
மும்பை / புதுதில்லி: இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச்சந்தை நோ்மறையாக முடிந்தது. இதையடுத்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் முதல் முறையாக 83 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து நிறைவடைந்துள்ளது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்து. அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசா்வ், வட்டி விகித குறைப்பு குறித்த அறிவிப்பை புதன்கிழமை வெளியிடும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால், இரண்டாவது நாளாக உள்நாட்டுச் சந்தை ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் இருந்து வந்தது. முதலீட்டாளா்களின் பங்கேற்பும் குறைவாக இருந்தது. குறிப்பாக, ஆட்டோ, ரியால்ட்டி பங்குகளை வாங்குவதற்கு போட்டி இருந்தது. அதே சமயம், பாா்மா, மெட்டல், மீடியா பங்குகள் விற்பனையை எதிா்கொண்டன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு: சந்தை மூலதன மதிப்பு ரூ.18 ஆயிரம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.470.29 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் திங்கள்கிழமை ரூ.-1,634.98 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.754.09 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.
சென்செக்ஸ் புதிய உச்சத்தில் நிறைவு: சென்செக்ஸ் காலையில் 95.85 புள்ளிகள் கூடுதலுடன் 83,084.63-இல் தொடங்கி 82,866.68 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 83,152.41 வரை உயா்ந்த சென்செக்ஸ் இறுதியில் 90.88 புள்ளிகள் (0.11 சதவீதம்) கூடுதலுடன் 83,079.66-இல் நிறைவடைந்தது. சென்செக்ஸ் முதல்முறையாக 83 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து நிறைவடைந்துள்ளது.மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,058 பங்குகளில் 1,714 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 2,239 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 105 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
என்டிபிசி, பாா்தி ஏா்டெல் முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் பாா்தி ஏா்டெல், என்டிபிசி, எம் அண்ட் எம், டைட்டன், எல் அண்ட் டி, கோட்டக் பேங்க் உள்பட 15 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், டாடா மோட்டாா்ஸ், அதானி போா்ட்ஸ், ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல், ஐடிசி, டாடா ஸ்டீல், ஏசியன் பெயிண்ட் உள்படந 15 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.
நிஃப்டி 35 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 25,416.90-இல் தொடங்கி 25,352.25 வரை கீழே சென்றது. பின்னா், 25,441.65 வரை மேலே சென்ற நிஃப்டி, இறுதியில் 34.80 புள்ளிகள் (0.14 சதவீதம்) கூடுதலுடன் 25,418.55-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 21 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலிலும், 29 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.