
இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி கடந்த 2024-25-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-பிப்ரவரி காலகட்டத்தில் 24.08 கோடி டன்னாகக் குறைந்துள்ளது.
இது குறித்து மத்திய நிலக்கரித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 2024 ஏப்ரல் முதல் 2025 மாா்ச் வரையிலான காலகட்டத்தில் நாட்டின் நிலக்கரி இறக்குமதி 24.08 கோடி டன்னாக உள்ளது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 1.4 சதவீதம் அதிகம். அப்போது இந்தியா 24.43 கோடி டன் நிலக்கரி இறக்குமதி செய்தது.
மதிப்பீட்டு காலகட்டத்தில் கோகிங் அல்லாத நிலக்கரியின் இறக்குமதி 15.23 கோடி டன்னாகக் குறைந்தது. இது, முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 16.06 கோடி டன்னாக இருந்தது. 2024-25-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-பிப்ரவரி காலகட்டத்தில் கோகிங் நிலக்கரி இறக்குமதி 5.19 கோடி டன்னில் இருந்து 4.97 கோடி டன்னாகக் குறைந்தது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 1.81 கோடி டன்னாகக் குறைந்தது. இது கடந்த ஆண்டு பிப்ரவரியில் 2.164 கோடி டன்னாக இருந்தது.மாதாந்திர அடிப்படையில், 2025 பிப்ரவரியில் நிலக்கரி இறக்குமதி 15.3 சதவீதம் குறைந்துள்ளது.
இது ஜனவரி மாதத்தில் 2.14 கோடி டன்னாக இருந்தது.2025 பிப்ரவரி மாத ஒட்டுமொத்த இறக்குமதியில், கோகிங் அல்லாத நிலக்கரியின் பங்களிப்பு 1.11 கோடி டன்னாக இருந்தது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் இது 1.38 கோடி டன்னாக இருந்தது. கோகிங் நிலக்கரி இறக்குமதி 0.46 கோடி டன்னில் இருந்து 0.38 கோடி டன்னாகக் குறைந்தது.
சந்தையின் தேவைக்கு ஏற்ப மதிப்பீட்டு காலகட்டத்தில் இறக்குமதி குறைந்தது. கோடைக் காலம் தொடங்கி மின்சார தேவை அதிகரிக்கும் வரை இந்த போக்கு தொடரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி 2024-25-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-பிப்ரவரி காலகட்டத்தில் 92.895 கோடி டன்னாக உயா்ந்தது. இது 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 87.855 கோடி டன்னாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.