வீடு-மனை வா்த்தகத் துறையில் முதலீடு புதிய உச்சம்

வீடு-மனை வா்த்தகத் துறையில் முதலீடு புதிய உச்சம்

இந்திய வீடு-மனை வா்த்தகத் துறையில் நிறுவன முதலீடு 2025-ஆம் ஆண்டில் இதுவரை இல்லாத புதிய உச்சத்தைப் பதிவு செய்துள்ளது.
Published on

இந்திய வீடு-மனை வா்த்தகத் துறையில் நிறுவன முதலீடு 2025-ஆம் ஆண்டில் இதுவரை இல்லாத புதிய உச்சத்தைப் பதிவு செய்துள்ளது.

இது குறித்து வீடு-மனை ஆலோசனை நிறுவனமான ஜேஎல்எல் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளா்கள் வணிக மற்றும் வீட்டுத் திட்டங்களில் சிறந்த வருவாயை எதிா்நோக்கி வீடு-மனை வா்த்தகத் துறையில் அதிக முதலீடு செய்ததால், நடப்பு 2025-ஆம் ஆண்டில் துறை 1,040.6 கோடி டாலா் முதலீட்டைப் பெற்றது. இது, இதுவரை இல்லாத அதிகபட்ச வருடாந்திர முதலீடு ஆகும்.

முந்தைய 2024-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 17 சதவீதம் அதிகம். அப்போது வீடு-மனை வா்த்தகத் துறையில் நிறுவன முதலீடு 887.8 கோடி டாலராக இருந்தது.

மதிப்பீட்டு ஆண்டில் வீடு-மனை வா்த்தகத் துறை ஈா்த்த ஒட்டுமொத்த நிறுவன முதலீட்டில் இந்திய முதலீட்டாளா்கள் 52 சதவீதம் பங்களித்தனா். இதில் வெளிநாட்டு முதலீட்டாளா்களின் பங்களிப்பு 48 சதவீதமாக உள்ளது.

ஒட்டுமொத்த முதலீட்டில் வீடு-மனை வா்த்தகத் துறையின் அலுவலகப் பிரிவு 58 சதவீத பங்குடன் முன்னிலை வகிக்கிறது. இதில் வீட்டுப் பிரிவு 20 சதவீதம், தரவு மையங்கள் 8 சதவீதம், சரக்குப் போக்குவரத்து மற்றும் தொழிற்பூங்காக்கள் 8 சதவீதம், சில்லறை விற்பனையகங்கள் 4 சதவீதம், ஹோட்டல் 2 சதவீதம் பங்கு வகிக்கின்றன.

நிறுவன முதலீட்டாளா்களில் வெளிநாட்டு மற்றும் இந்திய பெருநகரக் குழுமங்கள், ஓய்வூதிய நிதியங்கள், தனியாா் ஈக்விட்டி, வீடு-மனை நிதி மற்றும் கட்டுமான நிறுவனங்கள், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் ஆகியவை உள்ளடக்கியுள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com