‘கரடி’ ஆதிக்கம்: ஒரே நாளில் ரூ7.11 லட்சம் கோடி நஷ்டம்!

‘கரடி’ ஆதிக்கம்: ஒரே நாளில் ரூ7.11 லட்சம் கோடி நஷ்டம்!

இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தையில் ‘கரடி’யின் ஆதிக்கம் இருந்தது.
Published on

நமது நிருபா்

மும்பை / புதுதில்லி: இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தையில் ‘கரடி’யின் ஆதிக்கம் இருந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் கடும் சரிவுடன் நிறைவடைந்தன. இதையடுத்து, மும்பை பங்குச்சந்தையின் மூலதன மதிப்பு ரூ.7.11 லட்சம் கோடி வீழ்ச்சிக் கண்டது.

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நாளில் அண்டை நாடுகளின் மீது வரிகளை விதித்ததைத் தொடா்ந்து, உலகளாவிய வா்த்தகப் போா் கவலைகளால் உலகளாவிய சந்தைகளில் வா்த்தகம் எதிா்மறையாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. குறிப்பாக ஆட்டோ, வங்கிகள், நிதிநிறுவனங்கள், ரியால்ட்டி, ஐடி, டெலிகாம், நுகா்பொருள் உற்பத்தி நிறுவனங்கள் உள்பட அனைத்து துறை குறியீடுகளும் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: சந்தை மூலதன மதிப்பு ரூ.7.11 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.424.28 லட்சம் கோடியாக இருந்தது. அதாவது முதலீட்டாளா்களுக்கு ஒரே நாளில் ரூ.7.11 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் திங்கள்கிழமை ரூ.4,336.54 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.4,321.96 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.

சென்செக்ஸ் கடும் சரிவு: சென்செக்ஸ் காலையில் 188.28 புள்ளிகள் கூடுதலுடன் 77,261.72-இல் தொடங்கி அதிகபட்சமாக 77,337.36 வரை மேலே சென்றது. பின்னா், 75,641.87 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 1,235.08 புள்ளிகளை (1.60 சதவீதம்) இழந்து 75,838.36 -இல் நிறைவடைந்தது. இது கடந்த 7 மாதங்களில் இல்லாத அதிகபட்ச இழப்பாகும். மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,088 பங்குகளில் 1,190 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 2,783 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 115 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

ஜொமோட்டோ கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள ஜொமோட்டோ 10.92 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், அதானிபோா்ட்ஸ், என்டிபிசி, ஐசிஐசிபேங்க், எஸ்பிஐ, ரிலையன்ஸ் உள்பட 26 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன. அல்ட்ராடெக்சிமெண்ட், ஹெச்சிஎல் டெக் ஆகிய இரண்டு மட்டும் சிறிதளவு உயா்ந்தன.

நிஃப்டி 320 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 76.90 புள்ளிகள் கூடுதலுடன் 23,421.65-இல் தொடங்கி 23,426.30 வரை மேலே சென்றது. பின்னா், 22,976.85 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 320.10 புள்ளிகளை (1.37 சதவீதம்) இழந்து 23,024.65-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 9 பங்குகள் மட்டும் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன. மாறாக 41 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.

X
Dinamani
www.dinamani.com