தள்ளாடிய சந்தையில் ஆட்டோ பங்குகளுக்கு நல்ல வரவேற்பு

கடந்த ஐந்து நாள்களாக தொடர்ந்து எழுச்சி பெற்று வந்த பங்குச்சந்தை, புதன்கிழமை தள்ளாட்டம் கண்டது.
தள்ளாடிய சந்தையில் ஆட்டோ பங்குகளுக்கு நல்ல வரவேற்பு
Updated on
1 min read

கடந்த ஐந்து நாள்களாக தொடர்ந்து எழுச்சி பெற்று வந்த பங்குச்சந்தை, புதன்கிழமை தள்ளாட்டம் கண்டது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 33 புள்ளிகளை இழந்து நிலைபெற்றது. அதே சமயம், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 9.50 புள்ளிகள் உயர்ந்து நிலைபெற்றது.
 உலகளாவிய சந்தைக் குறிப்புகள் எதிர்மறையாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை எச்சரிக்கையுடன் தொடங்கியது. இருப்பினும், ஆட்டோ, மீடியா, எஃப்எம்சிஜி, பிஎஸ்யு பேங்க், ஃபார்மா, ஹெல்த்கேர், பங்குகளுக்கு வரவேற்பு இருந்தது. ஆனால், தனியார் வங்கிகள், நிதி நிறுவனப் பங்குகள் விற்பனையை எதிர்கொண்டன. குறிப்பாக ஹெச்டிஎஃப்சி இரட்டை நிறுவனப் பங்குகள் விலை வெகுவாகக் குறைந்ததால் சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும் பெரிதாக முன்னேற்றம் பெற முடியாமல் போனது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 சந்தை மதிப்பு உயர்வு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு புதன்கிழமை ரூ.1.32 லட்சம் கோடி உயர்ந்து வர்த்தக நேர முடிவில் ரூ.299.90 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் செவ்வாய்க்கிழமை ரூ.2,134.33 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
 சென்செக்ஸ் லேசான சரிவு: சென்செக்ஸ் காலையில் 14.63 புள்ளிகள் கூடுதலுடன் 65,493-இல் தொடங்கி அதிகபட்சமாக 65,584.33 வரை உயர்ந்தது. பின்னர், பிற்பகல் வர்த்தகத்தில் 65,256.49 வரை கீழே சென்று சென்செக்ஸ் இறுதியில் 33.01 புள்ளிகளை இழந்து 65,446.04-இல் முடிவடைந்தது.
 19 பங்குகள் விலை உயர்வு: சென்செக்ஸ் பட்டியலில் 19 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. 11 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 1,238 பங்குகள் ஆதாயம் பெற்றன. 819 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. மேலும், 50 முன்னணி நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில் 30 பங்குகள்ஆதாயப் பட்டியலிலும், 20 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் வந்தன.
 ஏற்றம் பெற்ற பங்குகள்
 மாருதி 3.61%
 இண்டஸ்இண்ட் வங்கி 2.38%
 டெக் மஹிந்திரா 2.37%
 ஹிந்துஸ்தான் யுனிலீவர் 2.01%
 ஐடிசி 1.90%
 ஐசிஐசிஐ வங்கி 1.54%
 சரிவைக் கண்ட பங்குகள்
 ஹெச்டிஎஃப்சி வங்கி 3.20%
 ஹெச்டிஎஃப்சி 2.93%
 பஜாஜ் ஃபின்சர்வ் 0.80%
 விப்ரோ 0.57%
 டாடா மோட்டார்ஸ் 0.50%
 அல்ட்ராடெக் சிமென்ட் 0.47%
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com