
பங்குச்சந்தை இன்று(ஏப்ரல் 9) சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.
கடந்த திங்கள்கிழமை(ஏப். 7) பங்குச்சந்தை வரலாறு காணாத அளவுக்கு சரிவைச் சந்தித்தது. சென்செக்ஸ் 4,000 புள்ளிகள் வரை சரிந்தன. இதனால் அன்றைய தினம் ரூ. 14 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டது. பல்வேறு நாடுகளின் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வரி விதிப்பு இதற்கு முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது.
இதையடுத்து நேற்று(செவ்வாய்) பங்குச்சந்தை ஏற்றமடைந்த நிலையில் இன்று(புதன்கிழமை) மீண்டும் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 74,103.83 என்ற புள்ளிகளில் தொடங்கியது.
பிற்பகல் 1.10 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 327.38 புள்ளிகள் சரிந்து 73,899.70 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 109.40 புள்ளிகள் குறைந்து 22,426.45 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
ஹெச்டிஎப்சி வங்கி, பிஎஸ்இ லிமிடெட், ஐசிஐசிஐ வங்கி, ராமகிருஷ்ணா ஃபோர்ஜிங், முத்தூட் ஃபைனான்ஸ் ஆகியவை நிஃப்டியில் லாபம் கண்டன. விப்ரோ, ட்ரெண்ட், டெக் மஹிந்திரா நஷ்டமடைந்தன.
சென்செக்ஸ் பங்குகளில் நெஸ்லே, ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், டைட்டன், பவர் கிரிட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தன. அதேநேரத்தில் டெக் மஹிந்திரா, எஸ்பிஐ, இன்போசிஸ், டாடா ஸ்டீல் ஆகியவை நஷ்டத்தைச் சந்தித்துள்ளன.
பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் தலா 1 சதவீதம் சரிந்தன. ஆட்டோ மற்றும் நுகர்வோர் பொருள்கள் துறை தவிர, மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் சரிவில் வர்த்தகமாகி வருகின்றன.
இதையும் படிக்க | ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைப்பு! - இந்திய ரிசர்வ் வங்கி