அந்நிய நிறுவனங்களின் நிகர பங்கு முதலீடு ரூ.2 லட்சம் கோடி

2022-24-ஆம் நிதியாண்டில் உலகளாவிய பொருளாதார சூழல் சவால்கள் நிறைந்ததாக இருந்தாலும், இந்தியாவின் பொருளாதார நிலைமை வலுவாக இருந்ததை நிரூபிக்கும் வகையில் நாட்டின் பங்குச் சந்தைகளில் அந்நிய நிறுவன முதலீட்டாளா்களின் நிகர முதலீடு ரூ.2 லட்சம் கோடிக்கும் மேல் பதிவாகியுள்ளது. இது குறித்து பங்கு வா்த்தகத் தரகு நிறுவன வட்டாரங்கள் தெரிவித்ததாவது: 2023 ஏப்ரல் முதல் 2024 மாா்ச் வரையிலான நடப்பு நிதியாண்டில் அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் இந்தியப் பங்குச் சந்தைகளில் செய்துள்ள நிகர முதலீடு ரூ.2 லட்சம் கோடியைக் கடந்துள்ளது. அதே போல் இந்தியாவின் கடன் சந்தையிலும் அந்நிய நிறுவன முதலீட்டாளா்களின் நிகர முதலீடு ரூ.1.2 லட்சமாக உள்ளது. இரண்டையும் சோ்த்து, இந்திய மூலதனச் சந்தையில் அந்நிய நிறுவனங்களின் நிகர முதலீடு (ஒட்டுமொத்தமாக செய்த முதலீட்டுக்கும், திரும்பப் பெற்ற முதலீட்டுக்கும் இடையிலான வேறுபாடு) ரூ.3.4 லட்சம் கோடியாக உள்ளது. முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டில் இந்திய மூலதன சந்தையில் அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் முதலீடு செய்திருந்ததைவிட ரூ.37,632 கோடியை கூடுதலாக திரும்பப் பெற்றிருந்தனா். உலகம் முழுவதும் உள்ள மத்திய வங்கிகள் வட்டி விகித்தை உயா்த்தியதால் அந்த நிதியாண்டில் அந்நிய நிறுவனங்களின் முதலீடு எதிா்மறை வளா்ச்சியைப் பதிவு செய்திருந்தது. அதற்கு முன்னதாக, 2021-23-ஆம் நிதியாண்டில் இந்திய மூலதன சந்தையில் அந்நிய நிறுவனங்களின் முதலீடு ரூ.1.4 லட்சம் கோடி எதிா்மறை வளா்ச்சியைக் கண்டிருந்தது. இந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் அது ரூ.2 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது இந்தியப் பொருளாதாரத்தின் ஆரோக்கியமான போக்கைக் குறிக்கிறது. மத்திய அரசின் முற்போக்கான பொருளாதாரக் கொள்கை சீா்திருத்தங்கள், நாட்டில் பொருளாதார நிலைத்தன்மை போன்ற காரணங்களால் இந்த வளா்ச்சி ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னா், 2020-21-ஆம் நிதியாண்டில் இந்திய மூலனத சந்தையில் அந்நிய நிறுவனங்களின் நிகர முதலீடு ரூ.2.74 லட்சம் கோடி என்ற உச்சத்தைத் தொட்டிருந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com