எலக்ட்ரிக் கார்களின் நம்பகத்தன்மை குறைவு! ஆய்வுத் தகவல்

பெட்ரோல் வாகனங்களைவிட எலக்ட்ரிக் கார்களின் நம்பகத்தன்மை குறைவாக இருப்பதாக பயனர்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பெட்ரோல் கார்களைவிட எலக்ட்ரிக் வாகனங்களின் நம்பகத்தன்மை குறைவாக இருப்பதாக பயனர்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

சர்வதேச நாடுகள் பல காற்று மாசுபாட்டை குறைப்பதற்கான வழிமுறைகளை வகுத்து வரும் நிலையில், பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களால் இயக்கப்படும் வாகனங்களுக்கு படிப்படியாக முற்றுப்புள்ளி வைத்து வருகின்றனர். மாற்றாக எலக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவித்து வருகின்றனர்.

பல நாடுகளில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் சூழலில், 3.30 லட்சத்துக்கும் அதிகமான எலக்ட்ரிக் கார் பயனாளர்களின் கருத்துகளை பதிவு செய்து ‘கன்ஸ்யூமர் ரிப்போர்ட்’ என்ற அமைப்பு ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 2021 முதல் 2023 வரை தயாரிக்கப்பட்ட எலக்ட்ரிக் கார்கள், எரிபொருள்களால் இயக்கப்படும் கார்களைவிட 80 சதவிகிதம் அதிக பிரச்னைகளை சந்தித்துள்ளது தெரியவந்துள்ளது.

எலக்ட்ரிக் கார்களின் பயனர்கள் அதிகளவில் பேட்டரி மற்றும் சார்ஜ் செய்வதில் பல்வேறு பிரச்னைகளை சந்திப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும், கார்களின் முன்புறம் உள்ள பேனல் மற்றும் உட்புறம் உள்ள பாகங்களிலும் சில குறைபாடுகளை தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற நம்பகத்தன்மை ஒருபுறம் இருக்க அதிக விலை, குறைந்த சார்ஜிங் நிலையங்கள் மற்றும் அதிக சார்ஜிங் நேரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த ஓராண்டில் எலக்ட்ரிக் கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த 2022 ஜூன் மாதம் வரை எலக்ட்ரிக் கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 90 சதவிகிதம் அதிகரித்து காணப்பட்டது. ஆனால், 2022 ஜூன் முதல் 2023 ஜூன் வரையிலான ஓராண்டில் எலக்ட்ரிக் கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை 50 சதவிகிதமாக குறைந்துள்ளது.

இந்த நிலையில், எலக்ட்ரிக் கார்களின் உற்பத்தி தொடர் வீழ்ச்சியை சந்திக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கக் கோரி அமெரிக்காவை சேர்ந்த 3,900 வாகன விற்பனை நிறுவனங்கள் அந்நாட்டின் அதிபர் ஜோ பைடனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

அதில், எலக்ட்ரிக் வாகனங்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும், உற்பத்தியாளர்களுக்கு மானியம் வழங்கவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து ஆட்டோமொபைல் நிபுணர் ஒருவர் கூறுகையில், எரிபொருள் வாகனங்கள் பல ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளதால், அதன் குறைபாடுகள் சரிசெய்யப்பட்டுவிட்டன. எலக்ட்ரிக் வாகனங்களில் உள்ள குறைபாடுகள் சரிசெய்யும் நடவடிக்கையும், புதிய தொழில்நுட்பங்களையும் மேம்படுத்தும் முயற்சியும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், 2021 மற்றும் 2022ஆம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களில் கண்டறியப்பட்ட குறைபாடுகள் தற்போது சரிசெய்யப்பட்டுவிட்டதாகவும், 2023ஆம் ஆண்டு விற்பனை செய்யப்பட்ட கார்கள் பெட்ரோல் கார்களைவிட 21 சதவிகித கூடுதல் பிரச்னைகளை மட்டுமே சந்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com