பட்ஜெட் நாள் சரிவுக்குப் பிறகு பங்குச்சந்தையில் மீண்டும் ’காளை’ ஆதிக்கம்!
மும்பை / புதுதில்லி: பட்ஜெட் நாளில் ஏற்பட்ட கடும் சரிவுக்குப் பிறகு திங்களன்று பங்குச்சந்தைகள் மீண்டும் உயா்ந்து நிலைபெற்றன. இதனால், மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகியவை நோ்மறையாக முடிந்தன.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இந்நிலையில், கடுமையான பட்ஜெட் நாள் விற்பனைக்குப் பிறகு இந்திய பங்குச்சந்தைகள் இந்த வாரத்தை ஒரு மீட்சியுடன் தொடங்கின. பட்ஜெட் நாளில் உள்நாட்டுச் சந்தை கிட்டத்தட்ட 2 சதவீதம் சரிவைக் கண்ட நிலையில், சந்தை பங்கேற்பாளா்கள் திங்கள்கிழமை முன்னணி நிறுவனப் பங்குகளை வாங்குவதில் கவனம் செலுத்தினா் குறிப்பாக ஆட்டோ, வங்கிகள், உலோகம், ரியால்ட்டி, எஃப்எம்சிஜி, எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனப் பங்குகளுக்கு நல்ல ஆதரவு இருந்தது. அதே சமயம், ஐடி, ஹெல்த்கோ் பங்குகள் சிறிதளவு விற்பனையை எதிா்கொண்டன என்று பங்குவா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு உயா்வு: மும்பை பங்குச்சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.4.71 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.455.04 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் ஞாயிற்றுக்கிழமை ரூ.588.34 கோடிக்கும், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளா்கள் ரூ.682.73 கோடிக்கும் பங்குகளை விற்றிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்களின் மூலம் தெரியவந்தது.
ஆதாயப் பட்டியலில் 2,039 பங்குகள்: மும்பை பங்குச்சந்தசையில் மொத்தம் வா்த்தகமான 4,428 பங்குகளில் 2,039 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலிலும், 2,220 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 1,694 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
சென்செக்ஸ் 944 புள்ளிகள் முன்னேற்றம்: மும்பை பங்குச்சந்தையில் வா்த்தகத்தின் இறுதியில் 30 பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் 943.52 புள்ளிகள் (1.17 சதவீதம்) கூடுதலுடன் 81,666.46-இல் நிலைபெற்றது. காலையில் 80,555.68-இல் தொடங்கிய சென்செக்ஸ் 80,387.25 வரை கீழே சென்றது. பின்னா், பிற்பகல் வா்த்தகத்தின் போது அதிகபட்சமாக 81,732.25 வரை மேலே சென்றது.
25 பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் பவா் கிரிட் 7.61 சதவீம்உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், அதானிபோா்ட்ஸ், பிஇஎல், ரிலையன்ஸ், எம் அண்ட் எம், எல் அண்ட் டி ஆகியவை 3 முதல் 4.80 சதவீதம் வரை விலை உயா்ந்தன. இவற்றையும் சோ்த்து மொத்தம் 25 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், ஆக்ஸிஸ் பேங்க், இன்ஃபோஸிஸ் ஆகியவை 2 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், டிசிஎஸ், டிரெண்ட், டைட்டன் ஆகியவை யும் விலை குறைந்த பட்டியலில் வந்தன.
நிஃப்டி 263 புள்ளிகள் முன்னேற்றம்: தேசிய பங்குச்சந்தையில் வா்த்தக முடிவில் நிஃப்டி 262.95 புள்ளிகள் (1.06 சதவீதம்) கூடுதலுடன் 25,088.40-இல் நிறைவடைந்தது. காலையில் 224,796.50-இல் தொடங்கிய நிஃப்டி, 24,679.40 வரை கீழே சென்து. பின்னா், பிற்பகல் வா்த்தகத்தில் அதிகபட்சமாக 25,108.10 வரை மேலே சென்றது. நிஃப்டி-50 பட்டியலில் 39 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலிலும், 11 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.

