பெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

5-ஆவது நாளாக "கரடி' ஆட்டம்: சென்செக்ஸ் 704 புள்ளிகள் வீழ்ச்சி

இந்த வாரத்தின் இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமையும் பங்குச் சந்தை சரிவை சந்தித்தது.

News image

ஐடி, வங்கிப் பங்குகள் விலை சரிவு:சென்செக்ஸ் 483 புள்ளிகள் வீழ்ச்சி

Updated On :19 ஏப்ரல் 2022, 10:41 pm

தினமணி

இந்த வாரத்தின் இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமையும் பங்குச் சந்தை சரிவை சந்தித்தது.
 நாள் முழுவதும் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 704 புள்ளிகளை இழந்தது.
 ரிலையன்ஸ்: கரடியின் தொடர் தாக்குதலால், பங்குச் சந்தை தொடர்ந்து 5-ஆவது நாளாக சரிவைச் சந்தித்தது. இருப்பினும் மார்க்கெட் லீடர் ரிலையன்ஸ் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு காணப்பட்டது.
 சந்தையில் காலை முதல் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், பெரும்பாலான நேரம் நேர்மறையாக வர்த்தகம் நடந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அதாவது பிற்பகல் 2.30 மணிக்கு மேல் பங்குகள் விற்பனை அதிகரித்தது.
 எச்டிஎஃப்சி: குறிப்பாக, எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், இன்ஃபோசிஸ் உள்ளிட்டவை கடும் பின்னடைவைச் சந்தித்தன. இதனால், 5-ஆவது நாளாக சரிவு தவிர்க்க முடியாததாகிவிட்டது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 பணவீக்கம்: உக்ரைனில் ரஷியா தனது தாக்குதலை தீவிரப்படுத்தியது, தடையின்றி வெளிநாட்டு நிதி வெளியேற்றம், ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் பணவீக்க கவலைகள் ஆகியவை முதலீட்டாளர்களின் நம்பிக்கையை குறைத்துள்ளன.
 மேலும், உலோகங்கள் விலை உயர்வு, புவிசார் அரசியல் பதற்றங்கள் தீவிரமடைவது, பணவீக்கம் அதிகரிப்பு சந்தையை கவலையடையச் செய்துள்ளன என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
 அந்நிய முதலீடு: இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை வர்த்தகத்தில் ரூ.6,387.45 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
 2,120 நிறுவனப் பங்குகள் விலை வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,536 நிறுவனப் பங்குகளில் 1,294 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 2,120 பங்குகள் விலை குறைந்தன. 122 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 216 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 20 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.3.42 லட்சம் கோடி குறைந்து வர்த்தக முடிவில் ரூ.269.44 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு செய்துள்ள முதலீட்டாளர்கள் எண்ணிக்கை 10.29 கோடியை தாண்டியது.
 தொடர் வீழ்ச்சியில் சென்செக்ஸ்: காலையில் உற்சாகத்துடன் 215.03 புள்ளிகள் கூடுதலுடன் 57,381.77-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 57,464.08 வரை உயர்ந்தது. பின்னர், 56,009.07 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 703.59 புள்ளிகளை இழந்து 56,463.15-இல் நிலைபெற்றது. வர்த்தகத்தின் போது, சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் 297.34 புள்ளிகள் உயர்ந்திருந்த நிலையில், கடைசி நேரத்தில் கரடியின் கடும் தாக்குதலால், சென்செக்ஸ் 5-ஆவது நாளாக சரிவில் முடிவடைந்தது.
 இன்ஃபோசிஸ் பங்கின் விலை சரிவு:
 30 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் 4 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. அதே சமயம், 26 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. இதில், எச்டிஎஃப்சி 5.50 சதவீதம், எச்டிஎஃப்சி பேங்க் 3.73 சதவீதம், இன்ஃபோசிஸ் 3.55 சதவீதம் வரை குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன.
 மேலும், ஐடிசி, நெஸ்லே, டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக், ஹிந்துஸ்தான் யுனிலீவர், கோட்டக் பேங்க், எல் அண்ட் டி உள்ளிட்டவை 2 முதல் 3.30 சதவீதம் வரை குறைந்தன.
 மாருதி சுஸுகி, டிசிஎஸ், விப்ரோ, டாக்டர் ரெட்டீஸ், இன்டஸ்இண்ட் பேங்க் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.
 ஐசிஐசிஐ வங்கி: அதே சமயம், மார்க்கெட் லீடர் ரிலையன்ஸ் 3.71 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது.
 மேலும், ஐசிஐசிஐ பேங்க், எஸ்பிஐ, பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவையும் சிறிதளவு உயர்ந்து விலையுயர்ந்த பட்டியலுக்கு வந்தன.
 நிஃப்டி 215 புள்ளிகள் வீழ்ச்சி: 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில் 6 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 44 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி குறியீடு மேலும் 215.00 புள்ளிகள் (1.25 சதவீதம்) குறைந்து 16,958.65-இல் நிறைவடைந்தது. காலையில் 85.30 புள்ளிகள் கூடுதலுடன் 17,258.95-இல் தொடங்கிய நிஃப்டி, அதிகபட்சமாக 17,275.65 வரை உயர்ந்தது. பின்னர், 16,958.65 வரை கீழே சென்றது.
 ஐடி, எஃப்எம்சிஜி, பேங்க் குறியீடுகள் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஆயில் அண்ட் காஸ் குறியீடு மட்டும் 0.75 சதவீதம் உயர்ந்திருந்தது. மற்ற துறை குறியீடுகள் சரிவைச் சந்தித்தன. இதில், நிஃப்டி ஐடி குறியீடு அதிகபட்சமாக 2.98 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. இதற்கு அடுத்ததாக, எஃப்எம்சிஜி, ரியால்ட்டி, ஃபைனான்சியல் சர்வீஸஸ் குறியீடுகள் 2 முதல் 2.80 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தன. மேலும், நிஃப்டி பேங்க், ஆட்டோ, மீடியா, மெட்டல், பார்மா, பிரைவேட் பேங்க் குறியீடுகளும் 1 முதல் 2 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.
 முதலீட்டாளர்களுக்கு ரூ.8 லட்சம் கோடி இழப்பு
 இந்தியப் பங்குச் சந்தைகள் கரடியின் பிடியில் சிக்கி தொடர்ந்து 5-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் சரிவைச் சந்தித்தது. கடந்த ஐந்து நாள்களில் மட்டும் சென்செக்ஸ் 2,984.03 புள்ளிகளை (5.01%) இழந்துள்ளது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.8,08,067.6 கோடி குறைந்து ரூ.2,66,02,728.45 கோடியாக வீழ்ச்சியடைந்துள்ளது.
 மைண்ட்ரீ பங்கு 9% சரிவு
 மைண்ட்ரீ நிறுவனத்தின் லாபம் 49 சதவீதம் அதிகரித்துள்ளதாக தரவுகள் வெளியானதைத் தொடர்ந்து வர்த்தகத்தின் தொடக்கத்தில் அந்நிறுவனப் பங்கின் விலை 3% அதிகரித்து ரூ.4,080 வரை சென்றது. முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி செயல்பட்டதையடுத்து வர்த்தகத்தின் இறுதியில் மைண்ட்ரீ பங்கின் விலை 8.13 சதவீதம் சரிந்து ரூ.3,638.70-இல் நிலைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.