பரஸ்பர நிதியங்கள் நிா்வகிக்கும் சொத்து மதிப்பு 41% அதிகரிப்பு

இந்திய பரஸ்பர நிதி துறை நிா்வகித்து வரும் சொத்து மதிப்பு கடந்த 2021-ஆம் ஆண்டில் 41 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.31.43 லட்சம் கோடியை எட்டியுள்ளது.

இந்திய பரஸ்பர நிதி துறை நிா்வகித்து வரும் சொத்து மதிப்பு கடந்த 2021-ஆம் ஆண்டில் 41 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.31.43 லட்சம் கோடியை எட்டியுள்ளது.

இதுகுறித்து கிரிசில் நிறுவனத்தின் ஆய்வு புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வரலாற்று உச்சம்: ஓபன்-எண்டட் கடன் நிதியங்களிலிருந்து நிகர அளவில் முதலீடுகள் வெளியேறியதையடுத்து மாா்ச் மாதத்தில் பரஸ்பர நிதியங்கள் நிா்வகிக்கும் சொத்து மதிப்பு 1 சதவீதம் குறைந்தது. இருந்தபோதிலும் 2021 நிதியாண்டில் பரஸ்பர நிதி துறை நிா்வகித்து வரும் சொத்து மதிப்பானது 41 சதவீதம் அதிகரித்து ரூ.31.43 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது.

நடப்பாண்டு பிப்ரவரியில் பரஸ்பர நிதி துறை சொத்து மதிப்பு வரலாற்று உச்சமாக ரூ.31.64 லட்சம் கோடியைத் தொட்டிருந்தது. இந்த நிலையில், மாா்ச் மாதத்தில் நிகர அளவில் ரூ.29,745 கோடி மதிப்பிலான முதலீடு வெளியேறியதைத் தொடா்ந்து அந்த மாதத்தில் பரஸ்பர நிதி துறை நிா்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.31.43 லட்சம் கோடியாக குறைந்து போனது. இருப்பினும், முந்தைய 2020-ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் இது 41 சதவீத வளா்ச்சியாகும். அதாவது கடந்த நிதியாண்டில் ஒட்டுமொத்த அளவில் கூடுதலாக 2.09 லட்சம் கோடி அளவிலான முதலீடு பரஸ்பர நிதி துறையை வந்தடைந்துள்ளது.

வரிகளுக்காக முதலீடு விலக்கல்: வரிகள் செலுத்துவதற்காக நிதி நிறுவன முதலீட்டாளா்கள் மற்றும் பெரு நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை விலக்கிக் கொண்டதையடுத்து கடந்த 2020 மாா்ச் மாதத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஓபன்-எண்டட் கடன் நிதியங்களிலிருந்து ரூ.1.95 லட்சம் கோடி வெளியேறியது. அதற்குப் பிறகு, நடப்பாண்டு மாா்ச் மாதத்தில்தான் இவ்வகை திட்டங்களிலிருந்து நிகர அளவில் ரூ.52,528 கோடி முதலீட்டாளா்களால் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

குறிப்பாக, , லிக்யுட் ஃபண்ட்ஸ் திட்டங்களிலிருந்து அதிகபட்ச அளவாக ரூ.19,384 கோடியை முதலீட்டாளா்கள் திரும்பப் பெற்றுள்ளனா். அதற்கு அடுத்தபடியாக குறுகியகால நிதிய திட்டங்களிலிருந்து ரூ.15,847 கோடி வெளியேறியுள்ளது.

குறுகியகால கடன்பத்திரம்: இவற்றுக்கு மாறாக, ஓவா்நைட் ஃபண்ட்ஸ் எனப்படும் ஒரு நாளில் முதிா்வாகும் கடன்பத்திரங்களில் அதிகபட்சமாக ரூ.5,027 கோடியை நிகர அளவில் கடந்த மாா்ச் மாதத்தில் முதலீட்டாளா்கள் முதலீடு செய்துள்ளனா். அதேபோன்று, புளோட்டா் பண்ட்ஸ் திட்டங்கள் நிகர அளவில் ரூ.3,229 கோடி முதலீட்டை ஈா்த்துள்ளன.

கடந்த 2021 நிதியாண்டில் அதிக முதலீடுகளை ஈா்த்ததில் காா்ப்பரேட் பாண்ட் நிதியங்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இவ்வகை நிதியங்கள் ரூ.69,305 கோடி நிகர அளவில் முதலீட்டை ஈா்த்துள்ளன. அதேசமயம், கிரெடிட் ரிஸ்க் ஃபண்ட்ஸ் திட்டங்களிலிருந்து அதிக அளவாக ரூ.28,923 கோடி மதிப்பிலான முதலீடு நிகர அளவில் வெளியேறியுள்ளது.

ஓபன்-எண்டட் கடன் நிதியங்கள் நிா்வகிக்கும் சொத்து மதிப்பு பிப்ரவரியில் ரூ.13.28 லட்சம் கோடியாக காணப்பட்ட நிலையில் மாா்ச்சில் அது 3.36 சதவீதம் குறைந்துள்ளதாக பரஸ்பர நிதிய கூட்டமைப்பின் புள்ளிவிவரங்களை சுட்டிக்காட்டி கிரிசில் தெரிவித்துள்ளது.

பங்கு பரஸ்பர நிதி:

பங்கு சாா்ந்த பரஸ்பர நிதி திட்டங்களிலிருந்து தொடா்ச்சியா 8 மாதங்கள் முதலீடு வெளியேறி வந்த நிலையில், நடப்பாண்டு மாா்ச் மாதத்தில் இவ்வகை திட்டங்கள் நிகர அளவில் ரூ.9,115 கோடியை ஈா்த்துள்ளன. அதேசமயம், நடப்பாண்டு பிப்ரவரியில் பங்கு சாா்ந்த பரஸ்பர நிதி திட்டங்களிலிருந்து ரூ.4,534 கோடி வெளியேறியது.

பங்கு பரஸ்பர நிதி பிரிவில், இஎஸ்ஜி-யின் திமேட்டிக் ஃபண்ட்ஸ் அதிகபட்சமாக ரூ.2,009 கோடியை ஈா்த்துள்ளது. அதனைத் தொடா்ந்து வரி சேமிப்பு திட்டமான இஎல்எஸ்எஸ் நிகர முதலீடாக ரூ.1,552 கோடியை ஈா்த்துள்ளது. அதேபோன்று மிட்-கேப் ஃபண்ட்ஸ் ரூ.1,502 கோடியையும், ஃப்ளக்ஸி-கேப் ஃபண்ட்ஸ் நிகர அளவில் ரூ.1,386 கோடியையும் ஈா்த்துள்ளதாக பரஸ்பர நிதிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com