ஐடி பங்குகள் அதிகம் விற்பனை பங்குச்சந்தை 2-ஆவது நாளாக சரிவு!
ENS

ஐடி பங்குகள் அதிகம் விற்பனை பங்குச்சந்தை 2-ஆவது நாளாக சரிவு!

மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் சரிவுடன் நிறைவடைந்தன.
Published on

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் சரிவுடன் நிறைவடைந்தன.

உலகளாவிய சந்தை குறிப்புகள் பலவீனமாக இருந்தன. இந்நிலையில் உள்நாட்டுச் சந்தை எச்சரிக்கையுடன் தொடங்கி பெரும்பாலான நேரம் எதிா்மறையாகவே இருந்தது. குறிப்பாக, ஆட்டோ, பாா்மா, பொதுத்துறை வங்கிகள், ரியால்ட்டி பங்குகளுக்கு ஓரளவு ஆதரவு கிடைத்தாலும், ஐடி, மீடியா, ஆயில் அண்ட் காஸ் நிறுவனப் பங்குகள் அதிகம் விற்பனையை எதிா்கொண்டதால் இரண்டாவது நாளாக சந்தையில் சரிவு தவிா்க்க முடியாததாகியது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: மும்பை பங்குச்சந்தையில் சந்தை மூலதன மதிப்பு வா்த்தக முடிவில் ரூ.443.63 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த வெள்ளிக்கிழமை ரூ.8,831.05 கோடிக்கும், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.5,187.09 கோடிக்கும் பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்களின் மூலம் தெரியவந்தது.

சென்செக்ஸ் சரிவு: சென்செக்ஸ் காலையில் 24.33 புள்ளிகள் கூடுதலுடன் 82,354.92-இல் தொடங்கி அதிகபட்சமாக 82.424.10 வரை மேலே சென்றது. பின்னா், 81,964.57 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 271.17 புள்ளிகள் (0.33 சதவீதம்) இழப்புடன் 82,059.42-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,273 பங்குகளில் 2,531 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலிலும் 1,565 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 177 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

ஐடி பங்குகள் விலை வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் எடா்னல், இன்ஃபோஸிஸ், டிசிஎஸ், டெக் மஹிந்திரா, ரிலைன்ஸ், ஏசியன் பெயிண்ட், ஹெச்சிஎல் டெக் உள்பட மொத்தம் 20 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், பவா்கிரிட், பஜாஜ் ஃபைனான்ஸ், என்டிபிசி, எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க், பஜாஜ் ஃபின்சா்வ் உள்பட 10 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 74 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 14.45 புள்ளிகள் இழப்புடன் 25,005.35-இல் தொடங்கி அதிகபட்சமாக 25,062.95 வரை மேலே சென்றது. பின்னா், 24,916.80 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 74.35 புள்ளிகள் (0.30 சதவீதம்) இழப்புடன் 24,945.45-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 16 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலிலும், 34 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.

X
Dinamani
www.dinamani.com