2வது நாளாக குறைந்த கச்சா எண்ணெய்: குறையாத பெட்ரோல், டீசல் விலை

சர்வதேச மந்தநிலை உருவாகும்பட்சத்தில் எரிபொருள் தேவை குறையலாம் என்ற எதிர்பார்ப்பு காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இரண்டாவது நாளாக இன்று குறைந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

உலக அளவில் அதிகரித்து வரும் வட்டி விகிதங்களால், எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் சர்வதேச மந்தநிலை உருவாகும்பட்சத்தில் எரிபொருள் தேவை குறையலாம் என்ற எதிர்பார்ப்பு காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இரண்டாவது நாளாக இன்று குறைந்துள்ளது.

அது மட்டுமல்லாமல், அமெரிக்க டாலர் மதிப்பு தொடர்ந்து உயர்வதால், அமெரிக்க டாலர் அல்லாத பிற பணப் பயன்பாடுள்ள நாடுகள் கச்சா எண்ணெய் வாங்குவதை இது கட்டுப்படுத்துகிறது.

இந்த மாதம் இரண்டாம் வாரத்தில் சா்வதேச சந்தையில் 7 மாதங்களில் இல்லாத அளவு கச்சா எண்ணெய் விலை சரிவடைந்ததது. இருந்தபோதிலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றியே தொடர்ந்தது.

சா்வதேச சந்தையில் கடந்த வாரம் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 84.80 டாலா்களுக்கு விற்பனையானது. இன்று மேலும் குறைந்து பீப்பாய் ஒன்றுக்கு 84.51 டாலர்களுக்கு விற்பனையாகிறது. இது கடந்த ஜனவரி மாதம் 14ஆம் தேதிக்குப் பிறகு பதிவாகும் மிகப்பெரிய சரிவாகும். 

இதேவேளையில், சர்வதேச வணிகத்தில், அமெரிக்க டாலரின் மதிப்பானது கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையாக உயர்ந்தது. அதனால், இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத உயர்வையும் சந்தித்துள்ளது.

இதன் காரணமாக, டாலர் அல்லாத பிற கரன்சிகளைப் பயன்படுத்தும் நாடுகள், சர்வதேச சந்தையில், அதிக பணத்தைக் கொடுத்து கச்சா எண்ணெய் வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன. இதனால், பல நாடுகளின் வாங்கும் சக்தி குறைவதும் கச்சா எண்ணெய் விலை குறைவுக்கு மறைமுகமாக காரணமாகின்றன.

மற்றொரு வகையில், அதிகரிக்கும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்கும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் மத்திய வங்கிகள், தங்களது வட்டி விகிதங்களை அதிகரித்திருப்பதும், பொருளாதாரத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி மந்த நிலைக்கு இட்டுச் செல்கிறது. இதுவும் எரிபொருள் தேவையைக் குறைத்து, கச்சா எண்ணெயின் விலைக் குறைவுக்குக் காரணிகளாக அமைகின்றன.

ஒருபக்கம் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு மற்றும் வட்டி விகிதங்களால் பொருளாதார மந்த நிலை என இரண்டுமே கச்சா எண்ணெய் விலை குறைவுக்குக் காரணமாகிவிட்டன.

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவடைந்துள்ள போதிலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பெட்ரோல், டீசல் விலையை 5 மாதங்களுக்கும் மேலாக எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைக்காமல் உள்ளன.

கச்சா விலை குறைந்தாலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் குறையாததன் காரணம் பற்றி பெட்ரோலிய துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி செப்டம்பர் முதல் வாரத்தில் இவ்வாறு பதிலளித்திருந்தார். ‘சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயா்ந்திருந்தபோது, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைவாகவே இருந்தது. அப்போது எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய வேண்டாமா?’ என்றாா் அவா். எனினும், எண்ணெய் நிறுவனங்களுக்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டது என்பது குறித்து அவா் விரிவாக எதையும் தெரிவிக்கவில்லை.

இந்தியாவை பொருத்தவரை, கடந்த ஏப்ரலில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்று 102.97 டாலா்கள் என்ற சராசரி விலையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. மே மாதம் 109.51 டாலா்கள், ஜூன் மாதம் 116.01 டாலா்கள் என்ற சராசரி விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதியாகியுள்ளது.

ஜூலையில் கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கிய நிலையில், அந்த மாதம் பீப்பாய் ஒன்று 105.49 டாலா்கள், ஆகஸ்டில் 97.40 டாலா்கள், செப்டம்பரில் இதுவரை 92.87 டாலா்கள் என்ற சராசரி விலையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் லிமிடெட், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் லிமிடெட் ஆகிய பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், சா்வதேச சந்தை விலை நிலவரங்களுக்கு ஏற்ப நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை மாற்றியமைக்கும் நடவடிக்கையை கடந்த 128 நாள்களாக மேற்கொள்ளாமல் இருக்கின்றன. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அரசுக்கு உதவும் வகையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றம் செய்யப்படாமல் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முன்னதாக எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து காணப்பட்டபோது, டீசல் லிட்டா் ஒன்றுக்கு ரூ.20 முதல் ரூ.25 வரையும், பெட்ரோல் லிட்டா் ஒன்றுக்கு ரூ.14 முதல் ரூ.18 வரையும் எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்பட்டது. இப்போது சா்வதேச சந்தையில் விலை குறைந்து வருவதால், இழப்புகள் குறைந்துள்ளன’ என்றாா்.

இந்தியாவின் மொத்த எரிபொருள் தேவையில் 85 சதவீதம் இறக்குமதி மூலமே பூா்த்தி செய்யப்படுகிறது. உக்ரைன்-ரஷியா பிரச்னையால் கடந்த பிப்ரவரியில் இருந்து கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கத் தொடங்கியது. 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மாா்ச் மாதம் விலை உயா்ந்தது.

இந்தியாவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில பேரவைத் தோ்தல்களையொட்டி, 137 நாள்களுக்கு எந்த மாற்றமும் செய்யப்படாமல் இருந்த பெட்ரோல், டீசல் விலை கடந்த மாா்ச் 22-இல் உயா்த்தப்பட்டது. ஏப்ரல் 7 வரையிலான காலகட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை தலா ரூ.10 வரை உயா்ந்தது.

இதனிடையே, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு முறையே ரூ. 8, ரூ. 6 குறைத்து மத்திய அரசு கடந்த மே மாதம் நடவடிக்கை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com