
கடந்த ஒரு சில நாள்களாக விலை குறைவது போல போக்குக் காட்டி வந்த தங்கம் விலையானது, குறைந்த வேகத்தில் இன்று இரண்டு முறை உயர்ந்துள்ளது.
புதன்கிழமை காலையில் வணிகம் தொடங்கியதும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்த நிலையில் இன்று வணிகம் நிறைவடையும் போது மீண்டும் சவரனுக்கு ரூ.960 உயர்ந்துள்ளது.
இதன் மூலம், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை ரூ.8,410-ஆகவும் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.67,280 ஆகவும் உயர்ந்துள்ளது. நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.65,800க்கு விற்பனையான நிலையில், ஒரே நாளில் ரூ.1,480 வரை உயர்ந்திருப்பது இன்று மாலை கடைக்குச் சென்று தங்கம் வாங்கலாம் என்று நினைத்திருந்தவர்களுக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
கடந்த 4 நாள்களில் சவரனுக்கு ரூ.2,680 குறைந்த நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும், கிராமுக்கு ரூ.65 அதிகரித்து ஒரு கிராம் ரூ.8,290-க்கும் சவரனுக்கு ரூ.520 அதிரித்து ஒரு சவரன் ரூ.66,320-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் தங்கம் விலை இன்று இரண்டாவது முறையாக மீண்டும் சவரனுக்கு ரூ.960 உயர்ந்துள்ளது. இதன் மூலம், ஒரே நாளில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,480 என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது.
சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.104க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை கடந்த ஏப்.4 முதல் குறைந்துகொண்டே வந்தது. இதனால், இல்லத்தரசிகளும் மக்களும் சற்று நிம்மதியடைந்த நிலையில், மேலும் குறையுமா என்று எதிர்பார்த்து வந்த நிலையில், எதிர்மாறாக, 5 நாள்களுக்குப் பின்னர் மீண்டும் தங்கம் விலை உயரத் தொடங்கியுள்ளது.
அதாவது ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி தங்கம் விலை குறையத் தொடங்கியது. ஏப்.4-இல் சவரனுக்கு ரூ.1,280 குறைந்து ரூ.67,200-க்கும், ஏப்.5-இல் சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.66,480-க்கும், ஏப்.7-ல் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.66,280-க்கும், ஏப்.8-ல் சவரனுக்கு ரூ. 480 குறைந்து ரூ.65,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கடந்த 4 நாள்களில் சவரனுக்கு ரூ.2,680 குறைந்த நிலையில், இன்றைய வர்த்தகத்தின்போது ரூ.1,480 அளவுக்கு உயர்ந்துவிட்டது.