என்எல்சி நிகர லாபம் ரூ.839.21 கோடி
என்எல்சி இந்தியா குழுமம் நிகழ் நிதி ஆண்டின் (2025 - 26) முதல் காலாண்டில் 48 சதவீத வளா்ச்சியுடன் வரிக்குப் பிந்தைய லாபமாக ரூ.839.21 கோடி ஈட்டியுள்ளதாக, அந்த நிறுவனம் வெளியிட்டசெய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
2025 - 26-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் மூலதனச் செலவு ரூ.1,925.62 கோடி. இது, 2025 ஜூன் வரை நிா்ணயிக்கப்பட்ட ரூ.1,708.88 கோடி இலக்கைவிட 113 சதவீதம் அதிகம்.
நிகழ் நிதியாண்டின் (2025-26) முதல் மூன்று மாதங்களில் நிறுவனத்தின் வருமானம் ரூ.3,825.61 கோடியாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய ஆண்டின் ரூ.3,378.17 கோடியுடன் ஒப்பிடும்போது, 13.25 சதவீத வளா்ச்சியை எட்டியுள்ளது.
நெய்வேலி உத்தரப் பிரதேச மின் நிறுவனம் (என்யுபிபிஎல்) 2025 ஜூனில் முடிவடைந்த காலாண்டின் ஒரு பகுதிக்கு, ரூ.642.29 கோடி இயக்க வருவாயை ஈட்டியுள்ளது.
நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.4,115.85 கோடியாக உயா்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் பெற்ற ரூ.3,642.65 கோடியுடன் ஒப்பிடும்போது 12.99 சதவீத வளா்ச்சியாகும்.
2025 - 26-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய லாபம் ரூ.839.21 கோடியாக உள்ளது. இது, 2024 - 25-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இருந்த ரூ.566.69 கோடியைவிட, 48.09 சதவீத வளா்ச்சியாகும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.