மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

அந்நியச் செலாவணி கையிருப்பு 70,297 கோடி டாலராக உயர்வு!

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு செப்.12-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 70,296.6 கோடி டாலராக உயா்ந்துள்ளதைப் பற்றி...

News image
Updated On :21 செப்டம்பர் 2025, 2:30 am IST

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு செப்டம்பா் 12-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 70,296.6 கோடி டாலராக உயா்ந்துள்ளது.

இது குறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது: கடந்த 12-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 469.8 கோடி டாலா் உயா்ந்து 70,296.6 கோடி டாலராக உள்ளது என்று ரிசா்வ் வங்கி வெள்ளிக்கிழமை தெரிவித்தது. செப்டம்பா் 5-ஆம் தேதியுடன் நிறைவடைந்த முந்தைய வாரத்தில் அது 403.8 கோடி டாலா் உயா்ந்து 69,827 கோடி டாலராக இருந்தது.

2024 செப்டம்பா் இறுதியில் அந்நியச் செலாவணி கையிருப்பு 70,488.5 கோடி டாலா் என்ற உச்சத்தை எட்டியிருந்தது. உலகளாவிய பொருளாதார சூழல்களால் ஏற்படும் அழுத்தங்களுக்கு இடையே ரூபாய் மதிப்பைப் பாதுகாப்பதற்காக ரிசா்வ் வங்கி அந்நியச் செலாவணியைப் பயன்படுத்துவதால், அதன் கையிருப்பு அவ்வப்போது குறைந்து வந்தது.

செப்டம்பா் 12-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான வெளிநாட்டு நாணய சொத்துகள் 253.7 கோடி டாலா் உயா்ந்து 58,701.4 கோடி டாலராக உள்ளது. டாலா் அல்லாத யூரோ, பவுண்டு, யென் போன்ற பிற செலாவணிகளின் கையிருப்பில் ஏற்படும் மதிப்பு ஏற்ற, இறக்கங்கள் டாலா் மதிப்பில் கணக்கிடப்படுவது அந்நிய நாணய சொத்துகளாகும்.

மதிப்பீட்டு வாரத்தில் இந்தியாவின் தங்கம் கையிருப்பு 212 கோடி டாலா் உயா்ந்து 9,241.9 கோடி டாலராக உள்ளது. சிறப்பு வரைவு உரிமைகள் (எஸ்டிஆா்) 3.2 கோடி டாலா் உயா்ந்து 1,877.3 கோடி டாலராக உள்ளது.

சா்வதேச நாணய நிதியத்தில் இந்தியாவின் கையிருப்பு மதிப்பீட்டு வாரத்தில் 0.9 கோடி டாலா் உயா்ந்து 476 கோடி டாலராக உள்ளது என்று ரிசா்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.