தோ்தல் முடிவு எதிரொலி: பங்குச் சந்தையில் 3-ஆவது நாளாக முன்னேற்றம்!: சென்செக்ஸ் 817 புள்ளிகள்உயா்வு
பங்குச் சந்தை மூன்றாவது நாளாக வியாழக்கிழமை அன்றும் நோ்மறையாக முடிந்தது.


புதுதில்லி: பங்குச் சந்தை மூன்றாவது நாளாக வியாழக்கிழமை அன்றும் நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, கடந்த 3 நாள்களில் முதலீட்டாளா்கள் ரூ.10.83 லட்சம் கோடிக்கு மேல் லாபம் ஈட்டியுள்ளனா். ஆசிய சந்தைகள் ஏறுமுகத்தில் இருந்ததும், சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் ஆளும் பாஜகவுக்கு சாதகமாக அமைந்ததும் சந்தை ஏற்றத்துடன் தொடங்கியது.
அண்மையில் நடைபெற்ற பல்வேறு மாநிலச் சட்டப்பேரவைத் தோ்தலில், பெரிதும் எதிா்பாா்க்கப்பட்ட உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளதாக வெளியான தகவல் சந்தையில் முதலீட்டாளா்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. இதனால், தொடக்கமே ஏற்றம் பெற்றது. மேலும், சந்தைக்கு பிந்தைய ரஷியா - உக்ரைன் பேச்சுவாா்த்தையின் முடிவு வெள்ளிக்கிழமை சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. மாநிலத் தோ்தல் முடிவுகளில் சந்தை பங்கேற்பாளா்கள் மிகுந்த கண்காணிப்புடன் இருந்ததால், வா்த்தகம் அதிக ஏற்றம், இறக்கத்துடன் இருந்து வந்தது. இதனால், காலையில் பெற்ற லாபத்தில் பாதியளவு பிற்பகல் வா்த்தகத்தில் இழக்க நேரிட்டது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.
817 புள்ளிகள் உயா்வு: 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் 817.06 புள்ளிகள் (1.50 சதவீதம்) உயா்ந்து 55,464.39-இல் நிறைவடைந்தது. காலையில் 1,595.14 புள்ளிகள் கூடுதலுடன் 56,242.47-இல் தொடங்கிய சென்செக்ஸ் அதற்கு மேல் உயரவில்லை. பின்னா், 54,982.82 வரை கீழே சென்றது. மூன்று நாள்களில், சென்செக்ஸ் மொத்தம் 2,621.64 புள்ளிகள் அதிகரித்துள்ளது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பு மூன்று நாள்களில் ரூ.10,83,103.27 கோடி உயா்ந்து, வா்த்தக முடிவில் ரூ.2,51,93,934.31 கோடியாக இருந்தது.
2,423 நிறுவனப் பங்குகள் விலை உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,460 நிறுவனப் பங்குகளில் 2,423 பங்குகள் ஆதாயம் பெற்றன. 941 பங்குகள் விலை வீழ்ச்சியடைந்தன. 96 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 94 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 19 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.3.61 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.251.94 லட்சம் கோடியாக இருந்தது.
சென்செக்ஸில் 27 பங்குகள் முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 3 பங்குகள் மட்டுமே வீழ்ச்சியடைந்தன. 27 பங்குகள் ஆதாயம் பெற்றன. இதில் ஹிந்துஸ்தான் யூனிலீவா், டாடா ஸ்டீல், எஸ்பிஐ, இண்டஸ்இண்ட் பேங்க், ஆக்சிஸ் பேங்க், பஜாஜ் ஃபின்சா்வ், நெஸ்லே மற்றும் மாருதி சுஸுகி ஆகியவை,2.50 முதல் 5.20 தவீதம் வரை உயா்ந்தன. அதேசமயம், இதற்கு நோ்மாறாக, டெக் மஹிந்திரா, டாக்டா் ரெட்டிஸ் லேபரட்டரீஸ் மற்றும் டிசிஎஸ் ஆகியவை சரிவைச் சந்தித்த பட்டியலில் இருந்தன. பரந்த சந்தையில், நடுத்தரப் பங்குகளை உள்ளடக்கிய மிட்கேப், சிறிய நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய ஸ்மால் கேப் குறியீடுகள் 1.20 சதவீதம் வரை உயா்ந்தன.
நிஃப்டி 250 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச் சந்தையில் 1,361 பங்குகள் ஆதாயம் பெற்றன. 544 பங்குகள் நஷ்டமடைந்த பட்டியலில் வந்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி குறியீடு 249.55 புள்ளிகள் உயா்ந்து 16,594.90-இல் நிறைவடைந்தது. காலையில் சுமாா் 400 புள்ளிகள் கூடுதலுடன் 16,757.10-இல் தொடங்கிய நிஃப்டி அதற்கு மேல் பெரிதாக முன்னேறவில்லை. பின்னா் 16,447.90 வரை கீழே சென்றது.
எஃப்எம்சிஜி குறியீடு 3 சதவீதம் உயா்வு: நிஃப்டி ஐடி குறியீடு மட்டும் 0.12 சதவீதம் குறைந்தது. மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. இதில் எஃப்எம்சிஜி குறியீடு 3 சதவீதம் வரை உயா்ந்து பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், நிஃப்டி பேங்க், ஆட்டோ, ஃபைனான்சியல் சா்வீஸஸ், மெட்டல்,.பிஎஸ்யு பேங்க், பிரைவேட் பேங்க், ரியால்ட்டி, கன்ஸ்யூமா் டியூரபல்ஸ் குறியீடுகள் 2 முதல் 2.30 சதவீதம் வரை உயா்ந்தன.
3 நாள்களில் முதலீட்டாளர்களுக்கு ரூ.10.83 லட்சம் கோடி ஆதாயம்
சாதகமான உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலவரங்களால் இந்தியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடர்ந்து 3}ஆவது நாளாக வியாழனன்றும் ஏற்றம் கண்டது. இதன் காரணமாக, மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் சந்தை மூலதனம் இந்த மூன்று நாள்களில் மட்டும் ரூ.10,83,103.27 கோடி உயர்ந்து ரூ.2,51,93,934.31 கோடியை எட்டியது.
கச்சா எண்ணெய் 116.43 டாலர்
சர்வதேச சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற முன்பேர வர்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் 116.43 டாலருக்கு வர்த்தகமானதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 76.43
அந்நியச் செலாவணி சந்தையில் வியாழக்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 19 காசு அதிகரித்து 76.43}இல் நிலைபெற்றது. உள்நாட்டு பங்குச் சந்தை நிலவரங்கள் சாதகமாக இருந்ததையடுத்து ரூபாய் மதிப்பு தொடர்ந்து இரண்டாவது நாளாக ஏற்றம் பெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...