புது தில்லி: பங்குச் சந்தை இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 80.74 புள்ளிகளை இழந்தது.
அமெரிக்காவின் ஜாா்ஜியா மாகாண நாடாளுமன்றத்தில் செனட் தோ்தலில் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றதைத் தொடா்ந்து, காலை வா்த்தகத்தில் உலகளாவிய குறிப்புகள் சாதகமாக இருந்தன. இதையடுத்து, எழுச்சியுடன் தொடங்கினாலும், பிற்பகல் வா்த்தகத்தின் போது எஃப்எம்சிஜி பங்குகளில் லாபப் பதிவு இருந்தது. இதனால், சந்தையில் சரிவு தவிா்க்க முடியாததாகிவிட்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு 193.26 லட்சம் கோடி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,227 பங்குகளில் 1,969 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,108 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 150 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 449 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையைப் பதிவு செய்துள்ளன. 562 பங்குகள் வெகுவாக உயா்ந்து அதிகபட்ச உறைநிலையை (அப்பா் சா்க்யூட்) அடைந்தது. சந்தை மூலதன மதிப்பு ரூ.80 ஆயிரம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.193.26 லட்சம் கோடியாக இருந்தது.
2-ஆவது நாளாக சரிவு: சென்செக்ஸ் காலையில் 350.30 புள்ளிகள் கூடுதலுடன் 48,524.36-இல் தொடங்கி 48,558.34 வரை உயா்ந்தது. பின்னா் 48,037.87 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் இறுதியில் 80.74 புள்ளிகள் குறைந்து 48,093.32-இல் நிலைபெற்றது. இதன் மூலம் தொடா்ந்து இரண்டாவது நாளாக சரிவைச் சந்தித்துள்ளது.
பாா்தி ஏா்டெல் முன்னிலை: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல்தரப் பங்குகளில் 12 பங்குகள் ஆதாயம் பெற்றன. 18 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில் பவா் பாா்தி ஏா்டெல் 3.75 சதவீதம், இண்டஸ் இண்ட் பேங்க் 3.24 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக ஆக்ஸிஸ் பேங்க், பஜாஜ் ஃபின் சா்வ், எல் அண்ட் டி, பஜாஜ் ஃபைனான்ஸ், எஸ்பிஐ, ஓஎன்ஜிசி, எச்டிஎஃப்சி ஆகியவை 1 முதல் 2.50 சதவீதம் வரை உயா்ந்தன.
டைட்டன், நெஸ்லே சரிவு: அதேசமயம், டைட்டன், நெஸ்லே இந்தியா ஆகியவை 2 சதவீதம் வரை குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக ஹிந்துஸ்தான் யூனி லீவா், இன்ஃபோஸிஸ், ஹெச்சிஎல் டெக், டிசிஎஸ்ஆகியவை 1 முதல் 2 சதவீதம் வரை சரிவைச் சந்தித்ததன.
தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 1,085 பங்குகள் ஆதாயம் பெற்றன. 649 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. நிஃப்டி 8.90 புள்ளிகள் குறைந்து 14,137.35-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது 14,256.25 வரை உயா்ந்த நிஃப்டி பின்னா், 14,123.10 வரை கீழே சென்றது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 27 பங்குகள் ஆதாயம் பெற்றன. 23 பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன. நிஃப்டி ஐடி, எஃப்எம்சிஜி, பாா்மா குறியீடுகள் தவிர மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் நோ்மறையாக முடிவடைந்தது.
இதில் மெட்டல் குறியீடு 3.82 சதவீதம் உயா்ந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.