ஆட்டோ, எஃப்எம்சிஜி பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 274 புள்ளிகள் உயர்வு

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச்சந்தை நேர்மறையாக முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்
ஆட்டோ, எஃப்எம்சிஜி பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 274 புள்ளிகள் உயர்வு
Updated on
2 min read

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச்சந்தை நேர்மறையாக முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 274 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 83 புள்ளிகளும் உயர்ந்து நிலைபெற்றன.
 உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நேர்மறையாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டு சந்தை இரண்டாவது நாளாக ஏற்றம் பெற்றது. குறிப்பாக மார்க்கெட் லீடர் ரிலையன்ஸ், முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ், முன்னணி நுகர்பொருள் உற்பத்தி நிறுவனமான ஐடிசி பங்குகளுக்கு கிடைத்த வரவேற்பும், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) இந்திய சந்தைகளில் தொடர்ந்து மேற்கொண்டு வரும் முதலீடும் பங்குச்சந்தை இரண்டாவது நாளாக வலுப்பெற உதவின என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 சென்செக்ஸ் மேலும் முன்னேற்றம்: சென்செக்ஸ் காலையில் 254.48 புள்ளிகள் கூடுதலுடன் 65,598.65-இல் தொடங்கி அதிகபட்சமாக 65,870.59 வரை மேலே சென்றது. பின்னர், பிற்பகல் வர்த்தகத்தில் 65,517.57 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 273.67 புள்ளிகள் உயர்ந்து 65,344.17-இல் முடிவடைந்தது. இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.1.73 லட்சம் கோடி உயர்ந்து வர்த்தக நேர முடிவில் ரூ.301.30 லட்சம் கோடியாக இருந்தது.
 19 பங்குகள் விலை உயர்வு: சென்செக்ஸ் பட்டியலில் 19 பங்குகள் ஆதாயம் பெற்றன. 11 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 1,205 பங்குகள் ஆதாயம் பெற்றன. 852 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 50 முன்னணி நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில் 33 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் இருந்தன. 15 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. டிசிஎஸ், கோட்டக் வங்கி ஆகிய இரண்டும் மாற்றமின்றி நிலைபெற்றன.


 எஃப்ஐஐ-க்கள் 6 நாள்களில் ரூ.9,753 கோடி முதலீடு
 இந்திய பங்குச் சந்தைகளில் "எஃப்ஐஐ' என்று சொல்லப்படும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து பங்குகளை வாங்குவதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
 இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து பார்த்தால் அதிகபட்சமாக 6-ஆம் தேதி ரூ.2,641 கோடி முதலீடு செய்துள்ளனர். இதற்கு அடுத்ததாக கடந்த 4-ஆம் தேதி ரூ.2,134 கோடி, 3-ஆம் தேதி ரூ.1,995 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளனர். அவர்கள் திங்களன்று மிகக் குறைந்த அளவாக ரூ.588.48 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கினர்.
 அதே சமயம், "டிஐஐ' என்று சொல்லப்படும் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள், பங்குகளை விற்பதில் கவனம் செலுத்தியுள்ளது தெரிய வந்துள்ளது. அவை கடந்த 3-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரையிலும் தொடர்ந்து பங்குகளை விற்றுள்ளன. அதிகபட்சமாக 7-ஆம் தேதி ரூ.2,964 கோடிக்கும், 6-ஆம் தேதி ரூ.2,351கோடி அளவுக்கும் பங்குகளை விற்றுள்ளன. திங்கள்கிழமை மட்டும் ரூ.288.38 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளன.
 இதன்படி, இந்திய சந்தைகளில் கடந்த 6 நாள்களில் மட்டும் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் மொத்தம் ரூ.6,600 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com