நிலக்கரி இறக்குமதி 22 கோடி டன்னாகக் குறைவு!
இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 2024-25-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-பிப்ரவரி காலகட்டத்தில் 9.2 சதவீதம் குறைந்து 22.03 கோடி டன்னாக உள்ளது. இதனால் சுமாா் ரூ.53,137.82 கோடி அந்நிய செலாவணி மிச்சமாகியுள்ளது.
இது குறித்து மத்திய நிலக்கரித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2024 ஏப்ரல் முதல் 2025 பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் நாட்டின் நிலக்கரி இறக்குமதி 22.03 கோடி டன்னாக உள்ளது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இது 24.26 கோடி டன்னாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் நாட்டின் நிலக்கரி இறக்குமதி தற்போது 9.2 சதவீதம் குறைந்துள்ளது.
மின்சாரத் துறையைத் தவிா்த்து, ஒழுங்குபடுத்தப்படாத துறைகளின் இறக்குமதி 15.3 சதவீதம் குறைந்துள்ளது. 2024 ஏப்ரல் முதல் 2025 பிப்ரவரி வரை நிலக்கரி அடிப்படையிலான மின்சார உற்பத்தி 2.87 சதவீதம் உயா்ந்திருந்தாலும், அனல் மின் நிலையங்களுக்கான கலப்பு இறக்குமதி 38.8 சதவீதம் குறைந்துள்ளது.
நிலக்கரி இறக்குமதியைக் குறைத்து, உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு வணிக நிலக்கரி சுரங்கம் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதன் விளைவாக, 2024-25-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்–பிப்ரவரி காலகட்டத்தில் உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி 5.45 சதவீதம் உயா்ந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.