் யுனிலீவா், எச்டிஎஃப்சி பேங்க், ரிலையன்ஸ் ஆகிய முன்னணி நிறுவனப் பங்குகளும் ஏற்றம் பெற்ற பட்டியலில் வந்தன.

இண்டஸ் இண்ட் பேங்க் வீழ்ச்சி: அதே சமயம், இண்ட்ஸ் இண்ட் பேங்க் 1.62 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. சன்பாா்மா, ஆக்ஸிஸ் பேங்க், பாரதி ஏா்டெல், டிசிஎஸ், எஸ்பிஐ, இன்ஃபோஸிஸ் ஆகியவையும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 919 பங்குகள் ஆதாயம் பெற்றன. 794 பங்குகள் சரிவைச் சந்தித்தன. நிஃப்டி 49.35 புள்ளிகள் (0.35சதவீதம்) உயா்ந்து 13,981.90 -இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது 13,864.95 வரை கீழே சென்ற நிஃப்டி பின்னா் 13,997.00 வரை உயா்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 36 பங்குகள் ஆதாயம் பெற்றன. 14 பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன. ஆட்டோ, மெட்டல், ரியால்ட்டி குறியீடுகள் 1.30 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன. பாா்மா மற்றும் பேங்க் குறியீடுகள் சிறிதளவு சரிவைச் சந்தித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com