சென்செக்ஸ் 72,000 புள்ளிகளைக் கடந்து  வரலாற்றுச் சாதனை!

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச் சந்தை நேர்மறையாக முடிந்தது.
சென்செக்ஸ் 72,000 புள்ளிகளைக் கடந்து  வரலாற்றுச் சாதனை!
Updated on
2 min read

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச் சந்தை நேர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து,  மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ்  முதல்முறையாக 72,000  புள்ளிகளைக் கடந்து வரலாற்றுச் சாதனை அளவில் நிலைபெற்றது. பங்குச்சந்தை தொடர்ந்து நான்காவது நாளாக முன்னேற்றம் கண்டுள்ளது.
உலகளாவிய சந்தைகளில் கிறிஸ்துமஸ் எழுச்சி தொடர்ந்தது.  இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை புதிய சாதனை உச்சத்தை எட்டியது. இதன்மூலம் கடந்த வார இழப்பு எளிதாக மீட்டெடுக்கப்பட்டது. அமெரிக்க மத்திய வங்கி முன்கூட்டியே வட்டி விகித குறைப்பை அறிவிக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு  சந்தைக்கு சாதகமாக அமைந்துள்ளது. இது கிறிஸ்துமஸ் நாளில் சந்தை மேல்நோக்கிய போக்குக்கு வழிவகுத்தது. குறிப்பாக உள்நாட்டுச் சந்தையில் ஆயில் அண்ட் காஸ் குறியீடு தவிர வங்கி, ஆட்டோ, மெட்டல் உள்பட அனைத்துத் துறை குறியீடுகளும் ஆதாயப் பட்டியலில் வந்தன என்று என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. 
சந்தை மதிப்பு உயர்வு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு  ரூ.2.40 லட்சம் கோடி உயர்ந்து  வர்த்தக முடிவில் ரூ.361.32 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை ரூ.95.20   கோடிக்கு பங்குகளை விற்றுள்ளனர்.  அதே சமயம், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.167.04 கோடி அளவுக்கு  பங்குகளை  வாங்கியுள்ளன.
சென்செக்ஸ் சாதனை: காலையில் 155.22 புள்ளிகள் கூடுதலுடன் 71,492.02-இல் தொடங்கிய சென்செக்ஸ், 71,473.65 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக  72,119.85  வரை மேலே சென்று புதிய உச்சத்தை பதிவு செய்த சென்செக்ஸ், இறுதியில் 701.63 புள்ளிகள் (0.98 சதவீதம்)  கூடுதலுடன்  72,038.43  என்ற புதிய உச்சத்தில் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,914 பங்குகளில் 1,945  பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,859 பங்குகள் விலை வீழ்ச்சியைச் சந்தித்தன. 110 பங்குகள் விலை மாற்றமின்றி நிலைபெற்றன.
24 பங்குகள் விலை உயர்வு: 
சென்செக்ஸ் பட்டியலில் அல்ட்ரா டெக் சிமென்ட், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், பார்தி ஏர்டெல், எஸ்பிஐ, இண்டஸ்இண்ட் வங்கி  உள்பட மொத்தம் 28 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. அதே சமயம், என்டிபிசி, டெக் மஹிந்திரா  ஆகிய 2  பங்குகள் மட்டுமே வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.
நிஃப்டி வரலாற்றுச் சாதனை அளவில் நிறைவு!
தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி காலையில் 56.30  புள்ளிகள் கூடுதலுடன்  21,497.65-இல் தொடங்கி 21,495.80 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னர்,  அதிகபட்சமாக 21,675.75 வரை மேலே சென்று புதிய வரலாற்றுச் சாதனை அளவைப் பதிவு செய்தது.   இறுதியில்  நிஃப்டி, 213.40 புள்ளிகள் (1.00 சதவீதம்) கூடுதலுடன் 21,654.75-இல் நிறைவடைந்தது. தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 1,105 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 1,034 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. நிஃப்டி பட்டியலில் 39 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 9 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் வந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com