அடுத்த 3 மாதங்களில் திருப்பூர் ஏற்றுமதி ரூ.1,000 கோடி அதிகரிக்கும்

உலகளாவிய பெருந்தொற்றான கரோனா இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் முதல் வேகமாகப் பரவிவருகிறது.
அடுத்த 3 மாதங்களில் திருப்பூர் ஏற்றுமதி ரூ.1,000 கோடி அதிகரிக்கும்
Updated on
2 min read


பிபிஇ கிட், 2, 3 அடுக்கு மருத்துவ முகக்கவச ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு நீக்கியுள்ளதால் திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் அடுத்த  3 மாதங்களில் ரூ.1,000 கோடி அதிகரிக்கும் என்று தொழில் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

உலகளாவிய பெருந்தொற்றான கரோனா இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் முதல் வேகமாகப் பரவிவருகிறது. இதனால் மருத்துவர்கள், செவிலியர், சுகாதாரப் பணியாளர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் என முன்களப் பணியாளர்கள் அனைவரும் நோய்த் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள பிபிஇ கிட் எனப்படும் முழு பாதுகாப்புக் கவச உடை மற்றும் முகக்கவசங்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். மேலும், உலக அளவிலும் இவற்றின் தேவை அதிகரிக்கத் தொடங்கியது.

 இதையடுத்து, இந்தியாவில் திருப்பூர், சென்னை, புது தில்லி, லூதியானா உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பிபிஇ கிட், 2,3 அடுக்கு  மருத்துவ முகக்கவசங்கள், என்95 கவசங்களையும் உற்பத்தி செய்யத் தொடங்கினர். ஆனால் கரோனா தொற்று இந்தியாவில் அதிகரிக்கத் தொடங்கியதால் உள்நாட்டுத் தேவையைக் கருத்தில் கொண்டு இவற்றை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தது. இதனால் பிபிஇ கிட், முகக்கவசம் உள்ளிட்டவற்றை  உற்பத்தி செய்தும்  ஏற்றுமதி செய்ய முடியாமல்  தொழில் துறையினர் தவித்து வந்தனர்.

தொழில் அமைப்புகள் கோரிக்கை 
ஏஇபிசி (ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம்), திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழில் அமைப்புகள் பிபிஇ கிட்,  முகக்கவச  ஏற்றுமதிக்கான தடையை நீக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி வந்தன. இதைத் தொடர்ந்து, மத்திய அரசின் டிஜிஎஃப்டி (வெளிநாட்டு  வர்த்தக  இயக்குநரகம்) படிப்படியாக  பல்வேறு தளர்வுகளை அளித்து  வந்தது. இதன்படி கடந்த ஜூலை 28}ஆம் தேதி மருத்துவப் பயன்பாடில்லாத முகக் கவச ஏற்றுமதிக்கான தடைகளை விலக்கியது. அதே போல, பிபிஇகிட் மாதந்தோறும் 20 லட்சம் என்ற எண்ணிக்கையிலும், மருத்துவப் பயன்பாட்டுக்கான 2,3 அடுக்கு மருத்துவ முகக்கவசங்களை மாதந்தோறும் 4 கோடியும்  ஏற்றுமதி செய்து கொள்ளலாம் என்று அறிவித்திருந்தது. ஆனால், உலக அளவில் இவற்றின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால்  கட்டுப்பாடுகளை முழுமையாக விலக்க வேண்டும் என்று பல்வேறு தொழில் அமைப்புகள் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தன.

பிபிஇ கிட் ஏற்றுமதி கட்டுப்பாடு நீக்கம்  டிஜிஎஃப்டி சார்பில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பில் 2,3 அடுக்கு மருத்துவப் பயன்பாட்டுக்கான முகக்கவசங்கள் மாதந்தோறும் 4 கோடி வரை மட்டுமே ஏற்றுமதி செய்து கொள்ளலாம் என்ற கட்டுப்பாடு முற்றிலுமாக நீக்கப்பட்டது. அதே போல, மாதம் 50 லட்சம் என்ற எண்ணிக்கையில் மட்டுமே பிபிஇ கிட் உடைகள் ஏற்றுமதி செய்யலாம் என்ற கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாடு நீக்கப்பட்டதுடன் சான்றிதழ்களும் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

அதே வேளையில், தடை செய்யப்பட்டிருந்த என் 95 முகக்கவசங்கள், எஃப்எஃப்பி 2 மட்டும் மாதந்தோறும் 50 லட்சம் வரை ஏற்றுமதி செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. இதனால் அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்பெயின், இத்தாலி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து ஆர்டர்களும், வர்த்தக விசாரணைகளும் அதிக அளவில் வரத்தொடங்கியுள்ளன. இதன் மூலமாக திருப்பூரில் இருந்து மட்டும் அடுத்த 3 மாதங்களில் ரூ.1,000 கோடிக்கு ஏற்றுமதி வர்த்தகம் நடைபெறும் என்று தொழில் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

இது குறித்து  ஏஇபிசி தலைவர் ஆ.சக்திவேல் கூறியதாவது:  பிபிஇ கிட், முகக்கவச ஏற்றுமதிக்கான தடைகளை நீக்கக்கோரி மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்ததைத் தொடர்ந்து தற்போது கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. திருப்பூரில் மட்டும் தற்போது 50}க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இவற்றை உற்பத்தி செய்து வருகின்றன. மேலும், தற்போது வெளிநாடுகளில் கரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் இந்த உடைகளுக்கான நுகர்வு குறையவில்லை. குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருந்து திருப்பூருக்கு அதிக அளவில் ஆர்டர்கள் வரத்தொடங்கியுள்ளன. ஆகவே இந்த வாய்ப்பை திருப்பூரில் உள்ள ஏற்றுமதியாளர்கள் பயன்படுத்திக் கொண்டால் அடுத்த 3 மாதங்களில் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.1,000 கோடி அதிகரிக்கும். மேலும், என் 95,  மருத்துவப் பயன்பாட்டுக்கான  எஃப்எஃப்பி2 ஆகியவற்றை மாதந்தோறும் 50 லட்சம் வரை மட்டுமே ஏற்றுமதி செய்யலாம் என்ற கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு நீக்க வேண்டும் என்றார்.  

இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ராஜா  எம்.சண்முகம் கூறியதாவது: பிபிஇ கிட்,  மருத்துவ முகக்கவச ஏற்றுமதிக்கான  தடை நீக்கப்பட்டுள்ளதால்  அதிக அளவில் விசாரணைகள் வரத்தொடங்கியுள்ளன. இந்தத் தடை நீக்கத்துக்கு முன்பாக பிபிஇ கிட்,  மருத்துவ முகக்கவச ஏற்றுமதிக்கு தரச்சான்றிதழ்கள் பெறுவதில் சிக்கல் நிலவி வந்தது. இதன் காரணமாக திருப்பூரில் இருந்து விண்ணப்பிக்கும் ஏற்றுமதியாளர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு வந்ததுடன் வெளிநாட்டு வர்த்தகர்களும் ஆர்டர் கொடுக்க தயக்கம் காட்டி வந்தனர். அவர்கள் வியத்நாம், வங்கதேசம், இலங்கை போன்ற நாடுகளில் இருந்து பிபிஇ கிட், முகக்கவசங்களை வாங்கி வந்தனர். இதனிடையே, மத்திய அரசு தற்போது கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளதாலும், தரச்சான்றிதழ்கள் பெறுவதில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாலும் திருப்பூரில் இருந்து பிபிஇ கிட், முகக்கவசங்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்ய முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com