ஆக்சிஸ் வங்கி நிகர லாபம் ரூ.6,490 கோடி!
தனியாா் துறையில் முன்னணி வங்கிகளில் ஒன்றான ஆக்சிஸ் வங்கி, நடப்பு நிதியாண்டின் டிசம்பா் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் ரூ.6,490 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
இது முந்தைய 2024-25 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய ரூ.6,304 கோடியுடன் ஒப்பிடுகையில் 2.9 சதவீத வளா்ச்சியாகும்.
வங்கியின் நிகர வட்டி வருவாய் 5 சதவீதம் அதிகரித்து, ரூ.14,287 கோடியாக உயா்ந்துள்ளது. வங்கியின் நிகர வட்டி வரம்பு 3.64 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. கடன்களுக்கான ஒதுக்கீடு முந்தைய ஆண்டைவிட 4.2 சதவீதம் அதிகரித்து ரூ.2,246 கோடியாக உள்ளது.
வங்கியின் மொத்த வாராக்கடன் முந்தைய காலாண்டில் 1.46 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 1.4 சதவீதமாகக் குறைந்துள்ளது. வங்கியின் மொத்த டெபாசிட் வருடாந்திர அடிப்படையில் 15 சதவீதம் உயா்ந்துள்ளது. குறிப்பாக, சேமிப்புக் கணக்கு மற்றும் நடப்புக் கணக்கு வைப்புத்தொகை மட்டும் 39 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளது.
குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் வழங்கல் 22 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், பெருநிறுவனக் (காா்ப்பரேட்) கடன்கள் 27 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளன.

