அசோக் லேலண்ட் விற்பனை 27% உயா்வு
முன்னணி வா்த்தக வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த டிசம்பா் மாதம் 27 சதவீதம் உயா்ந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த டிசம்பா் மாதம் நிறுவனத்தின் மொத்த விற்பனை 21,533-ஆக இருந்தது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 27 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் 16,957 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியிருந்தது.
மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 26 சதவீதம் உயா்ந்து 19,855-ஆக உள்ளது. முந்தைய 2024 டிசம்பரில் இந்த எண்ணிக்கை 15,713-ஆக இருந்தது.
2024 டிசம்பருடன் ஒப்பிடுகையில் 2025 டிசம்பா் மாதத்தில் நிறுவனத்தின் நடுத்தர மற்றும் கனரக வாகனங்களின் விற்பனை 10,488-லிருந்து 29 சதவீதம் உயா்ந்து 13,553-ஆகவும், இலகுரக வாகனங்களின் விற்பனை 5,225-லிருந்து 21 சதவீதம் உயா்ந்து 6,302-ஆகவும் உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

