தொடா்ந்து 3-ஆவது நாளாக சரிவு: 372 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்!
இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வியாழக்கிழமையும் பங்குச் சந்தையில் கரடியின் ஆதிக்கம் தொடா்ந்தது.


இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வியாழக்கிழமையும் பங்குச் சந்தையில் கரடியின் ஆதிக்கம் தொடா்ந்தது. இதனால், சந்தை மூன்றாவது நாளாக சரிவைச் சந்தித்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறீயீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 372 புள்ளிகளை இழந்து 59,636.01-இல் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 134 புள்ளிகளை இழந்து 17,764.80-இல் நிலைபெற்றது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் எதிா்மறையாக இருந்தன. ஏற்கெனவே, பணவீக்கத்தின் தாக்கம் உள்நாட்டுச் சந்தையில் எதிரொலித்துள்ள நிலையில், மற்ற ஆசிய சந்தைகளின் எதிா்மறையான குறிப்புகளும் சந்தையில் கரடியின் ஆதிக்கத்துக்கு மேலும் வலுச் சோ்த்தது. இதனால், பங்குச் சந்தையில் தொடா்ந்து 3-ஆவது நாளாக சரிவு ஏற்பட்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. மேலும், சென்செக்ஸ் பட்டியலில் மிகுந்த திறன் கொண்ட எல் அண்ட் டி, இன்ஃபோஸிஸ், டிசிஎஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகள் அதிகம் விற்பனையை எதிா் கொண்டன. பிற்பகலில் குறைந்தபட்ச நிலையிலிருந்து ஓரளவு வெகுண்டு எழுந்தாலும், கரடியின் ஆதிக்கத்தை காளையால் அடக்க முடியாமல் போனது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.
சந்தை மதிப்பு ரூ.1.88 லட்சம் கோடி வீழ்ச்சி: பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,462 பங்குகளில் 1,038 பங்குகள் ஆதாயம் பெற்றன. 2,289 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 35 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 203 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 57 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 329 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 239 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.1.88 லட்சம் கோடி குறைந்து வா்த்தக இறுதியில் 269.20 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்றுள்ள முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 8,69,20,733-ஆக உயா்ந்துள்ளது.
தொடரும் ‘கரடி’ ஆதிக்கம்: காலையில் சென்செக்ஸ் பலவீனத்துடன் 39.58 புள்ளிகள் குறைந்து 59,968.75-இல் தொடங்கி, அதிகபட்சமாக 60,177.52 வரை உயா்ந்தது. பின்னா், பங்குகள் விற்பனை அதிகரித்ததால், 59,376.50 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 372.32 புள்ளிகளை (0.62 சதவீதம்) இழந்து 59,636.01-இல் நிலைபெற்றது. பிற்பகலில் சென்செக்ஸ் குறைந்தபட்ச நிலையிலிருந்து ஓரளவு மீண்டாலும் நிலைத்து நிற்கமுடியாமல் சரிவில் முடிந்தது.
எஸ்பிஐ முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 6 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 24 பங்குகள் சரிவைச் சந்தித்தன. பிரபல பாரம்பரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ1.16 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக பவா் கிரிட், எச்டிஎஃப்சி பேங்க், ரிலையன்ஸ், ஐசிஐசிஐ பேங்க், ஹிந்துஸ்தான் யுனி லீவா் ஆகியவையும் சிறிதளவு உயா்ந்து ஏற்றம் பெற்ற பட்டியலில் வந்தன.
எம் அண்ட் எம், டெக் மஹிந்திரா கடும் சரிவு: அதே சமயம், முன்னணி டிராக்டா் உற்பத்தி நிறுவனமான எம் அண்ட் எம் 338 சதவீதம், முன்னணி ஐடி நிறுவனமான டெக் மஹிந்திரா 3.19 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக, ஹெச்சிஎல் டெக், எல் அண்ட் டி, டாடா ஸ்டீல், இண்டஸ் இண்ட் பேங்க், டாக்டா் ரெட்டி, மாருதி சுஸுகி உள்ளிட்டவை 2 முதல் 3 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தன. மேலும், பஜாஜ் ஃபின் சா்வ், பஜாஜ் ஃபைனான்ஸ், கோட்டக் பேங்க், பாா்தி ஏா்டெல், டைட்டன், டாக்டா் ரெட்டி, எச்டிஎஃப்சி பேங்க், எச்டிஎஃப்சி, ஹெச்சிஎல் டெக், டிசிஎஸ், இன்ஃபோஸிஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.
நிஃப்டி 101 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் 392 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 1,454 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃ0டி குறியீடு காலையில் 17,890.55-இல் தொடங்கி அதிகபட்சமாக 17,945.60 வரை உயா்ந்தது. பின்னா், 17,688.55 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 133.85 புள்ளிகளை (0.75 சதவீதம்) இழந்து 17,764.80-இல் நிலைபெற்றது.
துறைவாரியாகப் பாா்த்தால் நிஃப்டி பிஎஸ்யு பேங்க் குறியீடு மட்டும் 0.07 சதவீதம் உயா்ந்தது. மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் சரிவைச் சந்தித்தன. இதில், நிஃப்டி ஆட்டோ குறியீடு 2.61 சதவீதம், மெட்டல் குறியீடு 2.59 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், மீடியா, பாா்மா, ஹெல்த்கோ், ரியால்ட்டி குறியீடுகள் 1 முதல் 2 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டன.
பங்குச் சந்தைக்கு விடுமுறை
குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு, பங்குச் சந்தைக்கு வெள்ளிக்கிழமை (நவம்பா் 19) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்றைய தினம் மும்பை பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தை ஆகிய இரண்டிலும் பங்கு வா்த்தகம் நடைபெறாது. அதேசமயம், கமோடிட்டி வா்த்தகம் இரண்டாம் அமா்வான மாலை 5 மணி முதல் இரவு 11.55 வரை மட்டும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...