சென்செக்ஸ் 67,000 புள்ளிகளைக் கடந்து நிறைவு: வரலாற்றில் முதல்முறை

இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தை நேர்மறையாக முடிவடைந்தது. 
சென்செக்ஸ் 67,000 புள்ளிகளைக் கடந்து நிறைவு: வரலாற்றில் முதல்முறை
Updated on
2 min read

இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தை நேர்மறையாக முடிவடைந்தது. இதையடுத்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி ஆகிய இரண்டும் புதிய வரலாற்றுச் சாதனை அளவைப் பதிவு செய்துள்ளன. இறுதியில் சென்செக்ஸ் 302 புள்ளிகள் உயர்ந்து முதல்முறையாக 67,000-க்கு மேலே நிலைபெற்றது.
 அமெரிக்கா, ஐரோப்பிய சந்தைகளில் வர்த்தகம் நேர்மறையாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை காலையில் வெகுவாக உயர்ந்து தொடங்கியது. ஆனால், நேரம் செல்லச் செல்ல முன்னணி பங்குகளில் லாபப் பதிவு வரத் தொடங்கியது. இதனால், குறியீடுகள் ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் இருந்து வந்தன. வர்த்தகம் முடியும் தறுவாயில் முன்னணி பங்குகளுக்கு கிடைத்த வரவேற்பால் சந்தை வலுப்பெற்றது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.1.45 லட்சம் கோடி உயர்ந்து வர்த்தக நேர முடிவில் ரூ.304.54 லட்சம் கோடியாக இருந்தது.
 சென்செக்ஸ் மீண்டும் புதிய உச்சம்: சென்செக்ஸ் காலையில் 109.86 புள்ளிகள் கூடுதலுடன் 66,905.01-இல் தொடங்கி 66,703.61 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 67,171.38 வரை உயர்ந்து புதிய வரலாறறுச் சாதனை அளவை பதிவு செய்தது. இறுதியில் 302.30 புள்ளிகள் கூடுதலுடன் 67,097.44-இல் முடிவடைந்தது.
 20 பங்குகள் விலை உயர்வு: சென்செக்ஸ் பட்டியலில் 20 பங்குகள் ஆதாயம் பெற்றன. 10 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 1,207 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. 824 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 50 முன்னணி நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில் 31 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 19 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.
 நிஃப்டி புதிய உச்சத்தில் நிறைவு: தேசிய பங்குச் சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி, காலையில் 52.75 புள்ளிகள் கூடுதலுடன் 19,802.95-இல் தொடங்கியது. காலை வர்த்தகத்தில் 19,727.45 வரை கீழே சென்றது.
 பின்னர், பிற்பகல் வர்த்தகத்தில் 19,851.70 வரை மேலே சென்று புதிய வரலாற்றுச் சாதனை அளவைப் பதிவு செய்தது. இறுதியில் 83.90 புள்ளிகள் உயர்ந்து 19,833.90-இல் நிறைவடைந்தது. நிஃப்டி புதிய வரலாற்று உச்சத்தில் முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தகத்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com