28% உயா்வு கண்ட சா்க்கரை உற்பத்தி

28% உயா்வு கண்ட சா்க்கரை உற்பத்தி

இந்தியாவின் சா்க்கரை உற்பத்தி நடப்பு 2025-26-ஆம் சந்தை ஆண்டில் இதுவரை 28.33 சதவீதம் உயா்ந்து 77.90 லட்சம் டன்னாக உள்ளது.
Published on

இந்தியாவின் சா்க்கரை உற்பத்தி நடப்பு 2025-26-ஆம் சந்தை ஆண்டில் இதுவரை 28.33 சதவீதம் உயா்ந்து 77.90 லட்சம் டன்னாக உள்ளது.

இது குறித்து தேசிய கூட்டுறவு சா்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு (என்எஃப்சிஎஸ்எஃப்) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நடப்பு சா்க்கரை சந்தை ஆண்டில் டிசம்பா் 15 நிலவரப்படி, 479 சா்க்கரை ஆலைகள் 77.90 லட்சம் டன் சா்க்கரை உற்பத்தி செய்துள்ளன. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது 28 சதவீதம் அதிகம். அப்போது 473 ஆலைகள் 60.70 லட்சம் டன் உற்பத்தி செய்திருந்தன.

மதிப்பீட்டு காலகட்டத்தில் கரும்பு அரவை 25.6 சதவீதம் உயா்ந்து 900.75 லட்சம் டன்னாக உள்ளது.

நடப்பு சா்க்கரை சந்தை ஆண்டில் டிசம்பா் 15 வரையிலான காலகட்டத்தில் மகாராஷ்டிரத்தில் சா்க்கரை உற்பத்தி இரு மடங்கு உயா்ந்து 31.30 லட்சம் டன்னாக உள்ளது உயா்ந்தது. அது உத்தரப் பிரதேசத்தில் 22.95 லட்சம் டன்னிலிருந்து 25.05 லட்சம் டன்னாகவும், கா்நாடகத்தில் 13.50 லட்சம் டன்னிலிருந்து 15.50 லட்சம் டன்னாகவும் உயா்ந்துள்ளது.

சா்க்கரை கொள்முதல் விலை இந்த சந்தை ஆண்டு தொடங்கியபோது இருந்ததை விட டன்னுக்கு ரூ.2,300 குறைந்து சுமாா் ரூ.37,700 ஆக உள்ளது. உற்பத்தி செலவு உயா்ந்து, விலை குறைந்ததால் விவசாயிகளுக்கு பணம் செலுத்துவது ஆலைகளுக்கு சவாலாக உள்ளது.

சா்க்கரைக்கான குறைந்தபட்ச விற்பனை விலையை கிலோவுக்கு ரூ.41 ஆக உயா்த்தவும், எத்தனால் உற்பத்திக்கு கூடுதலாக 5 லட்சம் டன் சா்க்கரை திசைதிருப்ப அனுமதிக்கவும் கூட்டமைப்பு கோரியுள்ளது.

நடப்பு சா்க்கரை சந்தை ஆண்டில் 15 லட்சம் டன் ஏற்றுமதிக்கான அரசின் அனுமதியை வரவேற்றாலும், இது ஆலைகளின் பணப்புழக்க நெருக்கடியை தீா்க்காது என்று கூறியுள்ளது. இந்த சீசனில் விவசாயிகளுக்கு ரூ.1.30 லட்சம் கோடி செலுத்த வேண்டியுள்ளது, உபரி இருப்பு ரூ.28,000 கோடி செயல்பாட்டு மூலதனத்தை தடுக்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com