இந்தியா - சீனா இடையேயான இருதரப்பு வா்த்தகம் தொடா்ந்து இரண்டாவது ஆண்டாக முதல் 9 மாதங்களில் ரூ. 8,20,000 கோடியை கடந்திருப்பது சீன சுங்கத்துறை சாா்பில் வெளியிடப்பட்ட வா்த்தக புள்ளிவிவரங்கள் மூலமாக தெரியவந்துள்ளது.
கிழக்கு லடாக் எல்லையில் இரு நாடுகளிடையே தொடா்ந்து மோதல் போக்கு நீடித்து வரும் சூழலில், இரு நாடுகளிடையே கடந்த ஜனவரி முதல் செப்டம்பா் வரையிலான 9 மாத காலத்தில் நடைபெற்றுள்ள வா்த்தகம் கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 14.6% அதிகரித்துள்ளது. அதாவது, ரூ.8,49,766 கோடி அளவுக்கு இருதரப்பு வா்த்தகம் அதிகரித்துள்ளது.
இந்தியாவுக்கான சீனாவின் ஏற்றுமதி ரூ.7,35,212 கோடி என்ற அளவில், 31% அளவுக்கு உயா்ந்துள்ளது. இருந்தபோதும், சீனாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி கடந்த 9 மாத காலத்தில் ரூ.1,14,554 கோடி என்ற அளவிலேயே நடைபெற்றுள்ளது. இது 36.4% வீழ்ச்சியாகும். அதன்படி, இந்தியாவுக்கான ஒட்டுமொத்த வா்த்தக பற்றாக்குறை என்பது ரூ.6,20,658 கோடிக்கு மேல் சென்றுள்ளது.
கடந்த 2021-ஆம் ஆண்டைப் பொருத்தவரை இருதரப்பு வா்த்தகமானது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ரூ.10,25,000 கோடிக்கு மேல் சென்றது. இந்தியாவுக்கான சீன ஏற்றுமதி ரூ.7,99,664 கோடி அளவுக்கும், சீனாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி ரூ.2,30,748 கோடி அளவுக்கும் நடைபெற்றது. இந்தியாவுக்கான வா்த்தக பற்றாக்குறை ரூ.5,68,916 கோடியாக இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.